நீங்களுமா நிதிஷ்

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஒரு மிகப் பெரிய கேள்வி அரசியல் தளத்தில் தொக்கி நின்றது. பாஜகவின் மெகா வெற்றிக்குப் பின் யார் மோடியை அரசியல் ரீதியாக கேள்வி கேட்க முடியும் என்பது அது. ஒரு ஜனநாயக அமைப்பில் எதிர் வரிசையில் அமரும் கட்சியின் செயல்பாடு மிகவும் அவசியம். ஜனநாயகத்தின் வெற்றியே எதிர் கட்சிகளின் செயல் திறமையில் தான் உள்ளது என்பது உலக உண்மை. சிறந்த தலைமையின் வெற்றிடம் மற்றும் உட்க்கட்சி விவகாரங்களால் மிகப் பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் சுணங்க ஆரம்பித்த நேரம் அது.
மோடியை அரசியல் ரீதியாக யார் கேள்வி கேட்க முடியும் என்கின்ற கேள்விக்கு பதிலாக பல்வேறு பெயர்கள் முன் வைக்கப் பட்டாலும், பல்வேறு அரசியல் பார்வையாளர்களால் மிகவும் பலப்படுத்தப்பட்டவர்கள் மூவர் :
1) ஜெயலலிதா – நாடாளுமன்றத்தில் உள்ள பலம் காரணம், ஆனால் அவர் மறைவுக்குப் பின் நடந்தவைகள் நாம் அனைவரும் அறிவோம்
2) மம்தா பானர்ஜி – அதிரடியான பேச்சு மற்றும் செயல்கள், இப்பொழுது குற்றப் பின்னணிகள் தொடர ஆரம்பித்து விட்டன
3) நிதிஷ் குமார் – துணிச்சலாக மோடியை எதிர்கொண்ட விதம்

இந்த வரிசையில் நிதிஷ் மட்டும் கடந்த 3-4 வருடங்களாக மோடி ஆதரவற்ற அரசியலில் களம் ஊன்றி நின்றார். தூய்மையான அரசியல், தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் நிலைப்பாடு என்கின்ற பல்வேறு கோணங்களில் நிதிஷின்னது நிலைப்பாடுகள் மாநில அளவில் மிக தன்மையாக நிகழ்ந்து கொண்டிருந்த காலம். 2015 நவம்பரில் நடந்த பிஹார் தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், கால்நடைத் தீவன ஊழல் மற்றும் சிறந்த ரயில்வே அமைச்சர் புகழ் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் மாநிலங்களில் தன் வேர்கள் இழந்த காங்கிரஸ் கட்சி இனணந்து மெகா கூட்டணி அமைத்தன. வெற்றி. குறைந்த எம்.எல்.ஏகள் கொண்டிருந்தாலும் நிதிஷ் அவர்களை லாலு முதல்வர் ஆக்கினார்…மீண்டும் சொல்கிறேன் “லாலு நிதிஷ் அவர்களை முதல்வர் ஆக்கினார்“…இதுதான் லாலுவின் சாமர்த்தியம் . அவரால் நேரடியாக முதல்வர் ஆகி மாநிலத்தில் அரசியல் செய்ய முடியாது என்பது அவருக்குத் தெளிவாக தெரியும். லாலுவின் மகன்கள் தேஜ் பிரதாப் – சுகாதாரத் துறை அமைச்சராகவும்,தேஜஸ்வி, துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆட்சியும் கட்சியும் லாலுவின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது. நிதிஷ் லாலுவுடன் கூட்டணி அமைத்த உடன் அவரது செல்வாக்கு சற்று சரிந்தது உண்மை. ஆனால் மோடி என்கின்ற பிரம்மாண்டத்தின் முன் இருந்த வெற்றிடம் நிதிஷின் இந்த முடிவை மக்கள் சற்றே மறக்கும் படிச்செய்தது.

காலங்களும் காட்சிகளிலும் மாறின … அடுத்த நாடளுமன்றத் தேர்தலில் அமையப்போகும் மூன்றாவது கூட்டணிக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கொண்டவர்களில் “நிதிஷ்” பெயர் முதன்மையாக நிற்கும் என்கின்ற அளவிற்கு நிகழ்வுகள் அரங்கேறின. சர்வ வல்லமை படைத்ததாக பிரகணப்படுத்தப் படும் மோடி மாஜிக் பீகாரில் எடுபடவில்லை என்பது தான் இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை…

ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து நிதிஷின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள்… சகாபுதீன் விவகாரம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாராட்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு, பிஹாரில் மதுவிலக்கு அது சார்த்த அரசியல், ஜனாதிபதி பொது வேட்பாளர் தேர்வு என்று ஒவ்வொரு மாதமும் நிதிஷ் மற்றும் லாலுவின் உறவுகளைச் சீரீல்லாத பாதையில் பயணிக்கத்த தொடங்கியது.

இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் சிகரமாக மே மாதம் ஒரு விருந்தில் மோடியை தனியாக நிதிஷ் சந்தித்து பேசினார்…காட்சிகள் அதன் பின்னர் வேகமாக மாற ஆரம்பித்தன.
நேற்று நடந்தது “முடிவுக்காட்சி”.

முதல்வர் பதவி விலகும் நாடகம்… மீண்டும் பாஜக ஆதரவுடன் இன்று மீண்டும் ஆட்சி….

இவ்வளவு நிகழ்வுக்குப் பின்னும் பிஜேபி எதிர்த்து எப்பொழுதும் நிற்கும் ஒரே மாநிலக் கட்சியாக லாலுவின் கட்சி உள்ளது என்பது நகைமுரண்.

அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாகவே இருக்கிறார்கள் … ஏமாந்த மக்களும் வாக்காளன் வடிவும் எடுத்து தன் கடமையைச் சரிவர செய்ய முற்படுகிறான்.

நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதி ஆகிவிட்டேர்களே நிதிஷ்…..

வந்தார் சென்றார்…அடுத்தது என்ன?

Obama leaves India

வணக்கம் கூறி விடைபெற்றார் ஒபாமா.
அரசியல் தாண்டி, அமெரிக்க அதிபர் இரண்டாவது முறையாக இந்தியா வந்ததும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளிலும், பேச்சு வார்த்தைகளிலும் பங்குபெற்றதும், நாட்டின் முக்கிய பிரமுகர்களை சந்தித்ததும் நிறைவான நிகழ்வுகள்.
ஆனால் ஒபாமா இந்தியாவில் இருந்த போதும் அவர் சென்ற பிறகும் சமூக வலைதளங்களிலும் பிற செய்தி ஊடகங்களிலும் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட செய்திகள்:

1) தன் பெயர் பொறித்த மோடியின் உடை –

மோடியின் உடை

இரண்டு தலைவர்கள் சந்திக்கும் பொழுது உடை ஒரு முக்கிய அங்கம். ஆள் பாதி ஆடை பாதி என்பது நம் பழமொழி தான். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் பட்டாதா என்பது இங்கு ஒரு பயனற்ற கேள்வி. நம் நாட்டின் தலைவராக உள்ள ஒருவர் சிறப்பான உடை அணிவது அவசியம். இது ஒரு விவாதிக்க வேண்டிய நிகழ்வு அல்ல.
தயவு செய்து காந்தி சர்ச்சிலை அரை நிர்வாண பக்கிரியாக வட்டமேஜை மாநாட்டில் சந்தித்ததை மேற்கோள் கோளாதிர்கள். அன்றைய அரசியல் சூழ்நிலை வேறு, மேலும் அவர் “மகாத்மா காந்தி”.

2) மோடிக்கு விசா மறுத்த அமெரிக்காவின் முந்தய நிலை

மோடிக்கு அமெரிக்கா விசா

மோடிக்கு அமெரிக்கா விசா மறுக்கும் பொழுது அவர் ஒரு மாநில முதல்வர். மோடி அமெரிக்கா சென்ற பொழுது அவர் இந்தியாவின் பிரதமர். ஒபாமா வந்தது இந்தியப் பிரதமரை சந்திக்க, அது மோடியாக இல்லாமல் இருந்தலும் கூட நடந்திருக்கும். மோடியின் சொந்த சாதனைகளை நாட்டின் வெற்றியாக பிரகனப்படுத்துவதை மோடி கட்டயமாக விரும்பமாட்டார் என்பது என் நிலை. Obama wants Indian economy more than anything else.
இலங்கையின் முன்னால் அதிபருக்கு ஒரு மாநிலத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதும் கூட அவரை சிறப்பு விருந்தினராக மோடி அழைத்துப் பேசியதை நாம் ஒபமாவின் நிலையுடன் ஒப்பிட்டால் நமக்கு அரசியல் சூழ்நிலைகள் விளங்கும்.

3) “டீக்கடைக்காரரின் இன்றைய வாடிக்கையாளர் யார் பாருங்கள்”- என்ற வாசகம் கொண்ட புகைப்படம்

மோடிக்கு Vs ஒபாமா

நம் நாட்டின் பண்பாட்டை நிலை படுத்தும் செயலகக் காண்கிறேன். வலியவனிடம் நட்பு கொள்ள நாம் செய்ய வேண்டிய உக்தி. இந்த நட்பு ஒபமா அதிபராக உள்ள இறுதி 2 ஆண்டுகளில் எவ்வாறு நம் நாட்டிற்கு உதவும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

4) “Richest Que of India” – என்ற வாசகம் கொண்ட புகைப்படம்

Richest Que of India

மரியாதையை நிமித்தமான சந்திப்புகள்.
வியாபார நிகழ்வு.
வேறொன்றும் இல்லை.

மேற்கூறிய 4 செய்திகள் ஒட்டி பல துணைச் செய்திகளும் அது சார்த்த விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. ஆனால் நாம் விவாதிக்க வேண்டிய செய்திகள் வேறு.

சமிபகாலமாக மோடி அரசும் & பிஜேபி சார்ந்த துணைக் கட்சிகள் மற்றும் இயக்கங்களால்  “திசைதிருப்புதல்” நடைபெறுகின்றன என்று ஒரு வலிமையான குற்றச்சாற்று உள்ளது. “திசைதிருப்புதல்” நிகழ்வுகள் திட்டமிட்டு நடைபெறுகின்றவா என என்னக்குத் தெரியவில்லை…. ஆனால் திசைதிரும்பாமல், நம் கவனமும் செயல்களும் சிந்தனையும் இந்திய நாடு மற்றும் அது சார்ந்த நலன்கள் குறித்தே இருக்கவேண்டும் என்பது திண்ணம்….

1) 24,000 கோடி ருபாய் முதலிடு எந்தந்த துறைகளில் எந்த கால வரம்புக்குள் நிகழப்போகின்றன. இந்த முதலிட்டை இந்தியாவில் தக்க வைக்க மைய அரசு என்ன செய்யப் போகிறது?
2) பாதுகாப்பு துறையில், தளவாட விற்பனையில் அந்நிய முதலிட்டின் எதிர்கால உள்நாட்டுச் சவால்கள் என்ன…
3) இன்சூரன்ஸ் துறை அந்நிய முதலீடு நமக்கு உண்மையிலேயே உதவுமா…
4) அணுசக்தி ஒப்பந்தம் குறித்த புதிய முன்னேற்றம் என்ன… என்.எஸ்.ஜி., அமைப்பில் இந்தியாவை சேர்க்க சீனா எதிர்ப்பு நிலை குறித்து அமெரிக்க நிலைப்பாடு என்ன…
5) ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தேவை என ஒபாமா கூறியதின் உண்மையான காரணம் என்ன …சீனாவை அமெரிக்க எப்படி எதிர்கொண்டு இந்திய சார்பில் நிற்கப் போகிறது…
6) ஆசியாவில் ஆதிக்கம் செய்யத் துடிக்கும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளின் வலையில், இந்தியாவும், சீனாவும் விழக் கூடாது என்ற பெஜிங்கின் நிலைப்பாட்டின் காலநிலை எவ்வளவு…
7) பாகிஸ்தான் சார்ந்த நிலைகளும் மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலையில் அமெரிக்காவின் நிலை என்ன…
8) ஐநா சபையில் நிரந்த உறுப்பு நாடுகள் சபையில் இந்தியாவைச் சேர்க்க ஒரு காலநிலையுடன் கொண்ட உறுதிமொழி உண்டா?
9) ஐநா சபையில் VETO பவர் கொண்டு பிற நாடுகள் இந்தியாவை பின்தள்ளும் பொழுது அமெரிக்க எதிர்காலத்தில் உதவுமா ?
10) எண்ணை நாடா ஆக்ராவா என வந்ததும்…. எண்ணை நாட்டு தலைவரை சந்திக்கச் சென்றது போல் எதிர்காலத்தில் வேறு எதுவும் நடக்கும்மா ….

நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்…
நட்புடன் கூடிய நடுநிலைமை முக்கியம்…
தொலைநோக்குப் பார்வை கொண்டு செயல்படவேண்டும் …
உள்நாட்டுச் சவால்கள் மற்றவர்களுக்கு சாதகமாகப் போய்விடக்கூடாது…

வேறொன்றும் அறியேன் பராபரமே…..