மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 2

மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/

இந்தப் பதிவில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் உங்கள் பார்வைக்கு (இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது)

மதுவிலக்கினால் ஏற்படும் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி
மதுவிலக்கு என்ற கோரிக்கையைக் கேட்டவுடன், அரசு அதிகாரிகள், மதுவிலக்கு அமைச்சர் அனைவரின் வாயிலிருந்தும் உடனடி வார்த்தைகள் இரண்டு. ஒன்று கள்ளச்சாராயம். மற்றொன்று, அரசுக்கு வருவாய் இழப்பு. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் தமிழக அரசு திவாலாகிவிடும் என்ற மாயத்தோற்றத்தை அரசாங்கமே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இது உண்மையா…? சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாதா..? முடியும். புள்ளிவிவர ஆதாரத்தோடு விளக்குகிறோம்.

மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வழிமுறைகள்:

1. செலவுகளைக் குறைப்பது
2. வரவுகளை அதிகரிப்பது
3. குடிப்பதற்காக செலவழிக்கப்பட்ட பணம் பிற செலவினங்களில் செய்யப்படும்போது அரசுக்கு வரிவருவாய் அதிகரிக்கும்.

செலவுகளைக் குறைப்பது:

செலவுகளைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் போது, இப்போது அரசுக்கு உள்ள செலவுகள் என்ன என்று பார்த்துவிடுவோம்:

ரூ.1,47,297 கோடி வருவாய் செலவினம் (Revenue Expenditure) தொடர்பான அரசாங்கத்தின் செலவுகளை நான்கு வகையினங்களில் அடக்கிவிடலாம்..

1. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் ( 41 %)
2. இலவசங்கள், மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை ( 40% )
3. இலவசங்களை வினியோகிக்க,பரமாரிக்க ஆகும் செலவு ( 7% )
4. வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டி ( 12 % )
மேற்சொன்ன நான்கு வகையினங்களில் எந்த செலவைக் குறைக்கமுடியும் என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..

முதலாவதாக உள்ள அரசு ஊழியர், பென்சனை குறைப்பது உடனடி சாத்தியமில்லை. வரும் ஆண்டுகளில் வேண்டுமானால் மிகவும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம். 2015-16 பட்ஜெட்டில், ரூ.1,47,297 கோடி செலவில் அரசு ஊழியர் சம்பளம்(ரூ.41215 கோடி), பென்சன்(ரூ.18667 கோடி) என மொத்தம் ரூ.59882 கோடி இந்த வகையில் செலவாகிறது( 41%)
இரண்டாவதாக உள்ள இலவசங்கள், மானியங்களில் கணிசமாகக் கைவைக்கலாம். 2015-2016ல் இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகை: ரூ.59185. இது பட்ஜெட்டில் 40%. பள்ளி மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் சீருடை, புத்தகம், புத்தகப்பை போன்ற சில பொருட்கள் மற்றும் முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் இலவசம் போன்ற அரசாங்கம் கட்டாயம் செய்யவேண்டிய சேவை தொடரவேண்டும்.
ஆனால், மிக்சி-கிரைண்டர்-பேன், ஆடு-மாடு, திருமண உதவி-தாலிக்குத் தங்கம், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்களை எல்லாம் கட்டாயம் தவிர்க்கமுடியும். 2011 முதல் 2016 வரையான காலகட்டத்தில் இந்த 4 திட்டங்களுக்கு மட்டும் செலவழிக்கப்பட்ட தொகை: ரூ.18749. சராசரியாக வருடத்திற்கு: 3750 கோடி. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து இதுபோன்ற இலவசங்கள் தரப்படுகிறது. வருங்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டால் ஆண்டிற்கு ரூ.3750 கோடி மிச்சமாகும்.

உணவு மற்றும் மின்சார மானியம்:
அனைவருக்கும் 20கிலோ அரிசி கொடுக்கும் உணவு மானியத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால் ரூ.1660 கோடி சேமிக்கலாம்.( கடந்த 5 ஆண்டுகளில் தரப்பட்ட உணவு மானியம்: 24900 கோடி; வருடத்திற்கு சராசரியாக: ரூ.4980 கோடி. போலி ரேசன் அட்டைகள், ஊழல்-முறைகேடுகளைத் தவிர்த்தால் இதில் சரிபாதி (50%) குறைக்கமுடியும். இருந்தபோதும் மூன்றில் ஒருபங்கை(33%) குறைப்பது என்ற அடிப்படையில் கணக்கிட்டாலே ஆண்டுக்கு ரூ.1660கோடி மிச்சம் பிடிக்கலாம்) .

உணவு மானியத்தில் கடைப்பிடித்த அதேமுறையில் கணக்கிட்டால் தற்போது செலவழிக்கப்படும் ரூ.22430 கோடி மானியத்தில்(2015-16) ரூ.1495 கோடி குறைக்கலாம். ( குறிப்பாக மின்சார திருட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தினால்)
மூன்றாவதாக உள்ள ”இலவசங்களை வினியோகிக்க,பரமாரிக்க ஆகும் செலவு” என்ற வகையானது அதிர்ச்சி தரும் ரகம். கடந்த 5 ஆண்டுகளில் இதற்கு ஆன செலவு: ரூ.42441 கோடி(சராசரியாக ஆண்டிற்கு 8488 கோடி). அத்தியாவசியமான இலவசங்களை மட்டும் தொடர்ந்துகொண்டு அனாவசியமான இலவசங்களைத் தவிர்த்தால்,அதற்கான செலவும் குறையும். அதை, வினியோகிக்கும் செலவும் குறையும். இதில், 50% குறைந்தாலே வருடத்திற்கு ரூ.4244 கோடி மிச்சமாகும். மேலும், இலவசங்களை தமிழகமெங்கும் வினியோகிக்கும் இத்திட்டத்தில் பெருத்த ஊழல் நடக்க வாய்ப்பிருக்கிறது.

நான்காவதாக உள்ள செலவினம். வாங்கிய கடனுக்குக் கட்டும் வட்டி.
பன்னாட்டு நிதி நிறுவனங்கள், உலக வங்கியிலிருந்து கடன் வாங்குவதை குறைத்துவிட்டு எல்.ஐ.சி, நபார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன்வாங்கும்போது வட்டி கணிசமாகக் குறையும். ஏற்கனவே வாங்கிய கடனில் முழுமையாக மாற்றம் செய்ய முடியாது. ஆகவே, இனிவரும் காலங்களிலாவது இதைச்செய்யவேண்டும். (2015-2016ல் ரூ.30,446 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.) இதைச் செய்வதால் ஆண்டுக்கு பலநூறு கோடிகள் மிச்சமாகும். தோராய மதிப்பீட்டின் அடிப்படையில் 2015-2016ம் ஆண்டு கட்டப்படவுள்ள ரூ.17856 கோடியில் , ஐந்து சதவீதம் குறைந்தால்கூட அதிலிருந்து ஆண்டிற்கு ரூ.893 கோடி மிச்சமாகும்.

மொத்தமாகப் பார்த்தால்,

1. உடனடியாக செய்ய வேண்டியது:

அனாவசியமான இலவசத்திட்டங்களை அறிவிக்காமல் இருக்கவேண்டும். மானியங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

இதனால்,வருடத்திற்கு மிச்சமாவது: ரூ. 11149 கோடி.

[அனாவசிய இலவசங்களை நிறுத்துவதன் மூலம்: ரூ. 3750 கோடி

இலவசங்களுக்கான வினியோகம், பராமரிப்பு செலவைக் குறைப்பதன் மூலம்: 4244 கோடி

உணவு மானிய ஓட்டைகளை அடைப்பதன் மூலம்: 1660 கோடி

மின்சார திருட்டைத் தடுத்து, சிக்கனத்தைக் கடைபிடித்தால்: ரூ.1495 கோடி ]

…………………………

இந்த அறிக்கையின் அடுத்த பகுதி [எதிர்காலத்தில் செய்யவேண்டியது, விற்பனை வரி…] போன்ற தகவல்கள் அடுத்த பதிவில் …. 

5 thoughts on “மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 2”

 1. குடிநீர் மூலம் பெரும் வருமானம் மட்டுமே 50ஆயிரம் கோடி வருமாம்.. அப்துல்கலாம் ஆலோசகர்.. கட்டுரை.. வாய்ப்பு இருந்தால் படியுங்கள்

  1. நண்பா, URL இருந்தால் அனுப்புங்கள். நிச்சயமாக படிக்கிறேன். என்னளவில் இவை எல்லாம் கணக்கு மட்டுமே. பல்வேறு வழி உள்ளது என்பது உண்மை.

 2. இத எல்லாம் படிக்க அருமையா தான் இருக்கு ஆனா நம்ப அரசியல் வாதிகள் தான் மொடா முழிங்கியா இருக்காங்கலே… நேர்மையான அரசியல் தலைவர்கள் இருந்தால் எது வேண்டுமானாலும் சாத்தியம் ஆகும்.

  என்னை பொருத்தவரை (பூரன)மது விலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று.. 2000 வருடங்களுக்கு மேலாக மனித இனம் (தமிழர்) குடித்து வருகிறார்கள். இதை ஒரே நாளில் நிருத்துவோம் என்பது பித்தலாட்டம்… இப்படி சொல்லுபவர்கள் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். மது விலக்கு என்பது டாஸ்மாகை மூடுவது மட்டுமா அல்லது தமிழ் நாட்டிலே மதுவே இருக்காதா.. அப்படியானால், நவீன பார், நச்சத்திர ஹொட்டல்களில் விற்ப்பது என்ன நடவடிக்கை எடுக்கப்டும்.

  1. முதலில் கடையின் நேரத்தை குறைக்க வேண்டும். குறைந்தது மத்தியம் 2 – இரவு 10 மணி ஆக்கலாம்.
  2. அடுத்து எண்ணிக்கையக் குறைக்க வேண்டும்.தோராயமாக) 5 கி.லோ மீட்டர்க்கு ஒரு கடை என்பது போல.
  3. 18 வயதுக்கு கீழ் இருப்பர்களுக்கு மது விற்பதும், வாங்குவது குற்றம். 18 வயது கீழ் உள்ள ஒருவர் மது அருந்தியிருந்தால் காவல் துறை அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம். பிற நாடுகளில் இது இருக்கிறது.
  4. எப்படி பட்ட மது விற்க்கப்படுகிறது(ஆல்கொஹால் லெவல்), அதன் தறம். அதனால் உன்டாகு நோய்கள், உடல் கோலாருகள்.
  5. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி உயிர் இழந்தால் காப்பீடு கிடையாது.
  (மேலும் பல இருக்கலாம். எனக்கு தெரிந்தவற்றை கூறினேன்.)

  மதுவால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் எங்கும் கிடையாது. உன்மையில் மதுவால் பதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமணையில் செலவாகும் கனக்கும் கிடையாது…

  1. நண்பா, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களுடன் உடன்படுகிறேன். பல்வேறு இயக்கங்களும், முன்னவர்களும் பல்வேறு திட்டங்களை முன் வைக்கிறார்கள்… அவை அனைத்தையும் நன்றாக ஆராய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை…. ஆனால் இது எல்லாம் தாண்டி நாம் செய்ய வேண்டிய பணி ஒன்று உள்ளது ….இந்தப் பதிவுகளின் இறுதிப் பதிவில் அது வரும் …படித்து விட்டு உங்கள் கருத்தை நிச்சயம் கூறுங்கள் …நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *