இயற்கையை இறைஞ்சும் நேரம்

இவ்வளவு காலையில் நான் பதிவுகள் எழுதியதில்லை. இதுவே முதல் முறை …

“மழை” குறித்து எந்தப் பதிவும் இடவேண்டாம் என்கிற ஒரு உறுதியுடன் கடந்த 3 வாரங்களாக இருந்தேன். இன்று மனதில் முழு மாற்றம்…

நீங்கள் தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மற்றும் வேறு எந்த வெளிநாட்டிலோ வாழும் தமிழராய் இருந்தால் நிச்சயம் இந்த மழை வெள்ளம் குறித்த செய்திகளை கடந்து கொண்டிருப்பீர். சரியாகச் சொல்ல வேண்டுமானால் தீபாவளியின் முதல் வாரத்தில் தொடங்கிய மழை . கடந்த 3 வாரங்களாக பல்வேறு அளவுகளில் பல்வேறு பாதிப்புகளுடன் மழை தொடர்கிறது.

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் வெற்றி… FaceBook மழை குறித்த கருத்துக்களால் நிரம்பி வழிகிறது… பல்வேறு தகவல்கள்… பல்வேறு புகைப்படங்கள் … பல்வேறு வீடியோக்கள் … பல்வேறு ஆலோசனைகள்…

கீழே உள்ள தகவல்களில் பெரும்பாலானவற்றை நீங்கள் நிச்சயம் தவிர்த்து இருக்க முடியாது :

 • 8.5 செ.மீ. கனமழை… 4 மணி நேரத்தில்… மூழ்கியது சென்னை
 • திட்டமிட்டபடி வந்ததா காட்டாற்று வெள்ளம்….
 • குளங்கள் நிரம்புகின்றன….நீர் வெளியேற்றம் …
 • முற்றிலும் போக்குவரத்துக்கு ஸ்தம்பிப்பு …
 • வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் …
 • உணவுக்குத் தட்டுப்பாடு வரும் அபாயம் …
 • வெள்ள நிலவரம் குறித்து whatsapp தகவல்கள் …
 • நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு சேர்ந்தனரா என்ற விசாரிப்புகள் …
 • வாகனங்கள் பழுதில்லாமல் ஓடுகின்றதா என்கிற கவலை …
 • சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் மழை நிலவரம் …
 • விஞ்ஞானி ரமணன் என்ன கூறுகிறார் என்கிற எதிர்பார்ப்பு …
 • வெள்ள மீட்பு நடவடிக்கைகள் என்ன …
 • அரசும் மாநகர நிர்வாகமும் எப்படிச் செயல்படுகிறது என்கிற செய்திகள் …
 • எதிர்கட்சிகளின் குற்றசாட்டுகள் …
 • மழை குறித்து கவிதை …
 • பாதிப்பில்லாத பகுதிகளில் வாழும் நண்பர்களின் மகிழ்ச்சி …
 • தன்னளவில் மற்றவர்களுக்கு உதவும் கனிவான இதயங்கள் …
 • ஏன் மழை வந்தது என்கிற கருத்துகள் …
 • குளங்கள் ஏரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து புதிய தகவல்கள் …
 • பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை …
 • இது போன்ற நிலை வெளிநாட்டில் எவ்வாறு கையாளப் பட்டிருக்கும் என்பதற்கான குறிப்புகள் …

நேற்று அலுவலகம் விட்டு வீடு வந்து சேர 1.5 மணி நேரம் ஆனது… 15-20 நிமிடத்தில் நான் கடக்கும் தூரமிது… முட்டியளவு தண்ணீரில் வாகனத்தை தள்ளிக் கொண்டே வர வேண்டிய நிலை… நான் தினமும் கடக்கும் சாலையோரக் குடும்பங்கள் இருத்த இடத்தில் வெறும் கோணிச் சாக்குகள் மட்டும் மிச்சமிருந்தன…

இந்த இடை விடாத அடை மழையிலும், குழந்தைகளை “பெருமைமிகு” கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தின் வாசலில் சுமார் 50-60 குழந்தைகள் வழி தவறி விழித்துக் கொண்டிருந்தனர்… சில பெற்றோர்கள் குழந்தைகளை குடையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்…

ஆனால் என் மனம் இந்த தகவல்கள் எல்லாம் தாண்டி உழன்று கொண்டிருந்தது … தீபாவளிக்கு முந்திய வார இறுதி நாள்களில் இந்த மழையை நன்றாக அனுபவித்தேன்… முழுமையாக மழையில் நனைந்து மகிழ்ந்தேன் … தீபாவளிக்குப் பின் மழையின் உக்கிரம் குறித்து சற்றே கவலைப்பட்டேன் … மக்களின் துயரம் குறித்து சிந்தித்தேன்… கடந்த ஒரு வாரமாக சிந்தனை முற்றிலும் மாறி விட்டது…

“இயற்கையின் முன் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்பது தான் அது… இப்படி நான் சொன்னவுடன் குளம் தூர் வாரவில்லை, மழை நீர் வடிகால் இல்லை, நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட்டது, நீர் செல்லும் வழிகள் மூடப் பட்டன என்கிற போன்ற சொற்றொடர்களுக்கு உள்ளே மீண்டும் சென்று விடாதீர்கள். மிகப் பெரும் மழையை தான், தன் குடும்பம் மட்டுமில்லாமல் தன் கால்நடைகளுடன் இயல்பாகக் கடக்கின்ற நபர்களை நான் பார்த்திருகிறேன்.

கல்லணை கட்டி நீர் மேலாண்மை செய்த தமிழன் என்கிற புகழுரை இங்கு உதவாது. கல்லணை கட்டிய கரிகாலன் இயற்கையிடம் இறைஞ்சி வேண்டியிருப்பதன் பலனால் நீர் அங்கு மட்டுப் பட்டு நிற்கிறதோ என்று தோன்றுகிறது. தான் அங்கு மனித இனத்தின் நன்மைக்க சற்றே இளைப்பாறுவோம் என்று இயற்கை கனிவுடன் தன் சக்தியை குறைத்துள்ளது போல் தோன்றுகிறது.

“நீண்ட சிந்தனையும், பேச்சுக்களும், திட்டமிடலும், அதித செயல்பாடுகளும் உதவுமா ?” என்கிற கேள்வி விடையில்லாமல் தொக்கி நிற்கிறது… இயற்கை தன் வலிவைக் காட்டும் பொழுது எல்லாம் மனிதனின் மனதில் எழும் இந்தக் கேள்வி; எப்போழுதும் விடையில்லாமல் தொக்கி நின்றுகொண்டே இருக்கிறது. “இயற்கைப் பேராற்றல்” முன் அனைத்தும் தூசு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நாம் “இயற்கைப் பேராற்றல்” சக்தியை முழுவதும் உணர்வது ஒன்று தான் வழி. இன்றைய சூழ்நிலை மாறியவுடன் மீண்டும் நிலம் வாங்க புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்வது நம் இயல்பாகி விட்டது.

இது சர்வ சமய பிராத்தனை செய்ய வேண்டிய நேரம். கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்கள் கூட இயற்கையிடம் முறையிட்டு உரையாடலாம். இயற்கை வெளிச் சுற்றில் மனித இனம் மிகவும் சிறிய பகுதி. இந்த அண்டப் பேரண்டத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இந்த இடத்தில வாழச் சம உரிமை உள்ளது என்கிற உண்மையை, நாம் மறந்த மிகப் பெரிய உண்மையை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளச் சரியான தருணம்.

நம் செய்த காரியங்கள் அனைத்தையும் மறந்து கடந்து செல்லும் கனிவான மனம் நிச்சயம் இயற்கைப் பேராற்றலுக்கு உண்டு. நம் மனதின் மாசுகளையும், கர்வப் பெருமைகளையும் விடுத்தது….இயற்கையை இறைஞ்சும் நேரம் இது … கடந்த 12 மணி நேரமாக நான் அதை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *