மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 5

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற இரண்டாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/30/மதுவிலக்கு-சாத்தியமா-2/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முன்றாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/09/01/மதுவிலக்கு-சாத்தியமா-3

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற நான்காவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/09/03/மதுவிலக்கு-சாத்தியமா-4/

இந்த நான்கு பதிவுகளில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் உங்கள் பார்வைக்கு பகிரப்பட்டது(இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது).

இந்தப் தொடர் பதிவுகளின் முதல் பதிவில் மக்களின் மனக் கேள்விகளாக இரண்டு கேள்விகளை எடுத்து தகவல் சொல்ல ஆரம்பித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

1) எல்லா அண்டை மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்படவில்லை; தமிழகத்தில் மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், மக்கள் மரணமடைவர்;
2) மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ???) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும்

மக்கள்நலத் திட்டங்கள் சார்ந்த நிதிப்பற்றாக்குறையை கையாளப் பல வழிகளில் சில தகவல்கள் முன்பதிவுகளில் இருக்கின்றன. இப்பொழுது அடுத்த “கள்ளச்சாராயம்” சார்ந்த கேள்விக்கு வருவோம்.

கள்ளச்சாராயம் சார்ந்த தகவல்களின் பதிவு உள்ள சுட்டி இங்கே : http://closetasmac.blogspot.in/2015/07/tamilnadu-no1-state-in-deaths-due-to.html

கள்ளச்சாராயம் சார்ந்த சாவுகளின் 10 வருட புள்ளி விவரங்கள் தெளிவாக உள்ளது.

“மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயத்தால் மக்கள் கொத்துக் கொத்தாக சாவார்கள் என்ற தமிழக அரசின் வாதம் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்பது தெளிவாகிறது. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இதனால், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பல்லாயிரக்கணக்கான பேர் செத்துவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு கள்ளச்சாராயத்தால் செத்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கூட எட்டவில்லை. 843 என்ற அளவிலேயே இருக்கிறது.”

நிச்சயமாக இந்தப் செய்திகளைப் படித்தபின் “கள்ளச்சாராயம்” சார்ந்த “மதுவிலக்கு” நிலைப்பாடு சற்றே மாறும் என்பது திண்ணம்.

இவ்வாறு மதுவிலக்கு சார்ந்த பல வாதப் பிரதி வாதங்கள் நடந்துள்ளன… நடக்கின்றது… நடக்கும். ஆனால் அடிப்படை செய்தி வேறு. கடந்த 10 ஆண்டுகளில் ஏன் மது இவ்வளவு பெரிய சவாலாக மாறியது என நாம் யோசிக்க வேண்டும்….

அரசு மது விற்றது … பல மதுக் கடைகள் … பல்வேறு காரணங்கள் இருந்தாலும் … என் அளவில் இரண்டு மிகப் பெரிய தவறுகள் நடந்துள்ளன….

1) “மது” தவறு என்கின்ற ரீதியில் உள்ள பிரச்சாரமோ விளம்பரமோ குறைந்த அல்லது இல்லவே இல்லை என்கின்ற நிலை
2) நடுத்தர மக்களின் “மது” சார்ந்த மனநிலை மாற்றம்

சற்றே சிந்தித்து பார்த்தால் புகைப் பழக்கமோ இல்லை குட்கா பழக்கமோ இந்தப் 10-12 வருடங்களில் பெருகவில்லை …. காரணம் இந்தப் பழக்கங்கள் சார்ந்த தீய விளைவுகளை விளக்கும் பிரச்சாரம். “புகை தீது” என்கின்ற வாசகம் எவ்வளவு பெரிய அளவில் அட்டையில் அச்சிடப் படுகிறது …. இந்த அளவை குடுவையில் உள்ள “மது தீது” வாசகத்துடன் ஒப்பிட்டால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும் … குட்கா முகேஷ் உங்கள் நினைவில் நிச்சயம் நிற்கும் …

இது எல்லாம் தாண்டி “மது” எப்பொழுதும் சமூகத்தில் பொருளாதார அளவில் நடுத்தர வர்கத்தின் வாழ்க்கை முறையில் இருந்தது இல்லை. “குடிகாரன்” என்கின்ற பெயருக்குப் பயந்த பலர் இருந்தனர். குடிப்பது பாவம் என்கிற்ற அளவில் கூட சிந்தித்த நபர்கள் கொண்ட சமூகம் நம் தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று நிலைமை வேறு. நடுத்தர வர்கத்தின் வாழ்க்கை முறையில் “மது” தன் இடத்தை அடைந்து விட்டது….

குடிப்பது தவறு இல்லை ….
யாரு குடிக்காம இருக்கா…
என் கணவர் அளவா குடிப்பார்…
நான் பீர் மட்டும் குடிப்பேன்….
வெள்ளிக்கிழமை மட்டும் தான் …
weekend party மட்டும் தான் …
bachelors party மட்டும் தான் …
பிறந்தநாள் party மட்டும் தான் …
நான் குடிக்கிறது என் பொண்டாட்டிக்கு தெரியும் …
wine சாப்டா இதயத்துக்கு நல்லது ….
குடிச்சா நல்லா சாப்பிடனும்…
only foreign சரக்கு மட்டும் தான் ….

இவ்வாறு பல்வேறு காரணங்களை கண்டு கொண்டு, “மது” பலரது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப் போனது … இந்த மக்களின் மனநிலை மாற்றம் தான் மிகப் பெரிய சவால்…

“மது” நிலை மாற்றம் தகர்த்தது இன்றைய சமுதாயத்தை மட்டுமல்ல எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வும் தான் என்பதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்கவேண்டும்…

நாம் விவாதித்த விவாதிக்கும் விவாதிக்கப் போகும் பல்வேறு காரண காரியங்களும் “மது” தீங்கு சார்ந்த சிறு முன்செல்லும் மற்றம் என்பது திண்ணம். நிச்சயம் அவை அனைத்தும் நடக்க வேண்டும். மது கடைகளின் எண்ணிக்கை குறைய வேண்டும். அரசு மது விற்கக் கூடாது. முழு மதுவிலக்கு அவசியம். ஆனால் இவை எல்லாம் தாண்டி மக்களின் மன மாற்றம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வு…

வள்ளுவரின் 10 குறள் வேண்டாம் …. இந்த ஒரு குறள் நிச்சயம் உங்கள் மனதைக் கேள்வி கேட்கும் ….

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.

பொருள்:
உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

மன மாற்றம் தான் வழி …. நடக்கும் என்று நம்புவோமாக….

மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 4

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற இரண்டாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/30/மதுவிலக்கு-சாத்தியமா-2/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முன்றாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: : http://www.ganapathi.me/2015/09/01/மதுவிலக்கு-சாத்தியமா-3

இந்தப் பதிவில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் (நான்காவது பகுதி) உங்கள் பார்வைக்கு (இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது).

தொடர்ச்சி ….

அரசுக்கு புதிய வருவாய் வழிகள்:

அரசுக்கு வருவாய் வருவதற்கு ஆயிரம் வழிமுறைகள் இருக்கின்றன. அரசியல்வாதிகளின் இலஞ்ச-ஊழல், முறைகேடுகள் காரணமாகவும், அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இன்மையாலும் அரசுக்கு முறையாக வரவேண்டிய வருவாய் வருவதில்லை.

மதுவிலக்கை அமல்படுத்தினால் டாஸ்மாக் வருமானம் 30 ஆயிரம் கோடி போய்விடும் என்று பதறும் தமிழக அரசுக்கு, மாற்று வருவாய் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி ”தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம்”(த.பொ.மூ.பொ.ச) ரூ.5 லட்சம் கோடி வருவாய்க்கும், 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இக்கையேடு 24-07-2015 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில் த.பொ.மூ.பொ.சங்கத்தைச் சார்ந்த திரு.வீரப்பன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பொறியாளருமான முனைவர்.முத்துக்குமரன் அவர்களும், ”மது இல்லாத் தமிழகம் கற்பனையா” புத்தகத்தின் ஆசிரியர் அருணபாரதி அவர்களும், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக நானும் கலந்துகொண்டோம்.

அக்கையேட்டில் உள்ள 5 லட்சம் கோடி வருவாய்க்கு வழிசொல்லும் திட்டங்களில் சில குறிப்பிட்ட திட்டங்கள்…

– உள்ளாட்சி அமைப்புகளில்(பஞ்சாயத்து,பேரூராட்சி, நகராட்சி) உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்களின் வண்டல் மண்ணை தூர்வார வெளிப்படையான ஏலம் விடுவதன் மூலம் – ரூ. 5000 கோடி கிடைக்கும். இதனால் நிலத்தடி நீரும் பெருகும்.

– இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள ஆயிரக்கணக்கான கோயில்களுக்குச் சொந்தமான விளைநிலங்கள், வாடகை இடங்களில் முறையாக வரி/கட்டணம் வசூலித்தல் மூலம் – ரூ.5000 கோடி

– இலட்சக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் – ரூ.10,000 கோடி

– வீட்டுமனை உருவாக்கத் திட்டம்(Housing Layouts), கட்டிட அனுமதி, சொத்துவரி போன்றவற்றை முறைப்படுத்துவதன் மூலம் – ரூ. 3.5 லட்சம் கோடி

– பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை மிகக்குறைந்த விலைக்கு கொடுக்கும் கொள்கையில் மாற்றம் செய்தால் – ரூ.20000 கோடி

– சுற்றுலாத் தலங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் கூடுதம் வருவாய் – ரூ.5000 கோடி

– இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பொதுஇடத்தில் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் – ரூ.10000 கோடி

பழுத்த அனுபவமும், தீவிர சமூக அக்கறையும் கொண்ட மூத்த பொறியாளர்கள் ரூ.5 லட்சம் கோடி மாற்று வருவாய்க்கு வழிகாட்டியுள்ளனர். இதில், 10% தொகையான ரூ.50 ஆயிரம் கோடி கிடைத்தாலே போதும் டாஸ்மாக் வருமானம் இல்லாமல் அரசை நடத்திவிடலாம். கூடுதல் வருவாயை வேறு மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
இயற்கை வளங்களை முறையாக நிர்வகிப்பதின் மூலம்:

ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட், கிராவல் மண் போன்ற இயற்கை வளங்களை முறையாக நிர்வகிப்பதின் மூலம் மட்டுமே மதுவிலக்கினால் ஏற்படும் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டிவிடமுடியும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழகம் நன்கறிந்த சமூகப் போராளியுமான முகிலன்.

முகிலன் முன்வைக்கும் மாற்று வருவாய் திட்டம்:

ஆற்று மணல் குவாரிகளை முறைப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் – ரூ.13100 கோடி

தாதுமணல் விற்பனையின் மூலம் கூடுதல் வருவாய் : ரூ.14560 கோடி

கிரானைட் விற்பனையின் மூலம் – ரூ. 10950 கோடி

மொத்தம் – ரூ. 38610 கோடி
தனியாரிடம் இல்லாமல் அரசே இயற்கை வளங்களை நிர்வகிக்கும்போது அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் ; சுற்றுசூழலும் காக்கப்படும்.

நல்ல அரசாங்கம் என்பது…

ஒரு நல்ல அரசாங்கம் நியாயமான வழிமுறைகளின் மூலமும், நியாயமான வரிகளின் மூலமும் எவ்வளவு நிதி திரட்டமுடிகிறதோ அதைவைத்துத்தான் பட்ஜெட் போடவேண்டும். திருட்டுத்தொழில் செய்து சொகுசு வசதியோடு வாழ்ந்த குடும்பம், நியாயமாய் வாழ விரும்பினால் ஆடம்பரங்களைத் தவிர்த்து உள்ளதை வைத்துத்தான் வாழவேண்டும். ஆடம்பர வசதி கிடைத்தால்தான் ஒழுக்கமாய் வாழ்வேன் என்ற வாதத்தை ஏற்கமுடியாது.

குஜராத்தில் சாராயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லை. கிட்டத்தட்ட நம்முடைய பட்ஜெட் அளவிற்குத்தான் அவர்களுக்கும் வருவாய் வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில்(2015-2016), வரவையும் செலவையும் கழித்துவிட்டுப் பார்த்தால் குஜராத் பட்ஜெட்டில் ரூ.125 கோடி மிச்சம் இருந்தது(Fiscal Surplus). சாராய சாம்ராஜ்யம் நடக்கும் தமிழகத்திலோ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.31829 கோடிக்கு பற்றாக்குறை (Fiscal Deficit) இருந்தது.

ஆக, சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்தவேண்டும் என்பது தார்மீக ரீதியில் அவசியம்.

******** அறிக்கை முடிவு ******

இந்தக் தொடர் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல்:

1) எல்லா அண்டை மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்படவில்லை; தமிழகத்தில் மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், மக்கள் மரணமடைவர்;
2) மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ???) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும்

என்கின்ற இரண்டு பெரும் கேள்விகளுக்கு விடை காணாமல் மதுவிலக்கு சாத்தியமில்லை, என்கின்ற மக்களின் மனநிலையில் இருந்து இந்தக் கருத்துக்கள் பகிரப்பட்டன.

கடந்த பதிவுகளில் உள்ள தகவல்கள் மூலம் சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்தமுடியும் என்பது பொருளாதார ரீதியில் சாத்தியம் என்கின்ற கோணத்தில் நாம் நிச்சயமாக சிந்திக்கலாம் என்கின்ற நம்பிக்கை கிடைத்திருக்கும். “மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ???) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும்” என்கின்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளது என்பது திண்ணம்.

அடுத்த தொடர் பதிவில் “கள்ளச் சாராயம் பெருகும்” என்கின்ற கேள்விக்கு உண்டான பதில், மற்றும் இந்த நீண்ட “மதுவிலக்கு” விவாதத்தில் என் நண்பர் ஒருவர் சொன்ன மற்றும் ஒரு கோணம் உங்களுக்காக ….

மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 3

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற இரண்டாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/30/மதுவிலக்கு-சாத்தியமா-2/

இந்தப் பதிவில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் (மூன்றாவது பகுதி) உங்கள் பார்வைக்கு (இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது).

தொடர்ச்சி ….

2. எதிர்காலத்தில் செய்யவேண்டியது:

ஆண்டுதோறும் தரும், வட்டித்தொகையை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும்.
மிச்சமாகும் தொகை: ரூ.893 கோடி (வருடத்திற்கு )

இந்த, எளிமையான வழிமுறைகள் மூலமே, மொத்தத்தில் : ரூ.12042 கோடி மிச்சமாக்கலாம். வட்டித் தொகையை குறைக்கவாய்ப்பில்லை, மின்சார-உணவு மானியத்தை மேற்சொன்ன அளவுக்குக் குறைக்க வழியில்லை என்ற நிலையிலும் குறைந்தபட்சமாக பத்தாயிரம் கோடிக்கு மேல் மிச்சமாவது நிச்சயம்.

அதாவது, அனாவசிய இலவசப் பொருட்களைத் தவிர்த்து, மானியங்கள் வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களைந்தாலே பட்ஜெட்டிற்கு ரூ.10000 கோடி கூடுதலாகக் கிடைக்கும். இது டாஸ்மாக்கில் சம்பாதிக்கும் வரித் தொகையில்
(ரூ.29672) மூன்றில் ஒரு பங்கை ஈடுகட்டும்(33%)….

1. விற்பனை வரி அதிகரிக்கும்…
தமிழகத்தின் சொந்த வரிவருவாயான 96082 கோடியில், 72068 கோடி விற்பனை வரி மூலம் வருகிறது.

டாஸ்மாக் மூலம் வரும் விற்பனை வரியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழகத்தின் தற்போதைய விற்பனை வரியானது கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி என்ற அளவில்தான் உள்ளது. நியாயமாக தொழில் நடத்தும் சில வியாபரிகளோடு பேசியபோது விற்பனை வரி அதிகாரிகள், வரிவசூல் செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை. ஆடிட்டர்கள் மூலம் தேவையான லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு விற்பனை வரி முறைகேட்டைக் கண்டுபிடிப்பதில் கோட்டைவிட்டுவிடுகின்றனர் என்றே தெரிவிக்கின்றனர்.
இதிலுள்ள, வரிஏய்ப்பை குறைத்தால் அரசுக்கு கணிசமான விற்பனை வரி அதிகரிக்கும். தொழில் முனைவோர்களிடம் பேசியபோது 20% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர். இருந்தபோதும், நாம் 10% விற்பனை வரி மட்டுமே அதிகம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால்கூட அரசுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் வரி ரூ.5000 கோடி. அதாவது, விற்பனை வரி வசூலில் முனைப்புக் காட்டி, இலஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலே அரசிற்கு கூடுதலாக ரூ.5000 கொடி கிடைக்கும்.

இப்போது டாஸ்மாக் தொடர்பான விற்பனை வரிக்கு வருவோம்.

2015-16 டாஸ்மாக் மூலம் அரசுக்கு வரவுள்ள மொத்த வரியானது ரூ.29672 கோடி.
இதில், ரூ.22375 கோடி விற்பனை வரியாகவும், ரூ.7297 கலால் வரியாகவும் வருகிறது.
இந்த 29672 கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டுவது எப்படி என்பதுதான் மதுவிலக்கு விவாதத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது.

எதார்த்தமாகப் பார்த்தால், மதுவிலக்கை அமல்படுத்திய பிறகு டாஸ்மாக் கடைகளுக்கு சென்றுகொண்டிருந்த பல ஆயிரம் கோடிப்பணத்தில் பெரும்பகுதியானது, வேறு வகைகளில் செலவழிக்கப்படும்( உடைக்கோ, உணவுக்கோ..பிற) அப்படி, பிற வகைகளில் செலவழிக்கப்படும்போது அரசுக்கு கிடைக்கும் விற்பனை வரியானது அதிகரிக்கும். இந்த விற்பனை வரி அதிகரிப்பு, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வரி வருவாயில்(ரூ.29672 கோடி) 20% ஆக இருந்தால் கூட ரூ.5934 கோடி கிடைக்கும்.
புரிதலுக்காக, ரூ.6000 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

இந்த சமயத்தில் ராஜாஜி அவர்கள் 1937ல் மதுவிலக்கைக் கொண்டுவந்தபோது, விற்பனைவரியை அறிமுகப்படுத்தியதின் பின்ணனியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மக்கள் இதுவரை சாராயத்திற்கு செலவழித்த பணத்தை உணவுப்பொருட்கள், துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்று வேறு ஏதேனும் வாங்குவதற்கு செலவழிப்பர்.

அப்படிப் பொருட்கள் வாங்கும்போது அதில் சிறுதொகையை வரியாக, விற்பனை வரியாக சேர்த்துவிட்டல் அரசுக்கு அதிலிருந்து கூடுதல் வரிவருவாய் வரும். இந்த அடிப்படையில், இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்ராஸ் மாகாணத்தில் 1937ல் விற்பனை வரியை ராஜாஜி கொண்டுவந்தாஅர். ( பம்பாய் மாகாணத்தில் 1938ல் தான் விற்பனை வரி அறிமுகமானது)

ஆக, விற்பனைவரியை முறையாக வசூலிப்பதன் மூலம் ரூ.5000 கோடியும்; மதுவிற்காக செலவிடப்பட்ட பணமானது வேறு வழிகளில் செலவிடப்படும்போது கூடுதலாகக் கிடைக்கும் விற்பனை வரியாக ரூ.6000 கோடியும் கிடைக்கும் என்று தெரிகிறது. மொத்தத்தில் ரூ.11,000 ஆயிரம் கோடி. இது, டாஸ்மாக் மூலம் கிடைத்துவந்த வரிவருவாயில் (ரூ.29672) மூன்றில் ஒருபங்கை ஈடுகட்டும் (37%)
ஆகவே, மதுவிலக்கை அமல்படுத்தினால் பட்ஜெட்டில் 30 ஆயிரம்கோடி துண்டுவிழும் என்பதெல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் “தெரிந்தெ சொல்லும் அப்பட்டமான பொய்”. எளிதாய் வந்துகொண்டிருக்கும் டாஸ்மாக் வருமானத்தை விட்டுவிட்டு எதற்காக மெனக்கெட வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.

டாஸ்மாக் வருமானம் மூலம் அரசு கஜானாவை நிறைத்துவிட்டால், விற்பனை வரி மற்றும் பிற சட்டங்களைக் காட்டி மிரட்டி வணிகர்களிடம் பெருந்தொகையை இலஞ்சமாகப் பெறுவது எளிது. கட்சியினர் நடத்தும் மாநாடுகளுக்கு வசூல் செய்வது எளிது. முறையாக விற்பனை வரியை வசூலிக்க ஆரம்பித்துவிட்டல், கட்சிக்காரர்கள் வணிகர்களிடம் இலஞ்சம் கேட்கமுடியாது. நாம் அறிந்தவரை, வணிகர்கள் முறையாக வரிகட்டத்தான் விரும்புகிறார்கள். இலஞ்சம் கொடுப்பதை விரும்பவில்லை. ஆனால், அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் சிக்கலான வியாபார விதிமுறைகள், வரி விதிப்பை எளிதாக்க முன்வருவதில்லை. ஆகவே, வணிகர்கள் வேறு வழியில்லாமல் இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்

………………………………….

இந்த அறிக்கையின் இறுதிப் பகுதி [அரசுக்கு புதிய வருவாய் வழிகள், முகிலன் முன்வைக்கும் மாற்று வருவாய் திட்டம்…] போன்ற தகவல்கள் அடுத்த பதிவில் ….  

மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 2

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/

இந்தப் பதிவில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் உங்கள் பார்வைக்கு (இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது)

மதுவிலக்கினால் ஏற்படும் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி
மதுவிலக்கு என்ற கோரிக்கையைக் கேட்டவுடன், அரசு அதிகாரிகள், மதுவிலக்கு அமைச்சர் அனைவரின் வாயிலிருந்தும் உடனடி வார்த்தைகள் இரண்டு. ஒன்று கள்ளச்சாராயம். மற்றொன்று, அரசுக்கு வருவாய் இழப்பு. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் தமிழக அரசு திவாலாகிவிடும் என்ற மாயத்தோற்றத்தை அரசாங்கமே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இது உண்மையா…? சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாதா..? முடியும். புள்ளிவிவர ஆதாரத்தோடு விளக்குகிறோம்.

மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வழிமுறைகள்:

1. செலவுகளைக் குறைப்பது
2. வரவுகளை அதிகரிப்பது
3. குடிப்பதற்காக செலவழிக்கப்பட்ட பணம் பிற செலவினங்களில் செய்யப்படும்போது அரசுக்கு வரிவருவாய் அதிகரிக்கும்.

செலவுகளைக் குறைப்பது:

செலவுகளைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் போது, இப்போது அரசுக்கு உள்ள செலவுகள் என்ன என்று பார்த்துவிடுவோம்:

ரூ.1,47,297 கோடி வருவாய் செலவினம் (Revenue Expenditure) தொடர்பான அரசாங்கத்தின் செலவுகளை நான்கு வகையினங்களில் அடக்கிவிடலாம்..

1. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் ( 41 %)
2. இலவசங்கள், மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை ( 40% )
3. இலவசங்களை வினியோகிக்க,பரமாரிக்க ஆகும் செலவு ( 7% )
4. வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டி ( 12 % )
மேற்சொன்ன நான்கு வகையினங்களில் எந்த செலவைக் குறைக்கமுடியும் என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..

முதலாவதாக உள்ள அரசு ஊழியர், பென்சனை குறைப்பது உடனடி சாத்தியமில்லை. வரும் ஆண்டுகளில் வேண்டுமானால் மிகவும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம். 2015-16 பட்ஜெட்டில், ரூ.1,47,297 கோடி செலவில் அரசு ஊழியர் சம்பளம்(ரூ.41215 கோடி), பென்சன்(ரூ.18667 கோடி) என மொத்தம் ரூ.59882 கோடி இந்த வகையில் செலவாகிறது( 41%)
இரண்டாவதாக உள்ள இலவசங்கள், மானியங்களில் கணிசமாகக் கைவைக்கலாம். 2015-2016ல் இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகை: ரூ.59185. இது பட்ஜெட்டில் 40%. பள்ளி மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் சீருடை, புத்தகம், புத்தகப்பை போன்ற சில பொருட்கள் மற்றும் முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் இலவசம் போன்ற அரசாங்கம் கட்டாயம் செய்யவேண்டிய சேவை தொடரவேண்டும்.
ஆனால், மிக்சி-கிரைண்டர்-பேன், ஆடு-மாடு, திருமண உதவி-தாலிக்குத் தங்கம், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்களை எல்லாம் கட்டாயம் தவிர்க்கமுடியும். 2011 முதல் 2016 வரையான காலகட்டத்தில் இந்த 4 திட்டங்களுக்கு மட்டும் செலவழிக்கப்பட்ட தொகை: ரூ.18749. சராசரியாக வருடத்திற்கு: 3750 கோடி. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து இதுபோன்ற இலவசங்கள் தரப்படுகிறது. வருங்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டால் ஆண்டிற்கு ரூ.3750 கோடி மிச்சமாகும்.

உணவு மற்றும் மின்சார மானியம்:
அனைவருக்கும் 20கிலோ அரிசி கொடுக்கும் உணவு மானியத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால் ரூ.1660 கோடி சேமிக்கலாம்.( கடந்த 5 ஆண்டுகளில் தரப்பட்ட உணவு மானியம்: 24900 கோடி; வருடத்திற்கு சராசரியாக: ரூ.4980 கோடி. போலி ரேசன் அட்டைகள், ஊழல்-முறைகேடுகளைத் தவிர்த்தால் இதில் சரிபாதி (50%) குறைக்கமுடியும். இருந்தபோதும் மூன்றில் ஒருபங்கை(33%) குறைப்பது என்ற அடிப்படையில் கணக்கிட்டாலே ஆண்டுக்கு ரூ.1660கோடி மிச்சம் பிடிக்கலாம்) .

உணவு மானியத்தில் கடைப்பிடித்த அதேமுறையில் கணக்கிட்டால் தற்போது செலவழிக்கப்படும் ரூ.22430 கோடி மானியத்தில்(2015-16) ரூ.1495 கோடி குறைக்கலாம். ( குறிப்பாக மின்சார திருட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தினால்)
மூன்றாவதாக உள்ள ”இலவசங்களை வினியோகிக்க,பரமாரிக்க ஆகும் செலவு” என்ற வகையானது அதிர்ச்சி தரும் ரகம். கடந்த 5 ஆண்டுகளில் இதற்கு ஆன செலவு: ரூ.42441 கோடி(சராசரியாக ஆண்டிற்கு 8488 கோடி). அத்தியாவசியமான இலவசங்களை மட்டும் தொடர்ந்துகொண்டு அனாவசியமான இலவசங்களைத் தவிர்த்தால்,அதற்கான செலவும் குறையும். அதை, வினியோகிக்கும் செலவும் குறையும். இதில், 50% குறைந்தாலே வருடத்திற்கு ரூ.4244 கோடி மிச்சமாகும். மேலும், இலவசங்களை தமிழகமெங்கும் வினியோகிக்கும் இத்திட்டத்தில் பெருத்த ஊழல் நடக்க வாய்ப்பிருக்கிறது.

நான்காவதாக உள்ள செலவினம். வாங்கிய கடனுக்குக் கட்டும் வட்டி.
பன்னாட்டு நிதி நிறுவனங்கள், உலக வங்கியிலிருந்து கடன் வாங்குவதை குறைத்துவிட்டு எல்.ஐ.சி, நபார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன்வாங்கும்போது வட்டி கணிசமாகக் குறையும். ஏற்கனவே வாங்கிய கடனில் முழுமையாக மாற்றம் செய்ய முடியாது. ஆகவே, இனிவரும் காலங்களிலாவது இதைச்செய்யவேண்டும். (2015-2016ல் ரூ.30,446 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.) இதைச் செய்வதால் ஆண்டுக்கு பலநூறு கோடிகள் மிச்சமாகும். தோராய மதிப்பீட்டின் அடிப்படையில் 2015-2016ம் ஆண்டு கட்டப்படவுள்ள ரூ.17856 கோடியில் , ஐந்து சதவீதம் குறைந்தால்கூட அதிலிருந்து ஆண்டிற்கு ரூ.893 கோடி மிச்சமாகும்.

மொத்தமாகப் பார்த்தால்,

1. உடனடியாக செய்ய வேண்டியது:

அனாவசியமான இலவசத்திட்டங்களை அறிவிக்காமல் இருக்கவேண்டும். மானியங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

இதனால்,வருடத்திற்கு மிச்சமாவது: ரூ. 11149 கோடி.

[அனாவசிய இலவசங்களை நிறுத்துவதன் மூலம்: ரூ. 3750 கோடி

இலவசங்களுக்கான வினியோகம், பராமரிப்பு செலவைக் குறைப்பதன் மூலம்: 4244 கோடி

உணவு மானிய ஓட்டைகளை அடைப்பதன் மூலம்: 1660 கோடி

மின்சார திருட்டைத் தடுத்து, சிக்கனத்தைக் கடைபிடித்தால்: ரூ.1495 கோடி ]

…………………………

இந்த அறிக்கையின் அடுத்த பகுதி [எதிர்காலத்தில் செய்யவேண்டியது, விற்பனை வரி…] போன்ற தகவல்கள் அடுத்த பதிவில் …. 

மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 1

ஆரம்பித்து விட்டது தமிழக சட்டசபைக்  கூட்டத் தொடர். இரங்கல் தீர்மானமும் முடிந்து விட்டது. அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு இரங்கல் இல்லை. மதுக்கடையில் தீயில் மாண்ட ஊழியருக்கு சில லட்சங்கள் நிவாரணம் அறிவித்த அரசு, மதுவுக்கு எதிரான போராட்டத்தில் களப்பணியில் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இரங்கல் தீர்மானம் கூட வாசிக்காதது வருத்தம்தான். எதிர்க்கட்சிகள், இரங்கல் தீர்மானத்தில் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என முதல் நாளே சபாநாயகர் மீது புகார் தெரிவித்தனர். மிகவும் சிக்கலான சமயத்தில் கூட்டப்பட்டிருக்கும் சட்டசபைக் கூட்டத் தொடர் இது. மதுவிலக்கு குறித்து மிகவும் வேகமான வாதங்களும் விவாதங்களும் வாதப் பிரதிவாதங்களும் கண்டிப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

முதல்நாள் பத்திரிக்கை செய்திகளைப் பாருங்கள்: [நன்றி தினமலர்]

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தனிநபர் தீர்மானம் கொண்டு வர, சபாநாயகரிடம், என் பெயரில் மனு கொடுத்துள்ளோம் – தி.மு.க., – ஸ்டாலின்
தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, தனிநபர் மசோதா கொண்டு வர, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். – காங்., – விஜயதாரணி
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, தனி தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.- இ.கம்யூ., – ஆறுமுகம்

தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர், இல்லையேல் சர்வ நிச்சயமாக அவர்களும் இது போல் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்திருப்பர்.

சசிபெருமாள் அய்யா அவர்களின் மரணமும் அது சார்ந்த அரசியல் சமூக நிகழ்வுகளும் குறித்த என் கட்டுரை உங்கள் மீள்பார்வைக்கு: http://www.ganapathi.me/2015/08/03/சசிபெருமாள்-ஐயா-மரணமும்/ 

மதுவிலக்கு கொண்டு வருவதைக் காட்டிலும், “மதுவிலக்கு” என்கின்ற சொல்லை தேர்தல் ஆதாயமாக அனைத்துக் கட்சிகளும் பாரபட்சமின்றி உபயோகப்படுத்திக் கொள்ள முந்துகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவு.

இந்த சரியான தருணத்தில் சென்னையில் “சட்ட பஞ்சாயத்து” இயக்கத்தின் நண்பர்கள் சட்டசபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். ஜெய்கணேஷ், செந்தில் ஆறுமுகம், வராஹி சித்தர், கும்பகோணம் அயூப்கான் ஆகிய நால்வரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து இயக்கப் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்தின் வேண்டுகோள்..

“முடிந்தால் ஓரிரு மணி நேரமோ அல்லது ஒரு நாளோ உண்ணாவிரதம் மெற்கொண்டுவரும் நம் இயக்க அலுவலகத்திற்கு வாருங்கள்(31, தென்மேற்கு போக் சாலை,தி.நகர்) இல்லையேல் நீங்கள் அனைவரும் குழுவாக ஓரிடத்தில் அமர்ந்து(வீடு, அலுவலகத்தின் உள்ளேயே கூட) உண்ணாவிரதம் மேற்கொண்டு அதன் புகைப்படத்தை sattapanchayat@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்….

மதுவிலக்கு கோரிக்கை என்பது ஆயிரம் மைல் பயணம். இந்தப்போராட்டமும் நம் இலக்கை நோக்கி சில அடிகள் முன்னேறிச்செல்ல உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம்…

இணந்து பயணிப்போம்… வாருங்கள்…”

இன்று நண்பர்களை சட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி வந்தேன்.

நேற்று செந்தில் ஆறுமுகம் அவர்கள் பத்திரிகை.com ல் மதுவிலக்கு தொடர்பாக எழுதிய கட்டுரை: “மதுவிலக்கு: மனமிருந்தால் மார்க்கமுண்டு!” [ http://patrikai.com/manamirundhal-markkamundu.html ]

இன்று எங்களது சந்திப்பில் மதுவிலக்கு தொடர்பான சில முக்கியக் கேள்விகளை செந்தில் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டேன்.

குறிப்பாக,
1) எல்லா அண்டை மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்படவில்லை; தமிழகத்தில் மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், மக்கள் மரணமடைவர்;
2) மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ???) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும்

என்கின்ற இரண்டு பெரும் கேள்விகளுக்கு விடை காணாமல் மதுவிலக்கு சாத்தியமில்லை, என்கின்ற மக்களின் மனநிலையில்; “மதுவிலக்கு சாத்தியமா?” என்கின்ற தொனியில் எங்கள் உரையாடல் நிகழ்ந்தது. இந்த கேள்விகளுக்கு செந்தில் ஆறுமுகம் பத்திரிகை.com ல் எழுதிய கட்டுரையில் சில தீர்வுகளும் வரலாற்று நிகழ்வுகளும் குறித்து எழுதியுள்ளார். இந்தக் கருத்து தாண்டி நிதிப்பற்றாக்குறை மற்றும் கள்ளச்சாராயம் குறித்த ஒரு தெளிவான பார்வையும் சிந்தனையும் சட்ட பஞ்சாயத்து செந்தில் ஆறுமுகம் அவர்களிடம் இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு நிதிக் குறிப்புடன் கூடிய ஒரு வரைதிட்டத்தை அவர் என்னிடம் விவரித்தார். ஏற்கனவே இந்த வரைதிட்டம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் தான்.

வரைதிட்டம் மற்றும் அதிகத் தகவல்கள் அடுத்த பதிவில் …..