ஒற்றை “மந்திரச் சொல்லில்”

முதல் அடி எடுத்துக் கொடுத்தான்  
இறைவன், 
பக்தியில் தமிழ் வளர்த்தான் 
என் முப்பாட்டன்… 
 
உன் முதல் மற்றும் இறுதி 
அடி கொண்டு என் நிலை 
சொல்லும் கவிஞன் நான் …
தமிழ் சாருமோ இல்லையோ 
உன் மனம் சாரும் வரம் கேட்டேன் …
 
கடவுளுக்கு மேல் நீ 
எனக்கு… 
உன் சொல்லாத வார்த்தை 
ஓன்று போதும், 
நிலை கொள்ளும் தளம் 
எனக்கு…
 
கவிதையாய் நான் 
வார்த்தையாய் நீ …
உவமையாய் நான் 
உருவமாய் நீ  …
 
“அந்த ஒற்றை மந்திரச் சொல்
கொண்டு மூடிக்கிடக்கும்
உன் இதயத்தை என்னால்
திறக்கவும் முடியும்…” 
 
இதுதானே உன் முதல் வரி… 
இது என்னுடைய முகவரி…
எனக்கு உன் வாழ்வில் நீ 
தந்த நிலையான முகவரி… 
 
வார்த்தையின் விளையாட்டு 
எந்த ஒற்றை சொல் அது 
சொல்; செயல் ஆகுமா? 
என்கின்ற தொக்கிய 
வினை….
 
சொல் செயல் ஆகவேண்டும் 
என்கின்ற எதிர் வினை 
செயல் உணர்ந்து சொன்ன வார்த்தை 
செயல் மறைத்து தந்த வார்த்தை
 
செயல் உணரும் நீ
செயல் நுகரும் நீ 
செயல் விரும்பும் நீ  
சொல்லாய் உறைந்த விதை… 
 
உன் வினை உறைந்து 
போனது உண்மை 
என் வினை உன்முனை 
நோக்கி நகர்வதும் 
உவமைதான் 
அந்த செயலின் 
உருவமும் நீதான் 
உருவகம் நீதான் …
 
எந்த ஒற்றைச் “சொல்”
சிந்திக்கிறேன் ….
தமிழ் தாய் தந்த 
கொடை 
வானத்து நட்சத்திரமாய் 
வார்த்தைகள் 
நீ சொன்ன சொல் 
“துருவ நட்சத்திரமாய்” என் முன்… 
 
சொல்ல முற்பட்ட 
சொல்லாய் நான் …
இல்லை 
நீ மீண்டும் உதிர்த்த 
“மந்திரச் சொல் “
 
அந்த ஒற்றை மந்திரச் சொல்
கொண்டு சோ வென்று
மடை திறந்து பேசும் உன் உதட்டிற்கு
தாழிடவும் முடியும்…
 
உண்மை …
மீண்டும் உறைவோம் நாம்…
ஒற்றை “மந்திரச் சொல்லில்”…