அடையாளம் உடைத்து

நிலைபெற்று நிற்கும் சிலை போல
நிறைவான நிலை கொள்ளும் மனம் கொண்டேன்…
நிறைவான நிலை உனக்கில்லை
உன்கனவு நிலை கடந்துசெல், என்றனர் எம் மக்கள்
“நீ”…என்பதே….ஒரு “அடையாளம்” மட்டுமே….
வகுத்துச் சொன்னால் மட்டும் போதாதென
மீண்டும் மீண்டும் பகுத்தும் சொன்னனர்

அடையாளம் துறத்தல் எளிதென நினைத்தேன்
வலிதென உணர்ந்தேன்
மனதளவில் துறத்தல் எளிதாம்
துறத்தல் போல் நிற்றல் வலிதாம்
கடமையாய் துறந்தாலும்
துறத்தலின் பின் நின்றாலும்
வேடிக்கை பார்க்கும் கண்கள்
என்னை மீண்டும் “அடையாளம்” கொண்டனர்

“வேடிக்கை மனிதரை
நீயும் வேடிக்கை பார்…
வேண்டாத வார்த்தையை வெறுக்காமல் ஒதுக்கு”
பாரதி முதல் என் பக்கத்து வீட்டு பெரியவர் வரை
அனைவரும் அறிவுரை சொன்னனர் !!!
அறிவுரை உடன் நடக்க நான் முயன்றும் பார்த்தேன்
மீண்டும் மீண்டும் முயற்சி மட்டும் மிச்சம்
கஜினி முகமதுவை முயற்சிக்கு முன்மாதிரி
காட்டும் நண்பர்களே…என் முயற்சிக்குப் பின்
நீங்கள் என்னையும் “அடையாளம்” காட்டலாம்
அறிவுரை வழி நடக்காததால் மீண்டும்
எனக்கு ஒரு “அடையாளம்”…

என் நிறத்தில் ஒரு அடையாளம்
என் உடையில் ஒரு அடையாளம்
என் உணவுப்பழக்கத்தால் ஒரு அடையாளம்
என் சொல்வழக்கில் ஒரு அடையாளம்
என் வாகனமும் ஒரு அடையாளம்
என் கைபேசியும் ஒரு அடையாளம்
என் மீசையும் ஒரு அடையாளம்
என் வேலையும் ஒரு அடையாளம்
என் வீடிருக்கும் தெருவும் ஒரு அடையாளம்
என் சொந்தவூறும் ஒரு அடையாளம்
என் உடல்வாகும் ஒரு அடையாளம்
என் நண்பர்களும் ஒரு அடையாளம்
என் வாழ்க்கைமுறையும் ஒரு அடையாளம்
என் குடும்பமுமெனக்கொரு அடையாளம்
என் நெற்றிப்பொட்டினால் ஒரு அடையாளம்
என் மயிரின் நிறம் கூட ஒரு அடையாளம்

நீண்டிருக்கும் வரிசை இது
பாதி கூட பகிரவில்லை !!!
மிச்ச சொச்சம் உங்கள் சிந்தனைக்கு…
சாதி மத இன தேச
அடையாளம் மட்டும் அடையாளமா ?
அடையாளம் காணும் அணைத்து எண்ணங்களும்
ஒருவகையில்
ஒரு அடையாளம் தான்…

கரு உண்டாக இரு உயிர் வேண்டும்
கருவின் உயிர் ஆண் பெண் காண
பதினாறு வாரம் ஆகுமாம்
காத்திருக்க வேண்டாம் பதினாறு வாரம்
கருவுண்டான நாள் முதல்
கருவிலேயே அது சுமக்கும்
அடையாளம் அதிகம்
நாமறிவோம்
உண்மையின்றி பொய்யில்லை

வாழ்தலில் உண்டாம் மிகு மகிழ்ச்சி
வாழ்ந்த நினைவில் உண்டாம் மிகு உணர்ச்சி
வாழ்வின் வழி காண விளைவேன் நான்
வாழ்ந்தும் நிலை கொள்ள முயல்வேன் நான்
வாழ்வின் எல்லை காண முயல்வேன் நான்
அடையாளம் துடைக்கும் பணியும் உண்டாம் அதில்
உணர்வாலும் நிலையாலும்
மீண்டும் ஒரு அடையாளம்
“அடையாளம் துறக்க நினைப்பவன்”
என்பதே அந்த அடையாளம்….

4 thoughts on “அடையாளம் உடைத்து”

  1. எளிதுக்கு எதிர்ச்சொல் வலிதல்ல ……..அரிது . அடுத்தவர்கள் அடையாளப்படுத்துவதை சட்டை செய்யாமல் இருப்பதே அடையாளத்தை துறப்பதாகும்

    1. நன்றி நண்பா …நான் எளிதுக்கு எதிர்ச்சொல் தேடவில்லை …வலி தான் சொல்ல விளைந்தேன்

  2. வலிது அங்கு பொருத்தமாக இல்லை நண்பா. புத்தனுக்கு ஆசையை துறக்க வேண்டும் என்று ஆசை என்று யாரோ பகன்ற கருத்து உன் கவிதையில் மிளிர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *