சேகு­வேரா – ஒரு போராளியின் கதை

“எனக்கு வேர்கள் கிடை­யாது கால்கள் தான். அடி­மைத்­தனம் எங்­கெல்லாம் இருக்­கி­றதோ அங்­கெல்லாம் என் கால்கள் பய­ணிக்கும்.” என்கின்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, இலக்கியவாதி  எனப் பன்முகத்தன்மை கொண்ட போராளி. உலக சரித்திரத்தில் எத்­த­னையோ புரட்­சிகள் நடந்தேறியிருந்தாலும், வரலாற்றில் இடம்பெற்றிருந்தாலும், “புரட்­சி­யாளன்” என்­ற­வுடன் வர­லாற்றில் ஓங்கி ஒலிக்கும் உன்­ன­த­மான ஒற்றை பெயரின் சொந்­தக்­காரர் எர்­னெஸ்ற்றோ சேகு­வேரா எனப்­படும் சே என்ற மாபெரும் புரட்­சி­யா­ளனே. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

ஆர்ஜன்டீனாவில் பிறந்து கியூபா, மெக்ஸிக்கோ, கொங்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சிக்காக பாடுபட்ட சேவின் போராட்ட வரலாறு மிக நீண்டது. இளமைக்காலத்தில், மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன்-அமெரிக்கா தேசங்கள் முழுவதும்  பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது மக்களிடம் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல் சூழ்நிலைகள், அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் , வறுமையின் தாக்கம் என்கின்ற சமூகத்தின்அடிப்படைப் பிரச்சனைகளை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் அவரை ஒரு மிகப்பெரிய புரட்சியாளனாகச் செதுக்கியது; இலத்தீன்-அமெரிக்கப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் “புரட்சி” மூலமே தீர்வு காணமுடியும் எனச் சே நம்பினார்.

சேகுவேராவின் வீட்டில் சுமார் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன, புத்தகக் காதல் மற்றும் ஆழமான வாசிப்பு சேவின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மேம்படுத்தின என்பது மறுக்கயியலாத உண்மை.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தன் இளமைக்காலத்தில் இருந்தே களப்பணி செய்யத் தொடங்கிய சே, மெக்­சி­க்கோவில் கியூபப் புரட்­சி­யாளர் பிடல் காஸ்ட்­ரோவை சந்திக்கிறார். கியூபாவில் கொடுங்கோல் ஆட்­சி­பு­ரிந்த சர்­வ­தி­கா­ரி­யான படிஸ்­டாவின் ஆட்­சியை அகற்றும் எண்ணத்துடன் பயணப்படும்  பிடல் காஸ்ட்­ரோவின் இலட்சியத்தை உணர்ந்த சே, ஜுலை 26 இயக்­கத்தில் தன்­னையும் இணைத்துக் கொண்டார்.

சியார்ரா மேஸ்தாரவில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் பிடல் காஸ்ட்­ரோ உடன் இணைந்து சே புரட்சிக்குத் தயார்ப்படுத்தினார். ஜுலை 26 இயக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. புரட்சிக்குப் பின் அமைந்த அரசில் சே பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கியூபாவின் வளர்ச்சிக்காக,  வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே, ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்குச் சென்றார். கியூபா நாட்டின் வளர்ச்சிக்காக சே செயல்படுத்திய கொள்கைகளும் திட்டங்களும் எண்ணிலடங்காதவை .

சே தொழில் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபொழுது, நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு குடிமகனும் தங்கள் நேரத்தை, ஒவ்வொரு நாளும், எதாவது ஒரு வகையில், ஊதியமில்லாமல் அர்ப்பணிக்க வேண்டும் என்கின்ற திட்டத்தைச் செயல்படுத்தினார். திட்டத்தை தீட்டுவதோடு நிற்கவில்லை தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் சே. மக்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு நாளும் அரசு சார்த்த பணிகளில், தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். வெறும் புகைப்படங்களுடன் நின்றுவிடும் சம்பிரதாயம் என்று நினைத்து வந்த செய்தியாளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் தன் உடல் உழைப்பை முழுமையாக அர்ப்பணித்த சேவின் செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

“ஒரு நாட்டில் ஒரு  புரட்சி இயக்கம் தன் குறிக்கோளை அடைந்து வெற்றிபெறுகிறது. வெற்றிபெற்ற புரட்சியக்கத்தின் தலைவர்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் பதவிகளை பெறுகிறார்கள். தங்கள் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள்…” வரலாற்றுப் பக்கங்கள் வெற்றி பெற்ற புரட்சியாளர்களை, புரட்சியகங்களை இப்படிதான் பெரும்பாலும் பதிவுசெய்துள்ளது. கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று, அரசியல் பதவிகளை அலங்கரித்த சே தன் வாழ்நாட்களை முழுமையாக கியூபாவில் மட்டும் செலவளிக்கவில்லை. கியூபாவைப் போன்ற பல்வறு அரசியல் பொருளாதாரச் சவால்களைக் கொண்ட லத்தின்-அமெரிக்க தேசங்களின் நிலைமை சேவின் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தன.

எத்தகைய நிலைமைகளிலும் தன் உயரிய லட்சியங்களுக்காக முன்செல்லும் முனைப்பில், தயார் நிலையில் இருந்தவர் சே. ஒரு நாட்டின் அமைச்சர், உயரிய பதவி பொறுப்புகள் என்கின்ற நிலைமையும்,  துன்பப்படும் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கின்ற நினைவுகளைத் தடுக்காதவாறு உறுதிப்படுத்திக்கொண்டவர் சே. தன் உயரிய லட்சியங்களைச் செயல்படுத்த தன் அமைச்சர் பதவியைத் துறந்து, கியூபாவை விட்டு வெளியேறி மெக்­ஸிக்கோ, கொங்கோ, பொலி­வியா எனப் பல நாடு­க­ளுக்குப் பயணம் செய்த சேகு­வேரா அங்­குள்ள போரா­ளி­க­ளுக்குப் பயிற்சி வழங்­கினார். போராட்ட காலங்களுக்குப் பின் பெற்ற அரசியல் பதவியை தூக்கியெறிந்து, மீண்டும் களப்பணிகளுக்கு, மக்களுக்காக உழைப்பதற்கு காடுகளில் தஞ்சம் புகுந்த ஒரே “புரட்சியாளன்” சேகுவாரா மட்டுமே.

கியூபாவை விட்டு வெளியேறும் முன், தனது நண்­பரும் கியூப அதி­ப­ரு­மான பிடல் காஸ்ட்­ரோ­வுக்கு சே எழு­திய வரிகள்: “என்­னு­டைய எளி­மை­யான முயற்­சி­களும் உத­வி­களும் சில நாடு­க­ளுக்குத் தேவைப்­ப­டு­கி­றது. ஏகா­தி­பத்­தி­யத்தை எதிர்த்துப் போரா­டு­வதை கட­மை­யாக மேற்­கொள்வேன். அதை நிறை­வேற்­றவும் செய்வேன். எனது மனைவி மக்­க­ளுக்கு எந்தச் சொத்­தையும் நான் விட்டுச் செல்­ல­வில்லை. அதற்­காக வருத்­தப்­ப­டவும் இல்லை. நமது முன்­னேற்றம் எப்­போதும் வெற்­றியை நோக்­கியே. வெற்றி அல்­லது வீர­ம­ரணம் என்­பதே.”

இனம், மொழி என குறுகிய நோக்கத்திற்காக மற்றும் ஆதாய அரசியலுக்குச் சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத்  தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் சேகுவேரா. தன் வாழ்நாளெல்லாம் மக்களுக்காக போராடிய சேகுவாரா 1967ஆம் ஆண்டு பொலிவியக் காடுகளில், போராட்ட களத்தில் மாண்ட பொழுது அவரின் வயது 40 மட்டுமே. “நான் சாக­டிக்­கப்­ப­டலாம்; ஆனால் ஒரு­போதும் தோற்­க­டிக்­கப்­ப­ட­மாட்டேன்” என்பது அந்தப் போராளியின் வைரவரிகள்.

நன்றி – தினத்தந்தி

ஒற்றை “மந்திரச் சொல்லில்”

முதல் அடி எடுத்துக் கொடுத்தான்  
இறைவன், 
பக்தியில் தமிழ் வளர்த்தான் 
என் முப்பாட்டன்… 
 
உன் முதல் மற்றும் இறுதி 
அடி கொண்டு என் நிலை 
சொல்லும் கவிஞன் நான் …
தமிழ் சாருமோ இல்லையோ 
உன் மனம் சாரும் வரம் கேட்டேன் …
 
கடவுளுக்கு மேல் நீ 
எனக்கு… 
உன் சொல்லாத வார்த்தை 
ஓன்று போதும், 
நிலை கொள்ளும் தளம் 
எனக்கு…
 
கவிதையாய் நான் 
வார்த்தையாய் நீ …
உவமையாய் நான் 
உருவமாய் நீ  …
 
“அந்த ஒற்றை மந்திரச் சொல்
கொண்டு மூடிக்கிடக்கும்
உன் இதயத்தை என்னால்
திறக்கவும் முடியும்…” 
 
இதுதானே உன் முதல் வரி… 
இது என்னுடைய முகவரி…
எனக்கு உன் வாழ்வில் நீ 
தந்த நிலையான முகவரி… 
 
வார்த்தையின் விளையாட்டு 
எந்த ஒற்றை சொல் அது 
சொல்; செயல் ஆகுமா? 
என்கின்ற தொக்கிய 
வினை….
 
சொல் செயல் ஆகவேண்டும் 
என்கின்ற எதிர் வினை 
செயல் உணர்ந்து சொன்ன வார்த்தை 
செயல் மறைத்து தந்த வார்த்தை
 
செயல் உணரும் நீ
செயல் நுகரும் நீ 
செயல் விரும்பும் நீ  
சொல்லாய் உறைந்த விதை… 
 
உன் வினை உறைந்து 
போனது உண்மை 
என் வினை உன்முனை 
நோக்கி நகர்வதும் 
உவமைதான் 
அந்த செயலின் 
உருவமும் நீதான் 
உருவகம் நீதான் …
 
எந்த ஒற்றைச் “சொல்”
சிந்திக்கிறேன் ….
தமிழ் தாய் தந்த 
கொடை 
வானத்து நட்சத்திரமாய் 
வார்த்தைகள் 
நீ சொன்ன சொல் 
“துருவ நட்சத்திரமாய்” என் முன்… 
 
சொல்ல முற்பட்ட 
சொல்லாய் நான் …
இல்லை 
நீ மீண்டும் உதிர்த்த 
“மந்திரச் சொல் “
 
அந்த ஒற்றை மந்திரச் சொல்
கொண்டு சோ வென்று
மடை திறந்து பேசும் உன் உதட்டிற்கு
தாழிடவும் முடியும்…
 
உண்மை …
மீண்டும் உறைவோம் நாம்…
ஒற்றை “மந்திரச் சொல்லில்”…

மகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)

இந்த வார பாக்ஸ் ஆபீஸ் “மகளிர் மட்டும்”. இடைவெளி விட்டு ஜோதிகா நடிக்கும் படங்களுக்கு, இன்னமும் ஜோதிகா ரசிகர்கள் காத்திருப்பது, ஜோதிகாவின் மிகப்பெரிய பலம். குற்றம் கடிந்த பிரம்மா மீதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு. நடிகர்கள் தாண்டி, கதை, திரைக்கதை, இசை, படத்தொகுப்பு, வசனம் என ரசிகனின் எல்லை விரிந்த, சமூக வலைத்தளங்கள் கொண்ட உலகம் இது என்பதை இயக்குனர் நன்கு உணர்ந்துள்ளார்.

Freelance மீடியா நிருபராக “பிரபா” ஜோதிகா. கருப்புச் சட்டையில் பெரியார் மற்றும் அம்பேத்கார் பின்னணியில் முதல் காட்சி. கதாபாத்திரத்தின் தன்மையினை வசனமாக அல்லாமல் “காட்சியாக” உருவகப்படுத்துவது அருமை. ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, ஜோதிகா ஆகியோரைச் சுற்றியே நகரும் கதை. மாமியார் ஊர்வசியின் பள்ளிக் காலத் தோழிகளை (பானுப்ரியா, சரண்யா) தேடித் தெரிந்துகொண்டு (வேற எப்படி…இப்போ நெறைய படத்துல காட்டுற மாதிரி “முகப்புத்தகம் மூலம்தான்); ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என் நால்வரும் போகும் மூன்று நாள் பயணம் தான் திரைப்படம். சிறிய ஒன் லைனர் கதை, திரைக்கதையின் மூலமும் காட்சிக்கு கோர்வைகளின் மூலமும் நகர்கிறது. சிறிய சிறிய தொய்வுகள், சற்றே நாடகமான காட்சிகள். ஆனாலும் நடிகைகள் ஸ்கோர் செய்து கொண்டே இருக்கின்றனர். சீனியர் நடிகைகள் ஜோதிகாவை விட சில இடங்களில் ஸ்கோர் செய்கின்றனர். ஊர்வசி பல இடங்களில் அடித்து தூள் கிளப்புகிறார். இந்த மாமியார் வேடம் அவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி, அசால்ட்டா கிளப்புகிறார்.

படம் நெடுக கண் கலங்க வைக்கும் காட்சிகள். திரைப்படம் பார்ப்பவர்கள் தன் சுய வாழ்க்கையை எதாவது ஒரு காட்சியிலும் ஒப்புமைப் படுத்தி உணர வைப்பது, இயக்குனரின் மிகப் பெரிய வெற்றி. இந்தச் சிறப்பால் நாடகத்தன்மையுள்ள காட்சிகள் கூட உண்மை என படம் பார்ப்பவர்கள் நம்பும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பது திரைப்படத்துக்கு வலிமை. இந்த மாதிரி கதைகளை படமாக்கும் தைரியத்திற்கு ஒரு மிகப்பெரிய நன்றி.

நாசர், லிவிங்ஸ்டன், மாதவன் மற்றும் பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து உள்ளனர்.

இந்தப் படத்தின் பலம் “மகளிர்” நிலை குறித்து ஒரு “தமிழ்” சமூகம் சார்ந்த “பெண்ணியம்” பேசும் நிலை தான். என்ன தான் ஆணாதிக்கத்தின் மேல் கோபம் இருந்தாலும் “பெண்ணியம்” சார்ந்த எதிர்பார்ப்புகள் தமிழ் சமூகப் பெண்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை சரியான ஒரு கோட்டில் இயக்குனர் பதிவு செய்துள்ளார். ஏற்றம் இறக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான சமூக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மிகுதியாக வர வேண்டும் என்பது காலத்தின் எதிர்பார்ப்பு, கட்டாயம் அந்த சூழ்நிலைகள் நோக்கி நகரவேண்டிய நேரம்.  மலையாளத்திலும் மற்றும் சில மொழிப் படங்களிலும் எடுத்த முயற்சிகள் இப்பொழுது தமிழ் திரைப்படங்களிலும் எடுக்கப் படுவது வரவேற்க வேண்டிய ஒரு நிகழ்வு.

இந்த படம் திரையரங்கில் பார்க்கும் பொழுது, காட்சிகளில் எதிர் விதமாக, ரசிகர்களின் உணர்வுகள் ஒரு சிறு தொகுப்பாக கீழ்:

1) நாசர் பானுப்பிரியா நோக்கி “போ மேல பே”…என்று உறும் காட்சி… பானுப்பிரியா நின்று ஒரு முகப் பாவணை காட்டி நகரும் பொழுது…என் பின்னிருக்கையில் அமர்த்திருந்த ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் பதில் “சீ…நீ போ டா “…

2) நாசர் உப்பு போடாத தயிர் சாதத்தை வெங்காயத்துடன் சாப்பிடும் காட்சி… அதே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் வசனம் “இப்படி தின்நாத்தான் உனக்கு புத்தி வரும்”

3) “ஆம்பளைங்க சமைக்கிற வீட்டுல குபேரன் குப்புற படுத்திருப்பான்” …முன் இருக்கையில் உள்ள ஒரு பெண்மணி “நாம வீட்டுக்கு குபேரன் வரவே மாட்டான் போலயே”…

4) லிவிங்ஸ்டன் ..”இனியோட இன்னையோட குடியை நிறுத்துரேன் “…ஒரே கைதட்டல்…”டாஸ்மாக்” கொடுமையின் உண்மை முகம் …

“ஒரு பெண் ஆணிடம் எதை எதிர்பார்க்கிறார்… ”
“ஆண் பெண் உறவின் மேன்மை…”
“தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை. ..”
“சமூகத்தின் கட்டுப்பாடு…”
“மகளிர் மட்டும் ..ஆண்களுக்கு “

இப்படி பல்வேறு கருத்துக்கள் இந்தத் திரைப்படத்தின் பிம்பமாக பேசப் படலாம்.

ஆனால் என் உணர்வு இதுதான்….

“இன்று உள்ள பெண் சமூகம் (சுமார் 40 வயது வரை உள்ளவர்கள்) சில சீர்திருத்தங்களை பார்த்து விதைத்து விட்டது…மிக நீண்ட பயணத்தின் சிறிய முதல் அடிகள் எடுக்கப்பட்டு விட்டன… ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ள முந்திய பெண் சமூகத்தின் வலி மிகப்பெரியது … அவர்களின் பார்வை நிச்சயம் மிக வேறாக இருக்கும்…அது இதுவாக கூட இருக்கலாம்….

‘ பிரபா கோமாதா போன்ற ஒரு மாமியார் மருமகள் உறவுதான் அது…பல்வேறு மகளிர் சிக்கல்களின் மூலம் நம் தமிழ்ச் சமூகத்தில் இந்த மாமியார் மருமகள் உறவுதான்’…

பிரபா கோமாதா போன்ற உறவுகள் அனைவருக்கும் வாய்க்கட்டும் “….

நீங்களுமா நிதிஷ்

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஒரு மிகப் பெரிய கேள்வி அரசியல் தளத்தில் தொக்கி நின்றது. பாஜகவின் மெகா வெற்றிக்குப் பின் யார் மோடியை அரசியல் ரீதியாக கேள்வி கேட்க முடியும் என்பது அது. ஒரு ஜனநாயக அமைப்பில் எதிர் வரிசையில் அமரும் கட்சியின் செயல்பாடு மிகவும் அவசியம். ஜனநாயகத்தின் வெற்றியே எதிர் கட்சிகளின் செயல் திறமையில் தான் உள்ளது என்பது உலக உண்மை. சிறந்த தலைமையின் வெற்றிடம் மற்றும் உட்க்கட்சி விவகாரங்களால் மிகப் பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் சுணங்க ஆரம்பித்த நேரம் அது.
மோடியை அரசியல் ரீதியாக யார் கேள்வி கேட்க முடியும் என்கின்ற கேள்விக்கு பதிலாக பல்வேறு பெயர்கள் முன் வைக்கப் பட்டாலும், பல்வேறு அரசியல் பார்வையாளர்களால் மிகவும் பலப்படுத்தப்பட்டவர்கள் மூவர் :
1) ஜெயலலிதா – நாடாளுமன்றத்தில் உள்ள பலம் காரணம், ஆனால் அவர் மறைவுக்குப் பின் நடந்தவைகள் நாம் அனைவரும் அறிவோம்
2) மம்தா பானர்ஜி – அதிரடியான பேச்சு மற்றும் செயல்கள், இப்பொழுது குற்றப் பின்னணிகள் தொடர ஆரம்பித்து விட்டன
3) நிதிஷ் குமார் – துணிச்சலாக மோடியை எதிர்கொண்ட விதம்

இந்த வரிசையில் நிதிஷ் மட்டும் கடந்த 3-4 வருடங்களாக மோடி ஆதரவற்ற அரசியலில் களம் ஊன்றி நின்றார். தூய்மையான அரசியல், தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் நிலைப்பாடு என்கின்ற பல்வேறு கோணங்களில் நிதிஷின்னது நிலைப்பாடுகள் மாநில அளவில் மிக தன்மையாக நிகழ்ந்து கொண்டிருந்த காலம். 2015 நவம்பரில் நடந்த பிஹார் தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், கால்நடைத் தீவன ஊழல் மற்றும் சிறந்த ரயில்வே அமைச்சர் புகழ் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் மாநிலங்களில் தன் வேர்கள் இழந்த காங்கிரஸ் கட்சி இனணந்து மெகா கூட்டணி அமைத்தன. வெற்றி. குறைந்த எம்.எல்.ஏகள் கொண்டிருந்தாலும் நிதிஷ் அவர்களை லாலு முதல்வர் ஆக்கினார்…மீண்டும் சொல்கிறேன் “லாலு நிதிஷ் அவர்களை முதல்வர் ஆக்கினார்“…இதுதான் லாலுவின் சாமர்த்தியம் . அவரால் நேரடியாக முதல்வர் ஆகி மாநிலத்தில் அரசியல் செய்ய முடியாது என்பது அவருக்குத் தெளிவாக தெரியும். லாலுவின் மகன்கள் தேஜ் பிரதாப் – சுகாதாரத் துறை அமைச்சராகவும்,தேஜஸ்வி, துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆட்சியும் கட்சியும் லாலுவின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது. நிதிஷ் லாலுவுடன் கூட்டணி அமைத்த உடன் அவரது செல்வாக்கு சற்று சரிந்தது உண்மை. ஆனால் மோடி என்கின்ற பிரம்மாண்டத்தின் முன் இருந்த வெற்றிடம் நிதிஷின் இந்த முடிவை மக்கள் சற்றே மறக்கும் படிச்செய்தது.

காலங்களும் காட்சிகளிலும் மாறின … அடுத்த நாடளுமன்றத் தேர்தலில் அமையப்போகும் மூன்றாவது கூட்டணிக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கொண்டவர்களில் “நிதிஷ்” பெயர் முதன்மையாக நிற்கும் என்கின்ற அளவிற்கு நிகழ்வுகள் அரங்கேறின. சர்வ வல்லமை படைத்ததாக பிரகணப்படுத்தப் படும் மோடி மாஜிக் பீகாரில் எடுபடவில்லை என்பது தான் இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை…

ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து நிதிஷின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள்… சகாபுதீன் விவகாரம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாராட்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு, பிஹாரில் மதுவிலக்கு அது சார்த்த அரசியல், ஜனாதிபதி பொது வேட்பாளர் தேர்வு என்று ஒவ்வொரு மாதமும் நிதிஷ் மற்றும் லாலுவின் உறவுகளைச் சீரீல்லாத பாதையில் பயணிக்கத்த தொடங்கியது.

இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் சிகரமாக மே மாதம் ஒரு விருந்தில் மோடியை தனியாக நிதிஷ் சந்தித்து பேசினார்…காட்சிகள் அதன் பின்னர் வேகமாக மாற ஆரம்பித்தன.
நேற்று நடந்தது “முடிவுக்காட்சி”.

முதல்வர் பதவி விலகும் நாடகம்… மீண்டும் பாஜக ஆதரவுடன் இன்று மீண்டும் ஆட்சி….

இவ்வளவு நிகழ்வுக்குப் பின்னும் பிஜேபி எதிர்த்து எப்பொழுதும் நிற்கும் ஒரே மாநிலக் கட்சியாக லாலுவின் கட்சி உள்ளது என்பது நகைமுரண்.

அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாகவே இருக்கிறார்கள் … ஏமாந்த மக்களும் வாக்காளன் வடிவும் எடுத்து தன் கடமையைச் சரிவர செய்ய முற்படுகிறான்.

நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதி ஆகிவிட்டேர்களே நிதிஷ்…..

விமர்சகர்கள் சூழ் உலகு

சமூக வலைத்தளங்கள் ஒரு மிகப் பெரிய வெற்றி எனப் பல்வேறு தனி மனிதர்களும் அமைப்புகளும் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் ஒரு அதி உன்னதமான மிகப் பொருத்தமான இன்றைய தருணத்தின் மிக முக்கியமான கேள்வி இந்த சமூக வலை தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நபர்கள் மற்றும் அந்த நபர்களின் மன நிலை அது சார்ந்த செயல்பாடுகள் மற்றும் அவர்களின் மிகப்பெரிய சுதந்திரமாகக் கொண்டாடும் “கருத்து” சுதந்திரம் அது சார்த்த தரவுகள் மற்றும் பதிவுகள், அந்தப் பதிவுகளின் உண்மை நிலை, அடிப்படை நிதர்சனங்கள் எனப் பல்வேறு வகையான விமர்சனங்களும் அந்த “விமர்சகர்கள்” சூழ் உலகான இந்த பூமிப் பந்தின் மீது உள்ள மனிதர்கள் மேல் கொண்ட ப்ரேமையும் காதலும் ஒரு நூற்றாண்டு தாண்டியும் குறையாத அட்சயபாத்திரம் தான்.

இந்த “விமர்சகர்களின்” உலகம் சற்றே விசித்திரமானது. எல்லா நிகழ்வுகளும் இவர்களின் விமர்சனங்களுக்குத் தப்பாது.

இந்த விமர்சகர்களின் குணநலன்கள்:

  • எதாவது நல்லது மாதிரி தெரிந்தால் அதில் உள்ள தவறுகளைத் தேடுவது …
  • எதாவது கெட்டது மாதிரி தெரிந்தால் அதில் உள்ள நல்லவற்றை தேடுவது …
  • கண்ண மூடிக்கிட்டு சகட்டு மேனிக்கு தங்களுக்கு வரும் பார்வேர்ட் சங்கதிகளை தங்கள் கவித்துவக் கருத்துக்களுடன் பரப்புவது …
  • பார்வேர்ட் சங்கதி உண்மையா அப்படினு கூட யோசிக்காம தாங்களும் பார்வேர்ட் பண்ணறது …
  • அரசியல் பண்ணுவது
  • வெற்றி பெற்றபின் வெற்றி காரணங்களை அலசுவது
  • தோல்வி அடைந்தால் அறிவுரை சொல்லி பிரிச்சு மேயறது…
  • இத எல்லாம் விட முக்கியமான பொறுப்பு… தங்களுக்கு தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் எதாவது ஒரு வரி பேசுறது… எழுதறது…

இந்த வாரம் நான் கேட்ட முத்தான நான்கு விமர்சனங்களை மட்டும், இங்கே உங்களுக்காக:

1) இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தைது … கேப்டன் சரி இல்லை. ஒரு பொறுப்பு இல்லாம விளையாண்டாங்க … அந்த இங்கிலாந்து கீப்பர் செம …

2) குடியரசு தலைவர் தேர்வு சரி இல்ல…. இவர் என்ன பண்ணுவார்னு பாக்க தான போறோம் … ஆளு ஒரு டைப்பா இருக்காரா … RSS ஆளாம்ப … அத்வானியே தேவலாம்

3) எடப்பாடி என்னப்பா பண்ராரு… ஒரு கதைக்கும் வழி இல்ல… மினிஸ்டர் அவரு சொன்னா கேக்க மாடைக்கிறாங்களாம்… பணம் கொடுக்கலைன்னு எல்லாரும் கடுப்புல இருக்காங்களாம் …

4) கமலுக்கு இது தேவையா … ஹீரோ வா நடிக்க படம் இல்லையாம் …எல்லாம் உடான்சு … ஒரே ஏமாந்து வேலையா இருக்குப்பா … யாருப்பா அந்த ஓவியா … லூஸாமா …

கொஞ்சம் யோசிச்சு பார்த்தா இதைச் சொன்னவங்களுக்கும் இந்த சங்கதிகளுக்கும் ஒரு சம்பந்தமே இல்லை. அந்த சங்கதிகளை முழுமையாக புரிஞ்சிகிட்டு பேசுறவங்களும் இல்லை…அந்த துறையில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை …அவர்கள் துறை நிபுணர்களும் இல்லை …எல்லாம் ஒரு டைம் பாஸ் … அந்த நிமிடத்தை வார்த்தைகளால் கடந்து விட வேண்டும் என்கிற துடிப்பு … சொல்லும் வார்த்தைகளுக்கு தாங்கள் பொறுப்பு என்கிற உணர்வற்ற நிலை… வார்த்தைகள் உண்மைகளாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரு அடிப்படை பிரக்ஞய் இல்லை…

நிச்சயம் இது என் விமர்சனம் இல்லை …இவங்க மாறின நல்லா இருக்கும் … உணர்ந்தா எதாவது உருப்படியா நடக்கும் …

இப்போதைக்கு இவர்களை ஒரு புன்னகையுடன் கடந்து விடுகிறேன்…

கமலை நான் இப்பொழுது ஆதரிக்கிறேன்

“நீ யாருன்னு என்னக்கு தெரியாதா?”
“அவன் என்ன யோக்கியமா”
“ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேச்சுதான்”
“வாய் ரொம்ப நீளம்”
“அது ஒரே நாறவாய்”
“ஒன்னும் பண்ண மாட்டான்…பேச்சு மட்டும் தான் ”
“என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு பேசுப்பா”
“சம்பந்தம் இல்லாத விஷயத்துல தலையை நுழைக்கிறான்”
“போட்டு சாத்தப் போறாங்க பாரு”

இன்னும் பிற இந்தியாதி இந்தியாதிகள் …
சமூக வலை தளங்கள் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

நேத்து அஸ்வின் CSK பத்தி பேசுனா ஒரு உதாரணத்துக்கு ஊரே அவரை கழுவி கழுவி ஊத்திருச்சு…மிகுதியான நெட்டிசன்கள் இப்பொழுது கழுவி ஊத்தருதல ரொம்ப சிறப்பா செயல்படுறாங்க. ரொம்ப மகிழ்ச்சி.
ஆனா பேசுறதை அப்படியே பண்றது எவ்வளவு கடினம்னு யாரும் யோசிச்சு பேசுற மாதிரி தெரியல.

கமல் அரசியல் பேசுறாரா…..
“அரசியல்” பேசுனா என்ன தப்பு …

“அவரு பார்ப்பான்”
“அவருக்கு பொண்ணுங்க weakness”
“புரியுற மாதிரி எப்போதும் பேசுறது இல்ல”
“தனக்கு ஒண்ணுன்னா மட்டும் பேசுறாரு”
“அவருக்கு அரசியல் தெரியுமா”

கேள்விகள் மிக மிக அதிகம் …
சில கேள்விகளில் எனக்கும் உடன்பாடு உண்டு ..
சில கேள்விகள் உண்மை …
சில கேள்விகளின் உண்மைத் தன்மையில் குறை உண்டு…

கமலிடம் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு. அவரின் அரிதாரத்தையும் தொழில் பக்தியையும் கண்டு இன்னும் வியப்பவன் நான்…

ஆனால் அரசை நோக்கிய கேள்விகளை நான் மிகவும் ரசிக்கிறேன். மிகவும் தெளிவான வார்த்தைகள்.
தேர்ந்தெடுத்த அழகிய நடை. மரியாதையான சொற்கள். சரியான “Call to Action”…
கொஞ்சம் பதறி தான் போயிருக்கிறார்கள் அரசைச் சார்ந்தவர்கள் (மத்திய மாநில அரசுகள் இரண்டும்).
போயஸ் தோட்டத்து “புத்தர்” பேச வேண்டிய எதிர்கால அறிக்கைகள் இப்பொழுது ஆழ்வார் பேட்டை “ஆண்டவரால்” பேசப்பட்டது பலரையும் திகைப்படையச் செய்தது உண்மைதான். அவர்களுடைய திட்டத்தில் இந்தத் திருப்பம் எதிர்பாரதது.

நம் ஆளுங்க ஒரு புத்திசாலித்தனமான கேள்வி ஒன்ன கேட்குறாங்க….

“அந்தம்மா இருந்த இவருக்கு இவ்வளவு தைரியம் வருமா?”

ரொம்பச் சரியான கேள்வி ….

அந்தம்மா இந்திருந்தா …சின்னம்மா இல்லை …இப்போ நாட்டாமை பண்ற யாரும் சத்தமா தும்மின்னது கூட இல்லை …NEET இருந்திருக்காது … GST வந்துருக்காது ….

எல்லாத்துக்கும் ஒரே மையம்.

“அம்மா” மற்றும் “அய்யா” திடமாக அரசியல் செயல் நிலை இருந்திருந்தால் எல்லாம் வேறு தளத்தில் இயங்கி இருக்கும் என்பது நிச்சயம் உண்மை. அதில் நான் உடன்படுகிறேன். ஆனால் இன்று அந்த நிலை இல்லை.

காரண காரியங்கள், சூழ்நிலைகள், நேரம் காலம் சார்ந்துதான் எல்லா இயக்கங்களும் எழுந்துள்ளன.
கமல் கேள்வி என் கேட்கிறார் …என்பது விடுத்து…அவரின் கருத்துக்களையும் கேள்விகளையும் சற்றே ஆராயுங்கள் …

அந்தக் கருத்துக்களிலும் கேள்விகளிலும் பல்வேறு சுயநலம் இருக்கலாம் …
கடந்த காலத்தின் கசப்பு உணர்வுகளின் சுவை தெரியலாம் …
மிகப் பெரிய கட்சியின் “செயல் தலைவர்” கொடுத்த தைரியமும் இருக்கலாம் …

ஆனால் “உண்மை” இல்லை என்று யாராவது கூற முடியுமா….

மோகன் தாஸ் கரம்சந் என்கின்ற ஒரு சாதாரண குடும்ப மனிதன், “மகாத்மா” வாக உயர்ந்தது ஒரு சிறு புகைவண்டி நிலைய நிகழ்ச்சியின் பொறியில் தான் என்பதை நாம் மறக்க வேண்டாம். சற்றே நோக்கினால் “சுயநலம்” நிச்சயம் உண்டு…..காலத்தின் கைவண்ணம் அதுவே நம் தேசத்தின் “துருவ நட்சத்திரமாய்” ஒளிர்ந்தது…

கமலின் நிலைப்பாடும் “கோமகனா” இல்லை “கோமாளியா” என்பதை காலமும் மக்களும் முடிவு செய்வார்.

மீண்டும்…
எனக்கு கமலிடம் நிறைய முரண்பாடுகள் உண்டு. அவரின் அரிதாரத்தையும் தொழில் பக்தியையும் கண்டு இன்னும் வியப்பவன் நான்…
அவரின் இன்றைய நிலைப்பாடுகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்…

அடர்ந்த அன்பு செய்தல் வேண்டும்

புதிய நாட்காட்டிகள் வீடுகளில் வந்து குறைந்தது இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. சமூக வலைத்தளங்களின் வரவுக்குப் பின் நிதானித்து திரும்பிப் பார்ப்பதில் கூட ரசனைகள். எல்லோரும் எதையோ தேடுவது மட்டும் நிதர்சனம். சற்றே நிதானமாக கடந்த இரண்டு நாட்களாக நானும் திரும்பிப் பார்க்க முயற்சி செய்தேன்….

மனிதர்கள் இல்லாத உலகம் இல்லை. இறை பேராற்றல் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. நிகழ்வுகள் மீது பெரும் வருத்தமில்லை. மற்ற உயிர்களுடன் கூடி ஒத்து வாழ்வது போல் மிகுந்த இன்பமில்லை. நாமாக நாமும், நமைச் சுற்றியுள்ளவர்கள் அவர்களாக அவர்களும், எல்லா உயிரின் இயல்பும் ஒன்றிணைய, ஒரு தலமாக பூமி இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி…பெரும் கனவு…

மனிதர்கள் மீது நமக்குப் பெரும் குறை உள்ள காலமாக நகள்கிறது நாட்கள். எல்லாவற்றிலும் கணக்குகள். எங்கும் கணக்குகள். இந்த உலகம் “துவந்தமானது”. எப்பொழுதும் இரு வேறு நிலைகள் உண்டு, உண்மை அதுதான்…அதுமட்டும் தான்…. இரண்டு நிலைகளிலும்; நிச்சயம் கணக்குகளும் தன நிலை சார்ந்த நியாயங்களும் இணைபிரியா உரு உவமையாய் உழன்று கொண்டிருக்கும். Did you see the movie “The Matrix”…”Oracle” உலகம் “துவந்தமானது” என்பதை தன் வார்த்தைகளில் விவரித்திருப்பார். “My Job is to make the Equation Always Unstabble”…. உலகம் “துவந்தமானது”.

ஆனால் கணக்குகள் தாண்டி வாழ்க்கை உண்டு என்பதை உணர்தல் வாழ்க்கையின் சமன்பாட்டின் முதல் படியாக நான் காண்கிறேன். இந்த வரிகளை படித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் உள்ளக் கண்ணாடியில் சில பிம்பங்கள் வந்து போகலாம். சற்றே நிதானித்து சிந்தியுங்கள். அந்தப் பிம்பங்கள் எவ்வகையானவை என்று. கணக்கு போட்டு வெற்றி பெறுவது போல் தோன்றலாம். வேண்டியவர் வேண்டாதவர் தாண்டி, தனக்கு தேவையுடையோரை மட்டும் நாடும் வாழ்கை நன்மையல்ல. கணக்குகளோடு மட்டும் வாழும் வாழ்கை அவர்களுடையது என்றால், அவர்களுக்கும் சேர்த்து “பிராத்தனை” செய்வது உங்கள் கடமை. சற்றே நகர்ந்து சென்று விடுங்கள்…”பிராத்தனை” செய்யுங்கள்… எல்லோரும் நல்லவரே. அடர்ந்த அன்பு செய்தல் வேண்டும், அதுவே நம் குணமுமாக வேண்டும்.

அடர்ந்த அன்பு செய்யும் பொழுது நம் நிலை என்ன… மீண்டும் கணக்குகள் தோன்றாதா என்கிற கேள்வி உண்மை. அதற்கு என் தத்துவ ஆசான் ஒரு சிறிய எளிமையான வழி சொல்கிறார்.“யாரையும் சந்தேகிக்காதீர்கள், யாரையும் நம்பாதீர்கள்” என்பது தான் அது. இந்தக் கூற்றுக்கு விளக்கம் சொல்வது மிகவும் கடினம். உணர்வது தான் ஒரே வழி. முயற்சித்துப் பாருங்கள்… உங்களால் இந்த கூற்றை வாழ முடிந்தால் இந்த உலகத்திலேயே மிகவும் நிறைவான நபராக நீங்கள் மாறுவது சத்தியம். நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.”இறை  பேராற்றலின்” கனிவு இன்னும் கிட்டவில்லை. அடர்ந்த அன்பு செய்தல் வேண்டும், அதுவே நம் குணமுமாக வேண்டும்.

பொறுமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்…

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும்….

பெருமை தரும் நினது  புகழ் பேச வேண்டும்…. பொய்மை பேசாது இருக்க வேண்டும் …

பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்…. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்…..

மதிவேண்டும்…நின்கருணை நிதிவேண்டும்…..

மாற்றம் வேண்டி

மனதைக் கொண்டு மணி மகுடம் கண்டோம்
நாம் உனக்கு…
உன் மணி மகுடம் கீழிறங்கா கனவு
கொண்டோம் சூளுரைத்து !!!
அல்லவை ஓங்கும் நேரம், உன் நினைவு
தடம் மாறும் தருணமிது …
எவரும் கொண்டாடும், “எவ்வழி” வந்தோரும்
என் பொருட்டல்ல.

“இவரே” எனக் கொண்டாடும் உண்மைப்
புகழ் நிலைத்திருக்கும் உணர்வாய் நீ…
உன் செயல் சொல்லும் செய்தி சுற்றம்
பார்க்கச் செய்திருப்பாய்…
சுற்றம் உன்நிலை கொள்ளும், உண்மையல்ல
மண்சரடு மட்டுமிங்கு !!!
தோள் சுமந்து கொண்டாடிய காலமின்னும்
பசுமையாய் நினைவென் நெஞ்சத்தில்
தோள் மீறி வளர்ந்த உன்செயல் யாவும்
பட்டமரம் உணர்வொத்த பகுதிதானின்று…

சிறு கவிதையாய் வாழ்க்கை உண்டு, புகழோடு
வாழப் பலவழியுமுண்டு
வாழ்தலே சில நேரமிங்கு வசந்தமாய்
பரிமளிப்பதுண்டு

மாற்றம் மட்டுமே நிரந்தரம், உண்மையறியா
பேதையல்ல நான் …
நல் மாற்றமிங்கு நிரந்தரமாய் நிலைக்க
பேராற்றலிடம் இறைஞ்சி நான் ….

வாக்காளன் பேசுகிறேன்… வாக்காளர்களோடு மட்டும் பேசுகிறேன்

என் இனிய வாக்காள நண்பர்களே, தமிழக அரசியல் தேர்தல் களம் தன இறுதி நாட்களை நோக்கி நகர்ந்துள்ளது… இன்னும் ஒரு மணி நேரத்தில் அனைத்து விதமான பரப்புரைகளும் கருத்துக் கணிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. அரசியல் களத்தை பின்தொடர்வது என் இயல்பு. கட்சிகள் குறித்து என் கருத்துக்களை தொடர்ந்து நண்பர்களிடமும் சமூக வலைதளங்களிலும் பகிர்த்து வந்துள்ளேன். இந்த முறை இது போன்ற கருத்து எதுவும் நான் பகிரவில்லை.

ஆனால் இன்று என் மனவோட்டத்தை பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது. எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு கனத்த மவுனம் மக்களிடம் நிலவுகிறது. பணபலம் உள்ள கட்சிகள், பணத்தால் கட்டப்பட்ட கூட்டணிகள், சாதி வோட்டுகளை மட்டும் நம்பும் கட்சிகள் என எங்கும் ஒரு கத்திரி வெயில் தாண்டிய புழுக்கம். 1991 ஆம் ஆண்டில் இருந்து நான் பின்பற்றும் தேர்தல் களங்களில் சாதியும் பணமும் இந்த அளவு இதற்கு முன் எந்தத் தேர்தலிலும் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமா என்பது சந்தேகமே…. அரசியல் கட்சி தாண்டி மக்களின் மன நிலைகளும் பெரிய அளவில் மாறிவிட்டது. இலவசங்களும் கடன் தள்ளுபடிகளும் சாதனைப் பட்டியலில் சேர்க்கும் அவலம் நிலவுகிறது. இவை வாழ்க்கைத் தரத்தையோ, சமூக பொருளாதார சமநிலையையோ நிச்சயம் கொண்டு வாரது என்பது திண்ணம். மக்கள் சிந்திக்காமல் இருக்க அனைத்து செயல்பாடுகளும் அணைத்துச் செயல்படுத்தப் படுகிறது.

இந்த நிலை மாற நாம் என்ன செய்ய முடியும் …. ஒன்றே ஒன்றுதான் … நிச்சயம் வாக்களியுங்கள்… இந்த முறை நான் அரசியல் கட்சிகள் தாண்டி, தேர்தல் அறிக்கைகள் தாண்டி… நிற்கின்ற வேட்பாளர்களில் என்னிடம் இருத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு வேட்பாளருக்கு வாக்கு அளிக்க முடிவு செய்துவிட்டேன்… அவர் வெற்றிபெறுவது கடினம் எனத் தெரிந்தும், மன நிறைவுடன் நான் …. மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்து தான் தொடங்க முடியும் …. வாழ்க ஜனநாயகம்…..

பல்வேறு நண்பர்கள், சுமார் 15-20 மாவட்ட நபர்கள், அரசியல் சார்ந்த அன்பர்கள், அதிகார வர்க்கச் செய்திகள்/தகவல்கள், பத்திரிகை தொலைக்காட்சி நண்பர்கள், அரசியல் விமர்சகர்கள், சாமானிய மக்கள், தொழில் நடத்தும் நண்பர்கள், அரசியல் அதிகார வர்கத்தின் நெருங்கிய தொடர்புகளில் இருப்பவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் நான் அறிந்து கொண்ட தகல்களின் அடிப்படையில், என் தேர்தல் கணிப்பு:
அதிமுக -> 95 – 110
திமுக+ -> 85 – 95
மற்றவர்கள் -> 7 – 10
இழுபறி -> 30-35

காட்சியும்-கவிதையும்: உயிரின் உயிரில்

காட்சியும்-கவிதையும்

தன் முதல் குழந்தை ஒரு கைபிடித்து நடந்து வருகிறது. மறுகை பிடித்து மனைவி நடந்து வருகிறாள். மனைவின் மறுகை கர்ப்பம் சுமக்கும் வயிற்றின் மீது…. ஆணின் சிந்தனை ஓட்டம் கவிதையாய்….இசையாய்…

பல்லவி

என் உயிரின் இசையாய் ஆனவளே
என் உயிரின் கவிதை சுமப்பவளே
இசைந்து உரசும் காற்று இசையாய் இனிமை சேர்த்ததடி
அன்பால் நாம் இசைந்து வடித்த ஒரு கவிதை என் கையிலடி
அன்பின் கரை காணா மகிழ்ச்சியின் மறுவடிவம்…மீண்டும் ஒரு கவிதையடி

சரணம்

தாயாய் நீ ஆனாயடி
என் தாரமாய், நீ என் வாழ்வில் நிறைந்தாயடி
நீயும் எனக்கு ஒரு குழந்தைதானடி ….

உனக்கு ஒரு குழந்தை தானடி, எனக்கோ இரண்டும் குழந்தையடி
தாயுமானவன் கதை கேட்டதுண்டு; இன்று என் வாழ்வும் வடிவமும் ஆனதடி
என் பிறப்பின் பரிணாமம் உன் உருக் கொண்டு நிறைந்ததடி ….

சிறு நடையாய் நீ நகர்ந்தாயடி, இரு உருவம் உன் நிழலாய் தொடர்ந்ததடி
என் உயிரின் முழு நாடி நீயடி, உன் உறவும் உன் பார்வையும் தவிர வேறேன்ன வேண்டுமடி
இந்தக் கல்லுக்குள்ளும் ஈரமடி, என் வாழ்கைக்கு உன்வரவு புது இளவேனிலடி …

எந்த மழலையின் சிரிப்பும் இனிமையடி, நம் கவிதையின் உயிரும் அதுதானடி
மழலை உயிர்மாறும் பெண்மையடி, அந்தப் பெண் சிரிப்பு அதனினும் அமிர்தமடி
பிரபஞ்ச ரகசியம் உணரும்படி, ஈரைந்து மாதம் நான் உன் அருகிலடி …

உன் உருவில் மாற்றமடி; உளிபடும் கல்லாய் நீயடி…. சிலையின் நளினம் நம் குழந்தையின் சிரிப்படி
மீண்டும் வலி காணும் மனம் கொள்தல் எளிதன்றடி …அன்பை மீண்டும் நிறைசெலுத்த நீ துணிந்தாயடி …
இசையின் வழி வந்த கவிதையடி… மீண்டும்…உயிராய் உன் உயிருள் ஒரு கவிதையடி….