காட்சியும்-கவிதையும்: உயிரின் உயிரில்

காட்சியும்-கவிதையும்

தன் முதல் குழந்தை ஒரு கைபிடித்து நடந்து வருகிறது. மறுகை பிடித்து மனைவி நடந்து வருகிறாள். மனைவின் மறுகை கர்ப்பம் சுமக்கும் வயிற்றின் மீது…. ஆணின் சிந்தனை ஓட்டம் கவிதையாய்….இசையாய்…

பல்லவி

என் உயிரின் இசையாய் ஆனவளே
என் உயிரின் கவிதை சுமப்பவளே
இசைந்து உரசும் காற்று இசையாய் இனிமை சேர்த்ததடி
அன்பால் நாம் இசைந்து வடித்த ஒரு கவிதை என் கையிலடி
அன்பின் கரை காணா மகிழ்ச்சியின் மறுவடிவம்…மீண்டும் ஒரு கவிதையடி

சரணம்

தாயாய் நீ ஆனாயடி
என் தாரமாய், நீ என் வாழ்வில் நிறைந்தாயடி
நீயும் எனக்கு ஒரு குழந்தைதானடி ….

உனக்கு ஒரு குழந்தை தானடி, எனக்கோ இரண்டும் குழந்தையடி
தாயுமானவன் கதை கேட்டதுண்டு; இன்று என் வாழ்வும் வடிவமும் ஆனதடி
என் பிறப்பின் பரிணாமம் உன் உருக் கொண்டு நிறைந்ததடி ….

சிறு நடையாய் நீ நகர்ந்தாயடி, இரு உருவம் உன் நிழலாய் தொடர்ந்ததடி
என் உயிரின் முழு நாடி நீயடி, உன் உறவும் உன் பார்வையும் தவிர வேறேன்ன வேண்டுமடி
இந்தக் கல்லுக்குள்ளும் ஈரமடி, என் வாழ்கைக்கு உன்வரவு புது இளவேனிலடி …

எந்த மழலையின் சிரிப்பும் இனிமையடி, நம் கவிதையின் உயிரும் அதுதானடி
மழலை உயிர்மாறும் பெண்மையடி, அந்தப் பெண் சிரிப்பு அதனினும் அமிர்தமடி
பிரபஞ்ச ரகசியம் உணரும்படி, ஈரைந்து மாதம் நான் உன் அருகிலடி …

உன் உருவில் மாற்றமடி; உளிபடும் கல்லாய் நீயடி…. சிலையின் நளினம் நம் குழந்தையின் சிரிப்படி
மீண்டும் வலி காணும் மனம் கொள்தல் எளிதன்றடி …அன்பை மீண்டும் நிறைசெலுத்த நீ துணிந்தாயடி …
இசையின் வழி வந்த கவிதையடி… மீண்டும்…உயிராய் உன் உயிருள் ஒரு கவிதையடி….