மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 4

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற இரண்டாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/30/மதுவிலக்கு-சாத்தியமா-2/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முன்றாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: : http://www.ganapathi.me/2015/09/01/மதுவிலக்கு-சாத்தியமா-3

இந்தப் பதிவில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் (நான்காவது பகுதி) உங்கள் பார்வைக்கு (இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது).

தொடர்ச்சி ….

அரசுக்கு புதிய வருவாய் வழிகள்:

அரசுக்கு வருவாய் வருவதற்கு ஆயிரம் வழிமுறைகள் இருக்கின்றன. அரசியல்வாதிகளின் இலஞ்ச-ஊழல், முறைகேடுகள் காரணமாகவும், அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இன்மையாலும் அரசுக்கு முறையாக வரவேண்டிய வருவாய் வருவதில்லை.

மதுவிலக்கை அமல்படுத்தினால் டாஸ்மாக் வருமானம் 30 ஆயிரம் கோடி போய்விடும் என்று பதறும் தமிழக அரசுக்கு, மாற்று வருவாய் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி ”தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம்”(த.பொ.மூ.பொ.ச) ரூ.5 லட்சம் கோடி வருவாய்க்கும், 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இக்கையேடு 24-07-2015 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில் த.பொ.மூ.பொ.சங்கத்தைச் சார்ந்த திரு.வீரப்பன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பொறியாளருமான முனைவர்.முத்துக்குமரன் அவர்களும், ”மது இல்லாத் தமிழகம் கற்பனையா” புத்தகத்தின் ஆசிரியர் அருணபாரதி அவர்களும், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக நானும் கலந்துகொண்டோம்.

அக்கையேட்டில் உள்ள 5 லட்சம் கோடி வருவாய்க்கு வழிசொல்லும் திட்டங்களில் சில குறிப்பிட்ட திட்டங்கள்…

– உள்ளாட்சி அமைப்புகளில்(பஞ்சாயத்து,பேரூராட்சி, நகராட்சி) உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்களின் வண்டல் மண்ணை தூர்வார வெளிப்படையான ஏலம் விடுவதன் மூலம் – ரூ. 5000 கோடி கிடைக்கும். இதனால் நிலத்தடி நீரும் பெருகும்.

– இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள ஆயிரக்கணக்கான கோயில்களுக்குச் சொந்தமான விளைநிலங்கள், வாடகை இடங்களில் முறையாக வரி/கட்டணம் வசூலித்தல் மூலம் – ரூ.5000 கோடி

– இலட்சக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் – ரூ.10,000 கோடி

– வீட்டுமனை உருவாக்கத் திட்டம்(Housing Layouts), கட்டிட அனுமதி, சொத்துவரி போன்றவற்றை முறைப்படுத்துவதன் மூலம் – ரூ. 3.5 லட்சம் கோடி

– பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை மிகக்குறைந்த விலைக்கு கொடுக்கும் கொள்கையில் மாற்றம் செய்தால் – ரூ.20000 கோடி

– சுற்றுலாத் தலங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் கூடுதம் வருவாய் – ரூ.5000 கோடி

– இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பொதுஇடத்தில் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் – ரூ.10000 கோடி

பழுத்த அனுபவமும், தீவிர சமூக அக்கறையும் கொண்ட மூத்த பொறியாளர்கள் ரூ.5 லட்சம் கோடி மாற்று வருவாய்க்கு வழிகாட்டியுள்ளனர். இதில், 10% தொகையான ரூ.50 ஆயிரம் கோடி கிடைத்தாலே போதும் டாஸ்மாக் வருமானம் இல்லாமல் அரசை நடத்திவிடலாம். கூடுதல் வருவாயை வேறு மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
இயற்கை வளங்களை முறையாக நிர்வகிப்பதின் மூலம்:

ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட், கிராவல் மண் போன்ற இயற்கை வளங்களை முறையாக நிர்வகிப்பதின் மூலம் மட்டுமே மதுவிலக்கினால் ஏற்படும் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டிவிடமுடியும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழகம் நன்கறிந்த சமூகப் போராளியுமான முகிலன்.

முகிலன் முன்வைக்கும் மாற்று வருவாய் திட்டம்:

ஆற்று மணல் குவாரிகளை முறைப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் – ரூ.13100 கோடி

தாதுமணல் விற்பனையின் மூலம் கூடுதல் வருவாய் : ரூ.14560 கோடி

கிரானைட் விற்பனையின் மூலம் – ரூ. 10950 கோடி

மொத்தம் – ரூ. 38610 கோடி
தனியாரிடம் இல்லாமல் அரசே இயற்கை வளங்களை நிர்வகிக்கும்போது அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் ; சுற்றுசூழலும் காக்கப்படும்.

நல்ல அரசாங்கம் என்பது…

ஒரு நல்ல அரசாங்கம் நியாயமான வழிமுறைகளின் மூலமும், நியாயமான வரிகளின் மூலமும் எவ்வளவு நிதி திரட்டமுடிகிறதோ அதைவைத்துத்தான் பட்ஜெட் போடவேண்டும். திருட்டுத்தொழில் செய்து சொகுசு வசதியோடு வாழ்ந்த குடும்பம், நியாயமாய் வாழ விரும்பினால் ஆடம்பரங்களைத் தவிர்த்து உள்ளதை வைத்துத்தான் வாழவேண்டும். ஆடம்பர வசதி கிடைத்தால்தான் ஒழுக்கமாய் வாழ்வேன் என்ற வாதத்தை ஏற்கமுடியாது.

குஜராத்தில் சாராயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லை. கிட்டத்தட்ட நம்முடைய பட்ஜெட் அளவிற்குத்தான் அவர்களுக்கும் வருவாய் வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில்(2015-2016), வரவையும் செலவையும் கழித்துவிட்டுப் பார்த்தால் குஜராத் பட்ஜெட்டில் ரூ.125 கோடி மிச்சம் இருந்தது(Fiscal Surplus). சாராய சாம்ராஜ்யம் நடக்கும் தமிழகத்திலோ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.31829 கோடிக்கு பற்றாக்குறை (Fiscal Deficit) இருந்தது.

ஆக, சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்தவேண்டும் என்பது தார்மீக ரீதியில் அவசியம்.

******** அறிக்கை முடிவு ******

இந்தக் தொடர் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல்:

1) எல்லா அண்டை மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்படவில்லை; தமிழகத்தில் மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், மக்கள் மரணமடைவர்;
2) மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ???) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும்

என்கின்ற இரண்டு பெரும் கேள்விகளுக்கு விடை காணாமல் மதுவிலக்கு சாத்தியமில்லை, என்கின்ற மக்களின் மனநிலையில் இருந்து இந்தக் கருத்துக்கள் பகிரப்பட்டன.

கடந்த பதிவுகளில் உள்ள தகவல்கள் மூலம் சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்தமுடியும் என்பது பொருளாதார ரீதியில் சாத்தியம் என்கின்ற கோணத்தில் நாம் நிச்சயமாக சிந்திக்கலாம் என்கின்ற நம்பிக்கை கிடைத்திருக்கும். “மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ???) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும்” என்கின்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளது என்பது திண்ணம்.

அடுத்த தொடர் பதிவில் “கள்ளச் சாராயம் பெருகும்” என்கின்ற கேள்விக்கு உண்டான பதில், மற்றும் இந்த நீண்ட “மதுவிலக்கு” விவாதத்தில் என் நண்பர் ஒருவர் சொன்ன மற்றும் ஒரு கோணம் உங்களுக்காக ….

One thought on “மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 4”

  1. Boss, intha Tamilnadu Vs Gujarat comparision pannathenga boss..

    Already Avanga problem perum problem..

    Ponavarusham compare pannithan 1/40 akitichi… Marupatiyum sonna intha thadavai.. periya muttai aakitum..

    You will get answer your questions from the outcome of TNGIM 2015 by next week 🙂

Leave a Reply to Evano Oruvan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *