ஒற்றை “மந்திரச் சொல்லில்”

முதல் அடி எடுத்துக் கொடுத்தான்  
இறைவன், 
பக்தியில் தமிழ் வளர்த்தான் 
என் முப்பாட்டன்… 
 
உன் முதல் மற்றும் இறுதி 
அடி கொண்டு என் நிலை 
சொல்லும் கவிஞன் நான் …
தமிழ் சாருமோ இல்லையோ 
உன் மனம் சாரும் வரம் கேட்டேன் …
 
கடவுளுக்கு மேல் நீ 
எனக்கு… 
உன் சொல்லாத வார்த்தை 
ஓன்று போதும், 
நிலை கொள்ளும் தளம் 
எனக்கு…
 
கவிதையாய் நான் 
வார்த்தையாய் நீ …
உவமையாய் நான் 
உருவமாய் நீ  …
 
“அந்த ஒற்றை மந்திரச் சொல்
கொண்டு மூடிக்கிடக்கும்
உன் இதயத்தை என்னால்
திறக்கவும் முடியும்…” 
 
இதுதானே உன் முதல் வரி… 
இது என்னுடைய முகவரி…
எனக்கு உன் வாழ்வில் நீ 
தந்த நிலையான முகவரி… 
 
வார்த்தையின் விளையாட்டு 
எந்த ஒற்றை சொல் அது 
சொல்; செயல் ஆகுமா? 
என்கின்ற தொக்கிய 
வினை….
 
சொல் செயல் ஆகவேண்டும் 
என்கின்ற எதிர் வினை 
செயல் உணர்ந்து சொன்ன வார்த்தை 
செயல் மறைத்து தந்த வார்த்தை
 
செயல் உணரும் நீ
செயல் நுகரும் நீ 
செயல் விரும்பும் நீ  
சொல்லாய் உறைந்த விதை… 
 
உன் வினை உறைந்து 
போனது உண்மை 
என் வினை உன்முனை 
நோக்கி நகர்வதும் 
உவமைதான் 
அந்த செயலின் 
உருவமும் நீதான் 
உருவகம் நீதான் …
 
எந்த ஒற்றைச் “சொல்”
சிந்திக்கிறேன் ….
தமிழ் தாய் தந்த 
கொடை 
வானத்து நட்சத்திரமாய் 
வார்த்தைகள் 
நீ சொன்ன சொல் 
“துருவ நட்சத்திரமாய்” என் முன்… 
 
சொல்ல முற்பட்ட 
சொல்லாய் நான் …
இல்லை 
நீ மீண்டும் உதிர்த்த 
“மந்திரச் சொல் “
 
அந்த ஒற்றை மந்திரச் சொல்
கொண்டு சோ வென்று
மடை திறந்து பேசும் உன் உதட்டிற்கு
தாழிடவும் முடியும்…
 
உண்மை …
மீண்டும் உறைவோம் நாம்…
ஒற்றை “மந்திரச் சொல்லில்”…

மாற்றம் வேண்டி

மனதைக் கொண்டு மணி மகுடம் கண்டோம்
நாம் உனக்கு…
உன் மணி மகுடம் கீழிறங்கா கனவு
கொண்டோம் சூளுரைத்து !!!
அல்லவை ஓங்கும் நேரம், உன் நினைவு
தடம் மாறும் தருணமிது …
எவரும் கொண்டாடும், “எவ்வழி” வந்தோரும்
என் பொருட்டல்ல.

“இவரே” எனக் கொண்டாடும் உண்மைப்
புகழ் நிலைத்திருக்கும் உணர்வாய் நீ…
உன் செயல் சொல்லும் செய்தி சுற்றம்
பார்க்கச் செய்திருப்பாய்…
சுற்றம் உன்நிலை கொள்ளும், உண்மையல்ல
மண்சரடு மட்டுமிங்கு !!!
தோள் சுமந்து கொண்டாடிய காலமின்னும்
பசுமையாய் நினைவென் நெஞ்சத்தில்
தோள் மீறி வளர்ந்த உன்செயல் யாவும்
பட்டமரம் உணர்வொத்த பகுதிதானின்று…

சிறு கவிதையாய் வாழ்க்கை உண்டு, புகழோடு
வாழப் பலவழியுமுண்டு
வாழ்தலே சில நேரமிங்கு வசந்தமாய்
பரிமளிப்பதுண்டு

மாற்றம் மட்டுமே நிரந்தரம், உண்மையறியா
பேதையல்ல நான் …
நல் மாற்றமிங்கு நிரந்தரமாய் நிலைக்க
பேராற்றலிடம் இறைஞ்சி நான் ….

காட்சியும்-கவிதையும்: உயிரின் உயிரில்

காட்சியும்-கவிதையும்

தன் முதல் குழந்தை ஒரு கைபிடித்து நடந்து வருகிறது. மறுகை பிடித்து மனைவி நடந்து வருகிறாள். மனைவின் மறுகை கர்ப்பம் சுமக்கும் வயிற்றின் மீது…. ஆணின் சிந்தனை ஓட்டம் கவிதையாய்….இசையாய்…

பல்லவி

என் உயிரின் இசையாய் ஆனவளே
என் உயிரின் கவிதை சுமப்பவளே
இசைந்து உரசும் காற்று இசையாய் இனிமை சேர்த்ததடி
அன்பால் நாம் இசைந்து வடித்த ஒரு கவிதை என் கையிலடி
அன்பின் கரை காணா மகிழ்ச்சியின் மறுவடிவம்…மீண்டும் ஒரு கவிதையடி

சரணம்

தாயாய் நீ ஆனாயடி
என் தாரமாய், நீ என் வாழ்வில் நிறைந்தாயடி
நீயும் எனக்கு ஒரு குழந்தைதானடி ….

உனக்கு ஒரு குழந்தை தானடி, எனக்கோ இரண்டும் குழந்தையடி
தாயுமானவன் கதை கேட்டதுண்டு; இன்று என் வாழ்வும் வடிவமும் ஆனதடி
என் பிறப்பின் பரிணாமம் உன் உருக் கொண்டு நிறைந்ததடி ….

சிறு நடையாய் நீ நகர்ந்தாயடி, இரு உருவம் உன் நிழலாய் தொடர்ந்ததடி
என் உயிரின் முழு நாடி நீயடி, உன் உறவும் உன் பார்வையும் தவிர வேறேன்ன வேண்டுமடி
இந்தக் கல்லுக்குள்ளும் ஈரமடி, என் வாழ்கைக்கு உன்வரவு புது இளவேனிலடி …

எந்த மழலையின் சிரிப்பும் இனிமையடி, நம் கவிதையின் உயிரும் அதுதானடி
மழலை உயிர்மாறும் பெண்மையடி, அந்தப் பெண் சிரிப்பு அதனினும் அமிர்தமடி
பிரபஞ்ச ரகசியம் உணரும்படி, ஈரைந்து மாதம் நான் உன் அருகிலடி …

உன் உருவில் மாற்றமடி; உளிபடும் கல்லாய் நீயடி…. சிலையின் நளினம் நம் குழந்தையின் சிரிப்படி
மீண்டும் வலி காணும் மனம் கொள்தல் எளிதன்றடி …அன்பை மீண்டும் நிறைசெலுத்த நீ துணிந்தாயடி …
இசையின் வழி வந்த கவிதையடி… மீண்டும்…உயிராய் உன் உயிருள் ஒரு கவிதையடி….

இருத்தல் நலம்

தீ பற்றி எரியும்
நேரம்
வெப்பத்தின் வெம்மை தவிர்க்க
நிலை கொள்வோம் …

மனிதனின் மனம்
வினோதம் மட்டுமல்ல
சில வார்த்தைகளின்
விபரீதம் கூட …

உடல் விடுத்த
ஆன்மா… உன் வார்த்தை
கொள்ளும்
ஆப்பசைத்த குரங்காய் நீங்களும் !!!

வெறுக்கும் எண்ணம்
சொல்லும் வார்த்தை
உங்கள் நிலை சொல்லும்
உண்மை இன்று …

“ஆதிக்கம்” என்பது
வார்த்தை மட்டுமில்லை
உங்கள் வாழ்கை முறைதான்
வார்த்தை நீக்கும் நீங்கள்
உங்கள் வாழ்க்கை முறை
மற்றுமோர் நாள் எது …

மாயை எதிர்த்துப்
போராடும் என்போன்றோர் இனம்,
உலகை மாயை கொள்ளும்
உங்கள் போன்றோரின்
சுயநிறம் தெரியாமர்ப் போனோம் …

கபட வேடம்
சமுதாயக் கருத்தாக்கம்
கவியின் வார்த்தை
சேவையின் கனிவு
நிறைந்த பிறழ்வு
தற்குறி வாழ்க்கை
உண்மை உங்களிடம்
மீண்டும் உணர்ந்தேன்…

நிகழ்வை நினைத்து
நிதம் பிதற்றும்
மனிதன் அல்ல
நான்…
நினைவு மாற்றி
நிதம் நிலைபெறும்
நீள் வழி செல்லும்
நீரும் நான் …

என் இருத்தலே
உனக்குச் செய்தி ….

நம் அறிவு

சாத்திரம் செய்தோம்
விஞ்ஞானம் வளர்த்தோம்
மெய்ஞானம் கண்டோம்
அஞ்ஞானம் தவிர்த்தோம்

கடல் கொண்டோம்
உழவு செழித்தோம்
வானம் கணித்தோம்
அறிவு பரப்பினோம்

சமூகம் கண்டோம்
அரசுமுறை செய்தோம்
உணவு வகைசெய்தோம்
நீதி  நிலைபெற்றோம்

அறிவின் விரிவு
அதி விரைவில்
அறியாமை ஆகிப்
போன மாயமென்ன…

அறிவியலின் பெயரால்
அறிவுப்பூர்வமான கேள்வி…
பரிசு பெற்றவன்
பகடி செய்கிறான்…

மாற்றம் ஆதரிக்கும்
உங்கள் கொள்கை….
உங்கள் “முடிவு”ம்
மாறும் என்பதறிந்துதான்…

எங்கள் “அறிவு”க்கு
உங்கள் அறிவுக்கான
ஆதாரம் இல்லாமல்
போகலாம் இக்காலத்தில்…

எங்கள் அறிவின்
பலம் “உணர்த்தல்”
உங்கள் நிலையின்
பலம் “பார்த்தல்”

பல்லிக்கும் கரப்பாணுக்கும்
பார்வை நம்மில்
வலிதாம்…
உங்கள் “அறிவியல்”
சொன்ன “உண்மை”

உணரும் “உயிர்”
பிரபஞ்ச சக்தியிடம்
கேட்டது ….
மனிதன் எல்லாவற்றையும்
கண்கொண்டு மட்டுமே
ஏன் காண விழைகிறான்…
“உணர்தல்” அரிதென்பதாலா…

சக்தி சிரித்தது…
“உயிர்” மட்டும்
பதில் உணர்ந்தது…

அழையாத நினைவு

அழையாத நினைவு
அநேகம் இங்கே…
அழையாத நினைவு
ஆயிரமாயிரம் இங்கே…
உணர்வுகளும் நினைவுகளாய்
அழையாத உயிர்ப்போடு….
அழையாத நினைவு
அனைவருக்கும் உண்டு…

அந்த முகம்
இன்னும்
என் நினைவில்

அந்த அடுத்த முகமும்
இன்னும்
என் நினைவில்

முதல் முகம்
உன்னது
மறு முகம்
உன்சொல் வடிவம்

மறு முகம்
எனக்கு பரிட்சயம்
உன்சொல் வேறு
உருவம் தந்தது…

பாலினம் ஒரு
பொருட்டா
என்ற கேள்வி
உண்மைதான்…

பாலினம் பொருட்டில்லை
உந்தன் உணர்வு
நிச்சயம் உந்தும்…

வேறு கேள்வி
வேறு பதில்
வேறு அர்த்தம்
தொக்கி நிற்கும்
உன் நிலை…

நீ கடிந்து
கொள்ளும்
மறு முகத்தின்
உண்மை முகம்
சற்றே
காட்சிப் பிழையானது…

உண்மை என்று
ஒன்று உண்டா..
என்ற கேள்வியின்
நீட்சம்
மனிதர்களுள் பல
வடிவில்….

உந்தன்
நிறை நிலை
பகை உறை
கழு இடை
வார்த்தையின் விளையாட்டு….

“உண்மை”…
காட்சிப் பிழையானது….
தூற்றிய வார்த்தை
அநாதையாய்
கேட்பார் அற்று
நிற்கும் பார் …

“சொன்னது நீதானா
சொல்…”
சொற்கள் உன்னை
எதிர்காலத்தில்
கேள்வி கேட்கலாம்…

மறுமுகத்தை போற்றி
மகிழ்ந்திரு…
வார்த்தைகள் மாறலாம்
உள்நினைவு மாறுமா?…

ஆம் …
அது உனது
அழையாத நினைவு….

நடுநிலையின் உரையாடல்

பேசாப் பொருள்
பேசுவோம்
என்று
பேசும்
பொருள் கொண்ட
என் நண்பனுடன்
மனம் திறந்த
உரையாடல்….

நடுநிலை என்றால்
என்ன?….
வணங்கி நின்றேன்
கேள்வியுடன்….

பல கருத்துக் கொண்ட
இந்நாட்டில்
பகடி செய்யப்படும்
மனிதரின் நிலை
அதுவென்றான்…

புரியவில்லை என்றேன்
நான் …
புன்னகை பிறந்தது
அவனது
உதட்டில்…

நீ “நடுவண்” என்று
கூற கூட
ஒரு நிலை சார்ந்து
நிற்கும் அவலம்
அதுவென்றான்…

நடுவென்பது நிலை
சார்ந்ததானது
எப்பொழுது என்றேண்ணி
திகைத்தேன்…
புன்னகை பூத்த
உதடுகளில்
பெருஞ்சிரிப்பு ஒன்று
இப்பொழுது…

நிலை இல்லாமல்
நிற்க நீ
என்ன “அருவமா”
என்றான்….
கருப்புச் சட்டைக்காரன்
ஏன் கடவுளை
துணைக்கு அழைக்கிறான்..
சற்றே குழம்பினேன்
நான்…

என் மனநிலை
உணர்ந்து கொண்டான்
உடனே…
உயிர் நண்பனல்லவா அவன்…
பெருஞ்சிரிப்பு சற்றே
மாறியது…
சிந்தனை மீள்ளுறு
கொண்டது…

கடவுள் இல்லை
என்பது நடுநிலை
இல்லை
நிலை சார்ந்த
கருத்து…..
“நிலை” சார்ந்ததால்
அக்கருத்து கூட
“நடுநிலை” எனக்
கொள்ளலாம் என்றான்
கவனமாக….

பதில் கேட்டு
வந்த
நபர் தவறோ…
என் மனமும்
பாதமும்
சற்றே பின்வாங்கியது…

தியானநிலை போல்
நிதானித்து
அமர்ந்தான் என்னெதிரில்…
சிரிப்பும் சிந்தனையும்
மறைந்து
நிலையில்லா நிலையுடன்
அவன் முகம்…

அறிவூட்டலுக்குத் தயாரானான்
அவன் …
அறிவுப்பசியுடன் சற்றே
களைத்த நான்
அவன் முன்னால்
மாணவனாய் அமர்ந்தேன்…

நிலை என்பது
சூழ்நிலை சார்ந்தது…
மனிதனின் செயலில்
வடிவாம் நீ சொல்வது…
உலக விதி
கூட சிலநேரம்
உருமாறும்…

நிறை கொண்ட
நிலை கொள்ள
ஒரு உபாயம் உள்ளது…
“நடுநிலை” என்பது
கடந்த உண்மை அது
“நிறைநிலை” என்பது….

சரி தவறு கண்டு
இயற்கை விதி கொண்டு
மனிதனின் நிலை சொல்தல்
“நடுநிலை”…

விதி தாண்டி
எல்லைகள் ஏதுமின்றி
“அன்பை” மட்டுமே
அடிக்கொள்ளும் நிலைதான்
“நிறைநிலை”…

“நடுநிலை” கொண்டு
நல்லவன் உருக்கொள்வது
இனிமை மட்டுமே…
“நிறைநிலை” கொண்டு
அன்பாய் நிலைத்தல்
மேன்மையிலும் மேன்மை என்றான்…

உபதேசம் அருமை…
நன்றிகள் பற்பல…
“நிறைநிலை” என்பதை
வாழ்வியல் நிலைகொள்ள
வழிமுறை தேடும்
பயணம் தொடங்கியது…

பூக்களின் பண்டிகை

பண்டிகை நாட்களில் பூக்கள் சிரிக்கும்
அழகு தனி
பூக்களால் நிறைந்த இப் பண்டிகையின்
மகிழ்ச்சியும் அதிகம்…

ஆத்திகம் மறுக்கும் நண்பர்கள் கூட
புராணத்தில் சில
இனிய காரணம் மறுப்பதில்லை
பண்டிகையின் சிறப்பும்
அதில் ஒன்று…

வாமனத்தின் ரூபம் கொண்ட அருவம்
மூன்றடி நிலம் கேட்டு
மகாபலியின் முன் நின்ற நாள் இது
தன்னை அடக்கும் வித்தை கற்றல்
தெய்வமும் வணங்கி யாசிக்கும் இடம்கொடுக்கும்….

வாமனத்தின் ரூபத்தில் சூட்சமம் உண்டு
உணர்த்தும் மகாபலி வாக்களித்தான்
ஓங்கி உலகளந்த பெருமான்
மறுகாலால் அண்டபேரண்டமும் அளந்தார்….

இரண்டடி அளந்த விஸ்வரூபம்
மீண்டும் வாமனரூபம் வந்தார்
மூன்றம்மடிக்கு இடம் கேட்க
மகாபலி வணங்கி அமர்ந்தான்….

தலை கொடுத்து தன் சொல்காத்த
மகாபலி, மங்கையருடன் மண்கீழ் சேர்ந்தான்
குலச் சிறப்பு என்று ஒன்றில்லை
சொல்செயலின் சிறப்பு மட்டும் யாவர்க்கும்….

புவிப்பந்தில் வெல்லமுடியாத வேந்தன் அவன்
பாதல உலகம் சென்றும் சக்கரவர்த்தியானான்
மண்கீழ் சென்றும் குணம் மாறவில்லை
நன்மை செய்யும் பூச்சிகள் கண்டான்….

நிலம் சென்று சிறப்பு செய்ய
இனிமை நீங்காத மணம் பரப்பும்
பூக்களாய் உருக்கொள்ள உடனே ஆணையிட்டான்
பூக்களின் பண்டிகையின் புராணக் கதைஇதுதன்….

Jpeg

சேர நாட்டில் நடந்த கதை
இன்று பூலோகம் முழுதும் கொண்டாட்டம்
சாதி கடந்து மதம் தவிர்த்து
என் மலையாளச் சொந்தம் சொல்லும்

பூக்கள் மலர்வு போல் இனிமை வாழ்கை
பூக்களின் நிறம் போல் பொலிவு வாழ்க்கை
பூக்களின் தன்மை போல் இன்பம் வாழ்க்கை
பூக்களின் வாழ்க்கை போல் (நம்) காலம் வாழ்க்கை

அரக்கம் என்பது குலமல்ல குணம்தான்
அரக்கம் வென்று அவனியில் மகிழ்ந்திருப்போம்
பூக்களின் நிறை கொண்டு வாழ்ந்திருப்போம்
பூமியும் வானும் நம்மை வாழ்த்தட்டும்….

மகத்தான பண்டிகை பலகொண்ட நம்தேசம்
நல்நிறை நிற்கும் செய்திகொண்ட நன்னாளில்
திரு ஓணத்தின் வாழ்த்துக்களும் வளங்களும்
நாமும் கொண்டாடுவோம் நன்மைகள் செய்திடுவோம்….

தாயுமானவள் நீ

உன்வயதில் எனக்கு
உலகம் மிக மிகப் புதிது
மனிதர்களின் பாவம்
அவர்களின் நினைவு,
வாழ்தல் எல்லாம் புதிது…

வசந்தமாய் வீசும்
உன் நிறைந்த புன்னகை
சிறு அரிசிப் பல் தெரியும்
உன் குறும்புச் சிரிப்பு…

கயல் நிலை மிகு கண்,
கவர்திளுக்கும் கருவிழி
நிலைகொள்ளா உன் விழி
உன் சிந்தனையின் வெளிப்பாடோ….

வார்த்தை விளையாட்டு கூட எளிது
உன் வாய் வார்த்தையின்
வெளிப்பாடு உணர்தல்
அதனினும் கடினம்…

மகிழ்ச்சி உன் உணர்வு மட்டுமா
வாழ்தலின் களிப்பு நினைவே அதுதான்
உணர்ச்சி சொல்தல் உன் நிறைவு
உணர்ந்து கொள்தல் எங்கள் உறவு…

குறும்பின் எல்லை சில நேரம்
உன்னுள் புகும்
என்னிலை தடுமாறும் நேரமது
புத்தியின் தடுமாற்றம் சித்தனும் சிந்தனையிழப்பான்

நானோ சாதாரண மனிதன்
கோபம் தவறுதான்,… உணர்த்தும்
நிலை வாழ்கையில் பல உண்டு
வாழ்ந்தும் கற்றும் உய்யும் வழியுண்டு….

என்கோபம் உன்மேலல்ல உன்செய்கையின் மேல்தான்
நிலைகொள்ளா என்செய்கையின் நிகழ்வு உன்மேல்
மனம் துடித்தும் ஒரு அடிபெற்றாயே
உன்னுடல் தாங்குமா என்மனம் ஆருமா…

வளர்ந்த பெரியவர்களின் கோபம்
நீள மட்டுமே செய்கிறது
மறந்து மன்னிக்கும் ஆற்றல்
வயது வளரும்பொழுது தேய்கிறது…

நீயோ வேறு, உண்மை தேடாமல்
உணர்வு சொல்லும் வயது
உன் கோபம் கொள்ளும் நேரம்
கண்ணிமைத்தலிலும் குறைவு..

மனநிலை மாறுகிறது
உன்புன்னகை என்கண் சேருகிறது
சிறுகை கொண்டு கழுத்து சேரும்
உன்னன்பு கொள்வேன் சிறுகனத்தில் …

மறந்து மன்னித்தல் தெய்வகுணம் என்பர்
தெய்வகுணமட்டுமல்ல தாயின்குணமும் தரணியில் அதுதான்
உன்னால் மட்டும் உடனே எப்படி
மறந்து மன்னிக்க முடிகிறது…

மறந்து மன்னித்தால் மட்டுமே
மகிழ்ச்சி நிலைக்கும்
என்னும் உண்மையின் வாழும்
சாட்சி நீதான்…

என் தாயின்குணம் கொண்டதால்
என் தாயுமானவள் நீ…..

என் தனிமை

கருவறையின் நிறம்
கருமை
கருப்பு நிறமென்றாலும்
மா நிறமென்றாலும்
சிகப்பு நிறமென்றாலும்
எண்ணிற மென்றாலும்
உடல் வண்ணம் உருவாகும்
கூடு
ரத்தச் சகதியினுடன் உள்ள
கருப்புப் பெட்டியுள்….

கருமைக்கும் தனிமைக்கும்
பல ஒற்றுமை
ஒன்றின் தாக்கம்
மற்றொன்றின் மேல்….

ஒளியற்ற நிறம்
கருமை
ஒருவருமற்ற நிலைமை
தனிமை.

கருமையுள் பல நிறமுன்று
பகுத்துப் பாருங்கள்
தனிமையிலும் பல சிந்தனையுண்டு
தொகுத்துப் பாருங்கள்.

ஒற்றைக் கரும்புள்ளி வெள்ளை தளத்தில்
காண்பவன், சிலபேரால்
ஒதுக்கப்படலாம்
ஆனால் கரும்புள்ளி காணும் அவன்
சிலநேரங்களில் கவிஞனும் ஆகலாம்.

கரும்புள்ளி காண்பது தவறன்று
அந்தக்கரும்புள்ளி கண்டு கவிதையுரைப்பது
தீதுமன்று
கரும்புள்ளி கண்டவனுக்கு தனிமை
வாய்க்கலாம்
மீண்டும் அவன் ஓர் இடர்
சேரலாம்.

தனிமையின் உணர்வு ஒரு
புறாவின் துயில் போல….
கருமையின் விடிவும்
ஒரு காட்சிப் பிழைபோல …
சிறுநேரம் சிக்கல்
ஆனால்
பலநேரம் அதுவே ஆத்மாவின்
விடுதலை.

காட்சிப்பிழை கண்டு நிலை
பிறண்ட தருணமுண்டு
தனிமைநிழல் கண்டு என்னிலை
வலித்த நேரமுண்டு

பிழையும் நிழலும் கருமையின்
நீட்சி எனக் கண்டு கொண்ட
தருணமிங்கு
கருமையின் மறுவடிவாம் வெண்மையின்
உருகண்டு
தனிமையும் கருமையும்
ஒரு உருவத்தின் இருவடிவாம்
என உள்ளம் மகிழ்ந்த கணமுண்டு…

அண்டபேரண்டம் ஆதியின் ஒளி
கடந்து பயணித்தால்
இந்தப் பேரண்டம் சுமக்கும்
வெற்று வெளியும் கருப்பு மட்டுமே
அந்த பேரண்டம் சொல்லும்
இறுதி தனிமை மட்டுமே…

வண்ணம் பலகண்டு களித்த
காலம் பலவுண்டு
எண்ணம் சிதறி சிந்தித்த
நேரம் மிகுஉண்டு
வண்ணமும் எண்ணமும் சிதறும்
ஒரு வாழ்கையின்
நிலையும் அதுதான்….
வண்ணம் கரைத்து ஒரு
பொருள் கொள்ள ஆசைகொண்டேன்
எண்ணம் குவித்து ஒரு
நிலை கொள்ள உந்திச்சென்றேன்…

ஓடிச் சென்று உலகுரைகலாம்
இல்லை
தன்னுள் அமிழ்தும் உலகுரைகலாம்…
எது எப்படியோ
மற்றவர் குறை காணும் வாழ்கை
வேண்டாம்
என்னிலை உணர்ந்து நிற்கும் வரம்
வேண்டும்
தான் அறியாதது உண்மையில்லை என்றெண்ணும்
அறியாமை விலகவேண்டும்
கற்றது கையளவு என்பது வார்த்தையில் மட்டுமன்றி
வாழ்கையிலும் நிகழ்தல்வேண்டும்…

கருமை முழுதும் உணரும் காட்சி
கைவசமாதல் வேண்டும்
தனிமை அனைத்தும் வெல்லும் மாட்சி
என்வசமாதல் வேண்டும்
கருமை தனிமை இரண்டும் நன்று
என்று உணர்ந்து வாழ்தல்
அமிழ்தினும் இனிது…

தேடலின் தொடக்கம், தனிமையின்
இனிமை
மனஎண்ணத்தின் இறுதி, மாசற்ற
கருமை
தொடக்கமும் முடிவும் ஒன்றுதான்
அதுவே
அண்டத்தில் பிண்டமும்
பிண்டத்தில் அண்டமும்…
தனிமையின் தொடக்கம்
மனக்கருமையில் இறுதி…
இந்த வாழ்வின் வெற்றி
அதுவே இயற்கையின் செய்தி…
இந்தப் பயணம் நீண்டது
கைகவரக் காத்திருக்கிறேன்….