மகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)

இந்த வார பாக்ஸ் ஆபீஸ் “மகளிர் மட்டும்”. இடைவெளி விட்டு ஜோதிகா நடிக்கும் படங்களுக்கு, இன்னமும் ஜோதிகா ரசிகர்கள் காத்திருப்பது, ஜோதிகாவின் மிகப்பெரிய பலம். குற்றம் கடிந்த பிரம்மா மீதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு. நடிகர்கள் தாண்டி, கதை, திரைக்கதை, இசை, படத்தொகுப்பு, வசனம் என ரசிகனின் எல்லை விரிந்த, சமூக வலைத்தளங்கள் கொண்ட உலகம் இது என்பதை இயக்குனர் நன்கு உணர்ந்துள்ளார்.

Freelance மீடியா நிருபராக “பிரபா” ஜோதிகா. கருப்புச் சட்டையில் பெரியார் மற்றும் அம்பேத்கார் பின்னணியில் முதல் காட்சி. கதாபாத்திரத்தின் தன்மையினை வசனமாக அல்லாமல் “காட்சியாக” உருவகப்படுத்துவது அருமை. ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, ஜோதிகா ஆகியோரைச் சுற்றியே நகரும் கதை. மாமியார் ஊர்வசியின் பள்ளிக் காலத் தோழிகளை (பானுப்ரியா, சரண்யா) தேடித் தெரிந்துகொண்டு (வேற எப்படி…இப்போ நெறைய படத்துல காட்டுற மாதிரி “முகப்புத்தகம் மூலம்தான்); ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என் நால்வரும் போகும் மூன்று நாள் பயணம் தான் திரைப்படம். சிறிய ஒன் லைனர் கதை, திரைக்கதையின் மூலமும் காட்சிக்கு கோர்வைகளின் மூலமும் நகர்கிறது. சிறிய சிறிய தொய்வுகள், சற்றே நாடகமான காட்சிகள். ஆனாலும் நடிகைகள் ஸ்கோர் செய்து கொண்டே இருக்கின்றனர். சீனியர் நடிகைகள் ஜோதிகாவை விட சில இடங்களில் ஸ்கோர் செய்கின்றனர். ஊர்வசி பல இடங்களில் அடித்து தூள் கிளப்புகிறார். இந்த மாமியார் வேடம் அவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி, அசால்ட்டா கிளப்புகிறார்.

படம் நெடுக கண் கலங்க வைக்கும் காட்சிகள். திரைப்படம் பார்ப்பவர்கள் தன் சுய வாழ்க்கையை எதாவது ஒரு காட்சியிலும் ஒப்புமைப் படுத்தி உணர வைப்பது, இயக்குனரின் மிகப் பெரிய வெற்றி. இந்தச் சிறப்பால் நாடகத்தன்மையுள்ள காட்சிகள் கூட உண்மை என படம் பார்ப்பவர்கள் நம்பும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பது திரைப்படத்துக்கு வலிமை. இந்த மாதிரி கதைகளை படமாக்கும் தைரியத்திற்கு ஒரு மிகப்பெரிய நன்றி.

நாசர், லிவிங்ஸ்டன், மாதவன் மற்றும் பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து உள்ளனர்.

இந்தப் படத்தின் பலம் “மகளிர்” நிலை குறித்து ஒரு “தமிழ்” சமூகம் சார்ந்த “பெண்ணியம்” பேசும் நிலை தான். என்ன தான் ஆணாதிக்கத்தின் மேல் கோபம் இருந்தாலும் “பெண்ணியம்” சார்ந்த எதிர்பார்ப்புகள் தமிழ் சமூகப் பெண்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை சரியான ஒரு கோட்டில் இயக்குனர் பதிவு செய்துள்ளார். ஏற்றம் இறக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான சமூக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மிகுதியாக வர வேண்டும் என்பது காலத்தின் எதிர்பார்ப்பு, கட்டாயம் அந்த சூழ்நிலைகள் நோக்கி நகரவேண்டிய நேரம்.  மலையாளத்திலும் மற்றும் சில மொழிப் படங்களிலும் எடுத்த முயற்சிகள் இப்பொழுது தமிழ் திரைப்படங்களிலும் எடுக்கப் படுவது வரவேற்க வேண்டிய ஒரு நிகழ்வு.

இந்த படம் திரையரங்கில் பார்க்கும் பொழுது, காட்சிகளில் எதிர் விதமாக, ரசிகர்களின் உணர்வுகள் ஒரு சிறு தொகுப்பாக கீழ்:

1) நாசர் பானுப்பிரியா நோக்கி “போ மேல பே”…என்று உறும் காட்சி… பானுப்பிரியா நின்று ஒரு முகப் பாவணை காட்டி நகரும் பொழுது…என் பின்னிருக்கையில் அமர்த்திருந்த ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் பதில் “சீ…நீ போ டா “…

2) நாசர் உப்பு போடாத தயிர் சாதத்தை வெங்காயத்துடன் சாப்பிடும் காட்சி… அதே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் வசனம் “இப்படி தின்நாத்தான் உனக்கு புத்தி வரும்”

3) “ஆம்பளைங்க சமைக்கிற வீட்டுல குபேரன் குப்புற படுத்திருப்பான்” …முன் இருக்கையில் உள்ள ஒரு பெண்மணி “நாம வீட்டுக்கு குபேரன் வரவே மாட்டான் போலயே”…

4) லிவிங்ஸ்டன் ..”இனியோட இன்னையோட குடியை நிறுத்துரேன் “…ஒரே கைதட்டல்…”டாஸ்மாக்” கொடுமையின் உண்மை முகம் …

“ஒரு பெண் ஆணிடம் எதை எதிர்பார்க்கிறார்… ”
“ஆண் பெண் உறவின் மேன்மை…”
“தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை. ..”
“சமூகத்தின் கட்டுப்பாடு…”
“மகளிர் மட்டும் ..ஆண்களுக்கு “

இப்படி பல்வேறு கருத்துக்கள் இந்தத் திரைப்படத்தின் பிம்பமாக பேசப் படலாம்.

ஆனால் என் உணர்வு இதுதான்….

“இன்று உள்ள பெண் சமூகம் (சுமார் 40 வயது வரை உள்ளவர்கள்) சில சீர்திருத்தங்களை பார்த்து விதைத்து விட்டது…மிக நீண்ட பயணத்தின் சிறிய முதல் அடிகள் எடுக்கப்பட்டு விட்டன… ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ள முந்திய பெண் சமூகத்தின் வலி மிகப்பெரியது … அவர்களின் பார்வை நிச்சயம் மிக வேறாக இருக்கும்…அது இதுவாக கூட இருக்கலாம்….

‘ பிரபா கோமாதா போன்ற ஒரு மாமியார் மருமகள் உறவுதான் அது…பல்வேறு மகளிர் சிக்கல்களின் மூலம் நம் தமிழ்ச் சமூகத்தில் இந்த மாமியார் மருமகள் உறவுதான்’…

பிரபா கோமாதா போன்ற உறவுகள் அனைவருக்கும் வாய்க்கட்டும் “….

பாகுபலி விமர்சனம் – ஒரு ஹாலிவுட் பார்வை

“முதன்முறையாக”, “மாபெரும் வெற்றி” போன்ற வார்த்தைகளின் சமீபத்திய கொண்டேந்தல் சினிமா “பாகுபலி”. சற்றே நான் தாமதமாகப் படம் பார்த்தேன். பல விதமான விமர்சனங்களும் மதிப்பீடுகளும் இந்தப் படத்தைப் பற்றியும், நடிகர்கள் பற்றியும், வெற்றி இயக்குனர் ராஜமௌலி குறித்தும் வந்துவிட்டதால் நான் மீண்டும் இந்தப் படத்தை அதே கோணத்தில் விவரிக்கப் போவதில்லை.

பாகுபலி-600x300

இந்தத் திரைப்படம் நிச்சயமாக இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். காட்சிப் பிரமாண்டத்தை மொழிபெயர்ப்பு படங்களில் மட்டும் பார்த்து வந்த இந்திய ரசிகர்களுக்கு ஒரு கண்கவர்ந்த காட்சிப்படம். மிகப் பழைய ராஜா காலத்து பழிவாங்கும் கதைப் பின்னணியில் காட்சிப் பிரமாண்டத்தை தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொண்டு வெற்றி பெற்றதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒரு திரைப்படம் என்பது இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள், இசையமைப்பாளர் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இனணந்து செயல்படும் இடம். இந்த அணி மட்டும் மட்டுமே இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமில்லை என்பது உண்மை. பாகுபலியின் வெற்றிக்கு மிகப்பெரிய பெரிய முதுகெலும்பு என்றால் அது தான் விஎஃப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பம்……!
240 கோடி ரூபாய் செலவு கொண்டபாகுபலி படத்தில், விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்திற்காக மட்டும் செலவு செய்யப்பட்ட தொகை – 85 கோடி..!… உண்மையில் கதாநாயகன் “தொழில்நுட்பம்” மட்டும்தான் என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சி அமைப்புகள்.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பொழுது, நான் பார்த்த மிகப் பிரமாண்டமான ஹாலிவுட் படங்களின் காட்சி சாயலில் பல காட்சிகளை கண்டேன். இது நிச்சயமாக ஒரு ஒப்பீடு என்ற பொழுதிலும், பாகுபலியின் வெற்றிக்கு இந்தக் காட்சிகள் ஒரு மகுட மாணிக்கங்களே தான் தவிர வேறில்லை.

காட்சி 1 : மகேந்திர பாகுபலி (பிரபாஸ்) அவந்திகாவிற்கு (தமன்னா) அழகு ஒப்பனை செய்து அவள் மனதில் இடம்பிடிக்கும் காதல் காட்சி. இதே காட்சியை ஒத்த காட்சி Crouching Tiger, Hidden Dragon படத்தில் வரும். வீரமான வேகமான நாயகியை நாயகன் பாலைவனத்தில் வைத்து கவரும் காட்சி ஒத்த பொருள் கொண்டது.

Zhang-Ziyi-in-Crouching-Tiger-Hidden-Dragon

காட்சி 2: மகேந்திர பாகுபலியும் (பிரபாஸ்) பல்வார் தேவனும் (ராணா) போர் உத்தி ரகசியங்களை திருடிச் செல்லும் உளவாளியை பின்தொடர்ந்து கள்வர் நாட்டிற்குச் செல்லும் இடம். Pirates of the Caribbean படத்தில் இதே போன்று கள்வர் இடத்திற்குச் சென்று வரும் காட்சி உண்டு.

pirates-of-the-caribbean-1

காட்சி 3: கட்டப்பா (சத்யராஜ்) தன் படைகளுடன் திரிசூல வியுகம் அமைத்து போர் புரியும் இடம். வியுகம் உடையும் பொழுது பகைவர்களை கொன்று, இறந்த உடல்களைக் கொண்டு வியுகத்தை நிரப்பும் காட்சி. இந்தக் காட்சிகள் 300 படத்தை ஒத்த காட்சிகள்.

300-movie

காட்சி 4: மகேந்திர பாகுபலியும் (பிரபாஸ்) பல்வார் தேவனும் (ராணா) போர்களத்தில் எதிரிகளைச் சூறையாடும் வேகம் மற்றும் காட்சி அமைப்பு Troy படத்தில் வரும் போர் காட்சிகளை ஒத்திருந்தது.

Troy-mid

காட்சி 5: பல்வார் தேவன் (ராணா) ஒற்றை ஆளாய் நின்று காட்டு எருமையை கொல்லும் காட்சி. அந்த மாட மாளிகைகள், விளையாட்டு அரங்கு மற்றும் அந்த காட்சி சார்ந்த அனைத்தும் Gladiator திரைப்பட காட்சிகளை நினைவுபடுத்தின.

Gladiator

 

சொல்லிக்கொள்ளும் படியான குறைகள் மூன்று….

1) பின்னிசை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்
2) இந்த படத்திற்குப் பாடல்கள் தேவையா என்பதை ஒரு முறை சிந்திக்கலாம். பாடல் இல்லாமல் ஏன் படம் எடுப்பதற்கு நம் திரையுலகம் தயங்குகிறது என்பது ஒரு நீண்ட நாளைய கேள்விக்குறி.

இந்த இரண்டு குறைகளும் படம் சார்ந்தது ….
மூன்றாவது குறையை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை…

3) “புலி” பட முன்வெளியிட்டுக் குருங்காட்சிகளை பாகுபலி படத்தின் இடைவேளையில் திரையிட்டது 🙂

பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நம்மை கவர்வான் என்ற எதிர்பார்ப்புடன் …..விடைபெறுகிறேன்….

பாபநாசம் – பாபமா இது? – விமர்சனம்

papanasam poster

மலையாளப் படத்தின் மறுஉருவாக்கம் என்பது படம் பார்க்கும் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்து போயிருந்தது. மோகன்லால், மீனா என எல்லா கதாபாத்திரங்களின் பெயரோ அல்லது முகமோ பெருவாரியான மக்களுக்குத் தெரிந்திருந்தது. இது எல்லாம் தாண்டி வெற்றி பெறவேண்டிய கட்டாயம் கமலுக்கும் அவரது அணிக்கும் இருந்தது. இவ்வகையில் கமலுக்கு இந்தப்படம் வெற்றிதான். மலையாளப் படம் பார்த்த நண்பர்கள் கூட கமலின் நடிப்பின் உச்சத்தையும் தமிழ் ரசிகன் சார்ந்த நிலையையும் பாராட்டினார்கள்.

ஜார்ஜ் குட்டியும் சுயம்புலிங்கமும் வேறு வேறு என்பது சில காட்சிகளில் கமலால் ஆணித் தரமாக நிருபிக்கப் பட்டது. வட்டார மொழி வழக்கு படத்திற்கு பெரும் பலம். அம்மை, எல, பரக்காவெட்டி, கோட்டி, சொல்லுதாகளடே, கேட்டுகோங்க, கண்டிசன் என பல்வேறு திருநெல்வேலி மண் சார்ந்த வார்த்தைகளை கேட்கும் பொழுது ஒரு திருநெல்வேலிக்காரனாக எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ஜெயமோகன் மற்றும் சுகா அண்ணனின் உழைப்பையும், கமல் அவர்களின் ஒத்துழைப்பையும் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

ஆனால் சற்றே நீளமான படம். 3 மணி நேரம் ஓடுகிறது. திரைக்கதை சுவாரசியமாக இருந்தாலும் இந்த நீண்ட ஓட்டம் ஒரு அயர்ச்சியைத் தருகிறது. சில காட்சிகள் முன்னரே கணிக்கும் வண்ணமும் இருந்தது. மிகப்பெரும் நடிகர்களாகவும், கதாப்பாத்திர வெற்றியாளர்களாகவும் இருந்த/இருக்கும் சார்லி, இளவரசு, பாஸ்கர் போன்றோருக்கு கொடுக்கப் பட்டிருந்த காட்சியும் நீட்சியும் மிகக் குறைவு என்பது சற்றே எனக்கு வருத்தம் தான்.

ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியா இருவரும் கமல் மற்றும் ரஜினி என்ற மாபெரும் கதாநாயகர்களின் 80இன் திரைப்பட வரலாற்றின் மிகப் பெரிய வெற்றி நாயகிகள். இந்த இடத்தை தன் நடிப்பின் வழியாக சிலகாலம் 90களில் தக்கவைத்துக் கொண்டிருந்தவர் கௌதமி. ஆனால் பாபநாசம் ஒரு சாதாரண மறுபிரவேசம் தான். கௌதமியின் நடிப்பு  அவ்வளவாக ஒட்டவில்லை. கலாபவன் மணி தனக்கு கொடுக்கப் பட்டுள்ள சிறிய இடத்தை பெரிதாக நிறைவு செய்துள்ளார். பெருமாள் போலீசுக்கும் சுயம்பு சித்தப்பாவிற்கும் ஏன் இந்த முன்விரோதம் என்பது இன்னும் சற்று அழுத்தமான காட்சிகளின் வழியாகக் காட்டியிருக்கலாம் [ஏற்கனவே 3 மணி நேரம் …இது வேறயா….நீங்க சொல்றது கேட்குது….:) ].

மிக அழகான இடங்கள், அந்த அழகான வீடு, பசுமையான காட்சிகள், குளம், ஆறு, மலை எனப் பல இடங்களில் ஒளிப்பதிவாளரின் திறமைக்கு ஒரு “சபாஷ்”. நல்ல இரண்டு பாடல்களில் கவரும் இசை அமைப்பாளர், பின் இசையில் மற்றும் காட்சி இசையில் சோபிக்கவில்லை. பல இடங்களில் மீண்டும் கேட்ட நினைவே தோன்றுகிறது, இன்னும் சற்றே மேம்படுத்தி இருக்கலாம். சில காட்சித் தொடர்புகள் விட்டுப் போயிருந்தாலும் திரைக்கதை நகர்வு அந்தக் குறையினை மறைக்கிறது.

கமல் அவர்களின் நடிப்பு பற்றி சொல்வே வேண்டாம். சுயம்புவாக வாழ்ந்திருக்கிறார். வேணும்னு விட்டாங்கலானு தெரியல, ஆனா டை அடித்த சாயல் மீசையில் பளிச்சென பல இடங்களில் தெரிகிறது. அது கதாப்பாத்திரத்திற்கும் பொருந்துகிறது. சுயம்பு “நாத்திகரா” என்ற எண்ணம், காட்சிகளில் கறுப்புச் சட்டையின் மூலம் தொக்கி நின்றாலும், கோவிலில் சூழ்நிலையின் காரணமாக ஒரு நாள் முழுதும் அமரும் பொழுது ரசிகன் கேள்வியை மறந்து படத்தில் ஒன்றிவிடுகிறான். ஒரு சராசரி 45 வயது மனிதனின் வாழ்க்கையை அருமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் கமல். உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் சொன்ன கமலை விட சுயம்பு கமல் எனக்கு திரையில் அருமையாகத் தோன்றியது. அவரது வயது ஒத்தக் கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது நடிகர்கள் மிளிர்கிறார்கள் என்பது நீருபிக்கப்பட்டது போல் தோன்றியது.

அந்த இரண்டு குழந்தைகள், IPS அதிகரி மற்றும் அவரது கணவர் என வேறு சிலரின் நடிப்பும் அருமை. கதையின் கனத்தையும் காட்சிகளின் உணர்வுகளையும் அழகாகச் செய்திருந்தனர். டெல்லி கணேஷ் மாமனார் தன் சிறிய வட்டத்தை சிறப்பாக நிறைத்துள்ளார்.

என்னப்பா…விமர்சனம்னு சொல்ற….கதைய விட்டுட்டு எல்லாத்தையும் பத்தி எழுதுகிட்டேடடடடடடடட இருகியடே…அப்படினு நீங்க சொல்றது காதுல விலுது….

ஒரு கமல் அபிமானியாக இந்தப் படம் நன்றாக இருந்தது எனச் சொல்ல விரும்பினாலும் எனக்கு கதையின் முடிச்சும் அதை அவிழ்த்த விதமும் திருப்தியில்லை. ஒரு எதிர்மறையான எண்ணத்தை தான் கதையும் கதையின் கருவும் படம் பார்பவர்களுக்குச் செலுத்தி இருந்தது. இந்தப் படத்தை பார்க்கும் ஒரு சாமானியன் இனி தன் மகள்களை ஒரு சுற்றுலா அனுப்புவதற்கு முன், இது நாள் வரை யோசித்ததற்கு மேல் ஒரு நிமிடமேனும் அதிகமாக யோசிப்பர். காவல் துறை மேல் அதிகமான பயம் கொண்ட நம் சமூகம் இன்னும் மேலும் அந்தக் கருத்தை பதியமிடும். கலாபவன் மணி குடும்பத்தை அறைக்குள் தாக்கும் பொழுது என்னுடன் படம் பார்த்த என் 5 வயது மகள் முகத்தை என்னுள் புதைத்ததையும், அவள் உடம்பு நடுங்கியதையும், போலீஸ்சுனா எல்லோரையும் அடிப்பாங்க என சொன்னதும் இந்தப் படத்தின் பெரும் பின்னடைவு எனக் கருதுகிறேன்.

கமல் போன்ற முற்போக்குச் சிந்தனை உள்ள கலைஞன் இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கங்களை மிகப் பெரிய வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள விதம் ஒரு பெரிய பெண்ணடிமைச் சிந்தனையை இந்தச் சமூகத்தில் விதைக்கும் அபாயம் உள்ளது. நன்றாக வளர்க்கப்படும் குழந்தைகள் இந்தச் சமூகத்தின் சொத்தாக மாறுவர் என்ற செய்தி இந்தப் படத்தில் கமலின் குழந்தைப் பாத்திரங்களின் மூலம் சொல்லப்படுகிறது. “பொய் சொல்லக் கூடாதுன்னு வளர்த்த நான், என் பிள்ளைகளுக்கு இப்படிப்  பொய் சொல்ல வச்சிட்டனே” அப்படின்னு கமல் சொன்ன வசனம் எவ்வளவு பேருக்கு போயி சேரும்னு தெரியல. ஆனால் இது எல்லாம் தாண்டி ரசிகனுக்கும், படம் பார்க்க வந்த நபர்களுக்கும் இந்தப் படம் சொன்ன செய்தி சரியா? என்கின்ற கேள்விக்கு என்னிடம் ஒரு மகிழ்வான நிறைவான பதில் இல்லை.

36 வயதினிலே – விமர்சனம்

09-1425875698-jyothika-re-entry-film-titled-36-vayathinile-600

ரொம்ப நாளுக்கு அப்புறம் fullscreenல தான் பாக்கணும் அப்படின்னு முடிவு பண்ண வச்ச படம். கடைசி படம் பச்சைக்கிளி முத்துச்சரம்மா இல்லேன்னா மொழியா அப்படின்னு வாக்குவாதம் பண்ணா கூட ஜோ முகம் பார்த்து 8 வருசத்துக்கு மேல ஆச்சு. இப்போ அவங்க வயசு கூட சரியா 36 தான் இருக்கும் போல.

மிக அழகான தொய்வில்லாத கதை நகர்த்தலுக்கு முதலில் இயக்குனருக்கும் திரைக்கதைக்கும் ஒரு “ஓ”… மலையாள படத்தின் தழுவல் படம் என்றாலும் கூட திரைக்கதை தமிழ் படத்தின் நிகழ்வுகளுக்கு ஒத்துப் போகிறது. ஒரு சராசரி நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடிக்க நல்ல முயற்சி. ஓய்வு பெற்ற அனுசரணையான மாமனார், வாழ்க்கையை அடுப்படியில் கழித்து இரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயுடன் தொலைகாட்சி நெடுந்தொடர்களில் நேரம் போக்கி வாழும் மாமியார், கனவுகளுக்கும் நிதர்சனதுக்கும் இடையில் மாட்டிக் கொண்டிருக்கும் சுயநலமான கணவன், தலைமுறை இடைவெளியின் வெளிப்பாடாக 13 வயது மகள், இவர்களை எல்லாம் தான் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் சுயத்தை மீட்டெடுக்க முயலும் அரசாங்க கடைநிலை ஊழியரான வசந்தி தமிழ்ச்செல்வன்; இவர்களின் வாழ்கை நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்துகிறது படம்.

அன்பு, பாசம் என்ற வார்த்தைகளுக்கு தவறான புரிதலுடன் தன் சுயத்தை இழந்து சற்றே சோம்பேறி எண்ணங்களுடன் வாழும் பலாயிரம் கோடி பெண்களின் உருவமாக வசந்தி தமிழ்ச்செல்வன் (ஜோ). சற்றே சினிமா தனத்துடன் காட்சிகள் வடிவமைக்கப் பட்டிருந்தாலும் உண்மை உண்மையாகச் சுடுகிறது. 13 வயது பெண்ணுடனான காட்சிகள் அனைத்திலும் ஜோ மிளிர்கிறார். சுயநலமான கணவனுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்களின் தவிப்பை அழகாக வெளிப்படுத்துகிறார். அலுவலக அரசியலின் வெளிப்பாடும் தேவதர்சினியின் நட்புக் காட்சிகளும் சற்று சிரிக்க வைக்கின்றன. அந்த வேலைக்கார பாட்டி, அலுவலக நண்பர், துணிக்கடை முதலாளி, சமையல்காரர், எதிர் வீட்டு தமிழாசிரியர், மாமனாரின் நண்பர் என சின்னச் சின்ன கதாப்பதிரங்களின் பங்களிப்பு அருமை. மிக முக்கியமாக CMO நண்பி, a nice inclusion in story. இதமான பின்னிசை, சுமாருக்கு சற்றே மேன்மையான பாடல்கள்.

மூன்று காட்சிகள் அதில் வரும் வசனங்கள், மொத்த திரைப்படத்தின் சாரமாகப் பார்கின்றேன் நான்:

காட்சி 1:
வேலைக்கார பாட்டி உடல் நிலை சரியிலாத பொது ஜோ பார்க்கச் செல்லும் காட்சி. நெகிழ்ந்தபின் “வாழ்க்கையை 100 வருஷம் வாழுரதுக்கு நமக்கு ஒருத்தர் கூட இருந்துடா போரும்…அந்த ஒருத்தருக்காகவே, அந்த நம்பிக்கையிலேயே வாழ்ந்து முடிச்சுரலாம்” …என்னச் சொல்லும் இடம். அந்த ஒரு நபரைத் தேடி தான் மனித இனமே அலைந்து கொண்டிருகிறது என்பது நிதர்சனம்.

காட்சி 2:
ஜோ தேவதர்சினியிடம் அழும் காட்சி. “நான் தனியாப் பிறந்தவள்…வலியோட வளந்தவள்… பிரசவ வலியோட ஒரு பெண்ணுக்கு பெரிய வலி என்னது தெரியுமா…அவ புருஷன் அவள அவமானப்படுத்துரதுதான்…” ….என்னச் சொல்லும் இடம். சுற்றி அமர்ந்திருந்த பல பெண்களின் விசும்பல்களுக்கு நடுவே, சராசரி இந்திய மனைவிகளின் குரலாகப் பார்த்தேன்.

காட்சி 3:
சுயநலக் கணவன் ஆயர்லாந்து அழைத்துச் செல்ல வரும் இடம். வேலைக்காரி கிடைக்கல, சம்பளம் அதிகம்…என் கூட உடனே புறப்படுனு…”உண்மையை சொன்னதுக்கு Thanks” னு ஜோ சொல்லுற காட்சி … மகள் செண்டிமெண்ட் கொண்டு தன் சுயநலத்தை கொடூரமாக கணவன் வெளிப்படுத்தும் இடம்… “who decides the expiry date for a women’s dream?” என்று ஜோ கணவனை எதிர்கொள்ளும் இடம் ….அருமையான வசனங்கள்…. இந்தக் கேள்விக்கு விடை தெரியாமதான் பலபேரு வாழ்கையை நகர்த்திக் கொள்கிறார்கள் என்பது மற்றுமொரு நிதர்சனம்.

ஜனாதிபதி சந்திப்பு, அமைச்சர் பெருமை படபேசுதல், மீண்டும் ஜனாதிபதி சந்திப்பு, FB காமெடி என சில பல சினிமாத்தனமான கோர்வைகளை தவிர்த்துப் பார்த்தால் நடுத்தர வர்க்கப் பெண்களின் மனநிலையை பிரதிபலித்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்…

எல்லாக் காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் ஜோதிகாவின் சிரிப்பு மற்றும் நடிப்பின் முன் மற்றுமொருமுறை திரையில் மங்கிப்போயின என்பது உண்மை ….

Welcome Back ஜோதிகா!!!