மகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)

இந்த வார பாக்ஸ் ஆபீஸ் “மகளிர் மட்டும்”. இடைவெளி விட்டு ஜோதிகா நடிக்கும் படங்களுக்கு, இன்னமும் ஜோதிகா ரசிகர்கள் காத்திருப்பது, ஜோதிகாவின் மிகப்பெரிய பலம். குற்றம் கடிந்த பிரம்மா மீதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு. நடிகர்கள் தாண்டி, கதை, திரைக்கதை, இசை, படத்தொகுப்பு, வசனம் என ரசிகனின் எல்லை விரிந்த, சமூக வலைத்தளங்கள் கொண்ட உலகம் இது என்பதை இயக்குனர் நன்கு உணர்ந்துள்ளார்.

Freelance மீடியா நிருபராக “பிரபா” ஜோதிகா. கருப்புச் சட்டையில் பெரியார் மற்றும் அம்பேத்கார் பின்னணியில் முதல் காட்சி. கதாபாத்திரத்தின் தன்மையினை வசனமாக அல்லாமல் “காட்சியாக” உருவகப்படுத்துவது அருமை. ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, ஜோதிகா ஆகியோரைச் சுற்றியே நகரும் கதை. மாமியார் ஊர்வசியின் பள்ளிக் காலத் தோழிகளை (பானுப்ரியா, சரண்யா) தேடித் தெரிந்துகொண்டு (வேற எப்படி…இப்போ நெறைய படத்துல காட்டுற மாதிரி “முகப்புத்தகம் மூலம்தான்); ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என் நால்வரும் போகும் மூன்று நாள் பயணம் தான் திரைப்படம். சிறிய ஒன் லைனர் கதை, திரைக்கதையின் மூலமும் காட்சிக்கு கோர்வைகளின் மூலமும் நகர்கிறது. சிறிய சிறிய தொய்வுகள், சற்றே நாடகமான காட்சிகள். ஆனாலும் நடிகைகள் ஸ்கோர் செய்து கொண்டே இருக்கின்றனர். சீனியர் நடிகைகள் ஜோதிகாவை விட சில இடங்களில் ஸ்கோர் செய்கின்றனர். ஊர்வசி பல இடங்களில் அடித்து தூள் கிளப்புகிறார். இந்த மாமியார் வேடம் அவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி, அசால்ட்டா கிளப்புகிறார்.

படம் நெடுக கண் கலங்க வைக்கும் காட்சிகள். திரைப்படம் பார்ப்பவர்கள் தன் சுய வாழ்க்கையை எதாவது ஒரு காட்சியிலும் ஒப்புமைப் படுத்தி உணர வைப்பது, இயக்குனரின் மிகப் பெரிய வெற்றி. இந்தச் சிறப்பால் நாடகத்தன்மையுள்ள காட்சிகள் கூட உண்மை என படம் பார்ப்பவர்கள் நம்பும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பது திரைப்படத்துக்கு வலிமை. இந்த மாதிரி கதைகளை படமாக்கும் தைரியத்திற்கு ஒரு மிகப்பெரிய நன்றி.

நாசர், லிவிங்ஸ்டன், மாதவன் மற்றும் பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து உள்ளனர்.

இந்தப் படத்தின் பலம் “மகளிர்” நிலை குறித்து ஒரு “தமிழ்” சமூகம் சார்ந்த “பெண்ணியம்” பேசும் நிலை தான். என்ன தான் ஆணாதிக்கத்தின் மேல் கோபம் இருந்தாலும் “பெண்ணியம்” சார்ந்த எதிர்பார்ப்புகள் தமிழ் சமூகப் பெண்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை சரியான ஒரு கோட்டில் இயக்குனர் பதிவு செய்துள்ளார். ஏற்றம் இறக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான சமூக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மிகுதியாக வர வேண்டும் என்பது காலத்தின் எதிர்பார்ப்பு, கட்டாயம் அந்த சூழ்நிலைகள் நோக்கி நகரவேண்டிய நேரம்.  மலையாளத்திலும் மற்றும் சில மொழிப் படங்களிலும் எடுத்த முயற்சிகள் இப்பொழுது தமிழ் திரைப்படங்களிலும் எடுக்கப் படுவது வரவேற்க வேண்டிய ஒரு நிகழ்வு.

இந்த படம் திரையரங்கில் பார்க்கும் பொழுது, காட்சிகளில் எதிர் விதமாக, ரசிகர்களின் உணர்வுகள் ஒரு சிறு தொகுப்பாக கீழ்:

1) நாசர் பானுப்பிரியா நோக்கி “போ மேல பே”…என்று உறும் காட்சி… பானுப்பிரியா நின்று ஒரு முகப் பாவணை காட்டி நகரும் பொழுது…என் பின்னிருக்கையில் அமர்த்திருந்த ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் பதில் “சீ…நீ போ டா “…

2) நாசர் உப்பு போடாத தயிர் சாதத்தை வெங்காயத்துடன் சாப்பிடும் காட்சி… அதே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் வசனம் “இப்படி தின்நாத்தான் உனக்கு புத்தி வரும்”

3) “ஆம்பளைங்க சமைக்கிற வீட்டுல குபேரன் குப்புற படுத்திருப்பான்” …முன் இருக்கையில் உள்ள ஒரு பெண்மணி “நாம வீட்டுக்கு குபேரன் வரவே மாட்டான் போலயே”…

4) லிவிங்ஸ்டன் ..”இனியோட இன்னையோட குடியை நிறுத்துரேன் “…ஒரே கைதட்டல்…”டாஸ்மாக்” கொடுமையின் உண்மை முகம் …

“ஒரு பெண் ஆணிடம் எதை எதிர்பார்க்கிறார்… ”
“ஆண் பெண் உறவின் மேன்மை…”
“தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை. ..”
“சமூகத்தின் கட்டுப்பாடு…”
“மகளிர் மட்டும் ..ஆண்களுக்கு “

இப்படி பல்வேறு கருத்துக்கள் இந்தத் திரைப்படத்தின் பிம்பமாக பேசப் படலாம்.

ஆனால் என் உணர்வு இதுதான்….

“இன்று உள்ள பெண் சமூகம் (சுமார் 40 வயது வரை உள்ளவர்கள்) சில சீர்திருத்தங்களை பார்த்து விதைத்து விட்டது…மிக நீண்ட பயணத்தின் சிறிய முதல் அடிகள் எடுக்கப்பட்டு விட்டன… ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ள முந்திய பெண் சமூகத்தின் வலி மிகப்பெரியது … அவர்களின் பார்வை நிச்சயம் மிக வேறாக இருக்கும்…அது இதுவாக கூட இருக்கலாம்….

‘ பிரபா கோமாதா போன்ற ஒரு மாமியார் மருமகள் உறவுதான் அது…பல்வேறு மகளிர் சிக்கல்களின் மூலம் நம் தமிழ்ச் சமூகத்தில் இந்த மாமியார் மருமகள் உறவுதான்’…

பிரபா கோமாதா போன்ற உறவுகள் அனைவருக்கும் வாய்க்கட்டும் “….