மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 3

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற இரண்டாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/30/மதுவிலக்கு-சாத்தியமா-2/

இந்தப் பதிவில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் (மூன்றாவது பகுதி) உங்கள் பார்வைக்கு (இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது).

தொடர்ச்சி ….

2. எதிர்காலத்தில் செய்யவேண்டியது:

ஆண்டுதோறும் தரும், வட்டித்தொகையை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும்.
மிச்சமாகும் தொகை: ரூ.893 கோடி (வருடத்திற்கு )

இந்த, எளிமையான வழிமுறைகள் மூலமே, மொத்தத்தில் : ரூ.12042 கோடி மிச்சமாக்கலாம். வட்டித் தொகையை குறைக்கவாய்ப்பில்லை, மின்சார-உணவு மானியத்தை மேற்சொன்ன அளவுக்குக் குறைக்க வழியில்லை என்ற நிலையிலும் குறைந்தபட்சமாக பத்தாயிரம் கோடிக்கு மேல் மிச்சமாவது நிச்சயம்.

அதாவது, அனாவசிய இலவசப் பொருட்களைத் தவிர்த்து, மானியங்கள் வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களைந்தாலே பட்ஜெட்டிற்கு ரூ.10000 கோடி கூடுதலாகக் கிடைக்கும். இது டாஸ்மாக்கில் சம்பாதிக்கும் வரித் தொகையில்
(ரூ.29672) மூன்றில் ஒரு பங்கை ஈடுகட்டும்(33%)….

1. விற்பனை வரி அதிகரிக்கும்…
தமிழகத்தின் சொந்த வரிவருவாயான 96082 கோடியில், 72068 கோடி விற்பனை வரி மூலம் வருகிறது.

டாஸ்மாக் மூலம் வரும் விற்பனை வரியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழகத்தின் தற்போதைய விற்பனை வரியானது கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி என்ற அளவில்தான் உள்ளது. நியாயமாக தொழில் நடத்தும் சில வியாபரிகளோடு பேசியபோது விற்பனை வரி அதிகாரிகள், வரிவசூல் செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை. ஆடிட்டர்கள் மூலம் தேவையான லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு விற்பனை வரி முறைகேட்டைக் கண்டுபிடிப்பதில் கோட்டைவிட்டுவிடுகின்றனர் என்றே தெரிவிக்கின்றனர்.
இதிலுள்ள, வரிஏய்ப்பை குறைத்தால் அரசுக்கு கணிசமான விற்பனை வரி அதிகரிக்கும். தொழில் முனைவோர்களிடம் பேசியபோது 20% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர். இருந்தபோதும், நாம் 10% விற்பனை வரி மட்டுமே அதிகம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால்கூட அரசுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் வரி ரூ.5000 கோடி. அதாவது, விற்பனை வரி வசூலில் முனைப்புக் காட்டி, இலஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலே அரசிற்கு கூடுதலாக ரூ.5000 கொடி கிடைக்கும்.

இப்போது டாஸ்மாக் தொடர்பான விற்பனை வரிக்கு வருவோம்.

2015-16 டாஸ்மாக் மூலம் அரசுக்கு வரவுள்ள மொத்த வரியானது ரூ.29672 கோடி.
இதில், ரூ.22375 கோடி விற்பனை வரியாகவும், ரூ.7297 கலால் வரியாகவும் வருகிறது.
இந்த 29672 கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டுவது எப்படி என்பதுதான் மதுவிலக்கு விவாதத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது.

எதார்த்தமாகப் பார்த்தால், மதுவிலக்கை அமல்படுத்திய பிறகு டாஸ்மாக் கடைகளுக்கு சென்றுகொண்டிருந்த பல ஆயிரம் கோடிப்பணத்தில் பெரும்பகுதியானது, வேறு வகைகளில் செலவழிக்கப்படும்( உடைக்கோ, உணவுக்கோ..பிற) அப்படி, பிற வகைகளில் செலவழிக்கப்படும்போது அரசுக்கு கிடைக்கும் விற்பனை வரியானது அதிகரிக்கும். இந்த விற்பனை வரி அதிகரிப்பு, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வரி வருவாயில்(ரூ.29672 கோடி) 20% ஆக இருந்தால் கூட ரூ.5934 கோடி கிடைக்கும்.
புரிதலுக்காக, ரூ.6000 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

இந்த சமயத்தில் ராஜாஜி அவர்கள் 1937ல் மதுவிலக்கைக் கொண்டுவந்தபோது, விற்பனைவரியை அறிமுகப்படுத்தியதின் பின்ணனியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மக்கள் இதுவரை சாராயத்திற்கு செலவழித்த பணத்தை உணவுப்பொருட்கள், துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்று வேறு ஏதேனும் வாங்குவதற்கு செலவழிப்பர்.

அப்படிப் பொருட்கள் வாங்கும்போது அதில் சிறுதொகையை வரியாக, விற்பனை வரியாக சேர்த்துவிட்டல் அரசுக்கு அதிலிருந்து கூடுதல் வரிவருவாய் வரும். இந்த அடிப்படையில், இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்ராஸ் மாகாணத்தில் 1937ல் விற்பனை வரியை ராஜாஜி கொண்டுவந்தாஅர். ( பம்பாய் மாகாணத்தில் 1938ல் தான் விற்பனை வரி அறிமுகமானது)

ஆக, விற்பனைவரியை முறையாக வசூலிப்பதன் மூலம் ரூ.5000 கோடியும்; மதுவிற்காக செலவிடப்பட்ட பணமானது வேறு வழிகளில் செலவிடப்படும்போது கூடுதலாகக் கிடைக்கும் விற்பனை வரியாக ரூ.6000 கோடியும் கிடைக்கும் என்று தெரிகிறது. மொத்தத்தில் ரூ.11,000 ஆயிரம் கோடி. இது, டாஸ்மாக் மூலம் கிடைத்துவந்த வரிவருவாயில் (ரூ.29672) மூன்றில் ஒருபங்கை ஈடுகட்டும் (37%)
ஆகவே, மதுவிலக்கை அமல்படுத்தினால் பட்ஜெட்டில் 30 ஆயிரம்கோடி துண்டுவிழும் என்பதெல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் “தெரிந்தெ சொல்லும் அப்பட்டமான பொய்”. எளிதாய் வந்துகொண்டிருக்கும் டாஸ்மாக் வருமானத்தை விட்டுவிட்டு எதற்காக மெனக்கெட வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.

டாஸ்மாக் வருமானம் மூலம் அரசு கஜானாவை நிறைத்துவிட்டால், விற்பனை வரி மற்றும் பிற சட்டங்களைக் காட்டி மிரட்டி வணிகர்களிடம் பெருந்தொகையை இலஞ்சமாகப் பெறுவது எளிது. கட்சியினர் நடத்தும் மாநாடுகளுக்கு வசூல் செய்வது எளிது. முறையாக விற்பனை வரியை வசூலிக்க ஆரம்பித்துவிட்டல், கட்சிக்காரர்கள் வணிகர்களிடம் இலஞ்சம் கேட்கமுடியாது. நாம் அறிந்தவரை, வணிகர்கள் முறையாக வரிகட்டத்தான் விரும்புகிறார்கள். இலஞ்சம் கொடுப்பதை விரும்பவில்லை. ஆனால், அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் சிக்கலான வியாபார விதிமுறைகள், வரி விதிப்பை எளிதாக்க முன்வருவதில்லை. ஆகவே, வணிகர்கள் வேறு வழியில்லாமல் இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்

………………………………….

இந்த அறிக்கையின் இறுதிப் பகுதி [அரசுக்கு புதிய வருவாய் வழிகள், முகிலன் முன்வைக்கும் மாற்று வருவாய் திட்டம்…] போன்ற தகவல்கள் அடுத்த பதிவில் ….  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *