தாயுமானவள் நீ

உன்வயதில் எனக்கு
உலகம் மிக மிகப் புதிது
மனிதர்களின் பாவம்
அவர்களின் நினைவு,
வாழ்தல் எல்லாம் புதிது…

வசந்தமாய் வீசும்
உன் நிறைந்த புன்னகை
சிறு அரிசிப் பல் தெரியும்
உன் குறும்புச் சிரிப்பு…

கயல் நிலை மிகு கண்,
கவர்திளுக்கும் கருவிழி
நிலைகொள்ளா உன் விழி
உன் சிந்தனையின் வெளிப்பாடோ….

வார்த்தை விளையாட்டு கூட எளிது
உன் வாய் வார்த்தையின்
வெளிப்பாடு உணர்தல்
அதனினும் கடினம்…

மகிழ்ச்சி உன் உணர்வு மட்டுமா
வாழ்தலின் களிப்பு நினைவே அதுதான்
உணர்ச்சி சொல்தல் உன் நிறைவு
உணர்ந்து கொள்தல் எங்கள் உறவு…

குறும்பின் எல்லை சில நேரம்
உன்னுள் புகும்
என்னிலை தடுமாறும் நேரமது
புத்தியின் தடுமாற்றம் சித்தனும் சிந்தனையிழப்பான்

நானோ சாதாரண மனிதன்
கோபம் தவறுதான்,… உணர்த்தும்
நிலை வாழ்கையில் பல உண்டு
வாழ்ந்தும் கற்றும் உய்யும் வழியுண்டு….

என்கோபம் உன்மேலல்ல உன்செய்கையின் மேல்தான்
நிலைகொள்ளா என்செய்கையின் நிகழ்வு உன்மேல்
மனம் துடித்தும் ஒரு அடிபெற்றாயே
உன்னுடல் தாங்குமா என்மனம் ஆருமா…

வளர்ந்த பெரியவர்களின் கோபம்
நீள மட்டுமே செய்கிறது
மறந்து மன்னிக்கும் ஆற்றல்
வயது வளரும்பொழுது தேய்கிறது…

நீயோ வேறு, உண்மை தேடாமல்
உணர்வு சொல்லும் வயது
உன் கோபம் கொள்ளும் நேரம்
கண்ணிமைத்தலிலும் குறைவு..

மனநிலை மாறுகிறது
உன்புன்னகை என்கண் சேருகிறது
சிறுகை கொண்டு கழுத்து சேரும்
உன்னன்பு கொள்வேன் சிறுகனத்தில் …

மறந்து மன்னித்தல் தெய்வகுணம் என்பர்
தெய்வகுணமட்டுமல்ல தாயின்குணமும் தரணியில் அதுதான்
உன்னால் மட்டும் உடனே எப்படி
மறந்து மன்னிக்க முடிகிறது…

மறந்து மன்னித்தால் மட்டுமே
மகிழ்ச்சி நிலைக்கும்
என்னும் உண்மையின் வாழும்
சாட்சி நீதான்…

என் தாயின்குணம் கொண்டதால்
என் தாயுமானவள் நீ…..

2 thoughts on “தாயுமானவள் நீ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *