என் தனிமை

கருவறையின் நிறம்
கருமை
கருப்பு நிறமென்றாலும்
மா நிறமென்றாலும்
சிகப்பு நிறமென்றாலும்
எண்ணிற மென்றாலும்
உடல் வண்ணம் உருவாகும்
கூடு
ரத்தச் சகதியினுடன் உள்ள
கருப்புப் பெட்டியுள்….

கருமைக்கும் தனிமைக்கும்
பல ஒற்றுமை
ஒன்றின் தாக்கம்
மற்றொன்றின் மேல்….

ஒளியற்ற நிறம்
கருமை
ஒருவருமற்ற நிலைமை
தனிமை.

கருமையுள் பல நிறமுன்று
பகுத்துப் பாருங்கள்
தனிமையிலும் பல சிந்தனையுண்டு
தொகுத்துப் பாருங்கள்.

ஒற்றைக் கரும்புள்ளி வெள்ளை தளத்தில்
காண்பவன், சிலபேரால்
ஒதுக்கப்படலாம்
ஆனால் கரும்புள்ளி காணும் அவன்
சிலநேரங்களில் கவிஞனும் ஆகலாம்.

கரும்புள்ளி காண்பது தவறன்று
அந்தக்கரும்புள்ளி கண்டு கவிதையுரைப்பது
தீதுமன்று
கரும்புள்ளி கண்டவனுக்கு தனிமை
வாய்க்கலாம்
மீண்டும் அவன் ஓர் இடர்
சேரலாம்.

தனிமையின் உணர்வு ஒரு
புறாவின் துயில் போல….
கருமையின் விடிவும்
ஒரு காட்சிப் பிழைபோல …
சிறுநேரம் சிக்கல்
ஆனால்
பலநேரம் அதுவே ஆத்மாவின்
விடுதலை.

காட்சிப்பிழை கண்டு நிலை
பிறண்ட தருணமுண்டு
தனிமைநிழல் கண்டு என்னிலை
வலித்த நேரமுண்டு

பிழையும் நிழலும் கருமையின்
நீட்சி எனக் கண்டு கொண்ட
தருணமிங்கு
கருமையின் மறுவடிவாம் வெண்மையின்
உருகண்டு
தனிமையும் கருமையும்
ஒரு உருவத்தின் இருவடிவாம்
என உள்ளம் மகிழ்ந்த கணமுண்டு…

அண்டபேரண்டம் ஆதியின் ஒளி
கடந்து பயணித்தால்
இந்தப் பேரண்டம் சுமக்கும்
வெற்று வெளியும் கருப்பு மட்டுமே
அந்த பேரண்டம் சொல்லும்
இறுதி தனிமை மட்டுமே…

வண்ணம் பலகண்டு களித்த
காலம் பலவுண்டு
எண்ணம் சிதறி சிந்தித்த
நேரம் மிகுஉண்டு
வண்ணமும் எண்ணமும் சிதறும்
ஒரு வாழ்கையின்
நிலையும் அதுதான்….
வண்ணம் கரைத்து ஒரு
பொருள் கொள்ள ஆசைகொண்டேன்
எண்ணம் குவித்து ஒரு
நிலை கொள்ள உந்திச்சென்றேன்…

ஓடிச் சென்று உலகுரைகலாம்
இல்லை
தன்னுள் அமிழ்தும் உலகுரைகலாம்…
எது எப்படியோ
மற்றவர் குறை காணும் வாழ்கை
வேண்டாம்
என்னிலை உணர்ந்து நிற்கும் வரம்
வேண்டும்
தான் அறியாதது உண்மையில்லை என்றெண்ணும்
அறியாமை விலகவேண்டும்
கற்றது கையளவு என்பது வார்த்தையில் மட்டுமன்றி
வாழ்கையிலும் நிகழ்தல்வேண்டும்…

கருமை முழுதும் உணரும் காட்சி
கைவசமாதல் வேண்டும்
தனிமை அனைத்தும் வெல்லும் மாட்சி
என்வசமாதல் வேண்டும்
கருமை தனிமை இரண்டும் நன்று
என்று உணர்ந்து வாழ்தல்
அமிழ்தினும் இனிது…

தேடலின் தொடக்கம், தனிமையின்
இனிமை
மனஎண்ணத்தின் இறுதி, மாசற்ற
கருமை
தொடக்கமும் முடிவும் ஒன்றுதான்
அதுவே
அண்டத்தில் பிண்டமும்
பிண்டத்தில் அண்டமும்…
தனிமையின் தொடக்கம்
மனக்கருமையில் இறுதி…
இந்த வாழ்வின் வெற்றி
அதுவே இயற்கையின் செய்தி…
இந்தப் பயணம் நீண்டது
கைகவரக் காத்திருக்கிறேன்….

3 thoughts on “என் தனிமை”

  1. ” கருமைக்கும் தனிமைக்கும் பல ஒற்றுமை ஒன்றின் தாக்கம் மற்றொன்றின் மேல்” – அருமையான வரிகள்

  2. தனிமை வேறு தனித்திருத்தல் வேறு. மனம் எங்கு உள்ளது ? அது என்ன நிறம் என்று எப்படி அறிந்தீர்கள்.

    1. உணர்வை எழுதுவதே கடினம்… விவரித்தல் அதனினும் கடினம்… இக்கவிதை என் உணர்வு மட்டுமே ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *