சசிபெருமாள் ஐயா மரணமும் மதுவிலக்கும் – அரசியல் மட்டும் தான்

இந்தப் பதிவு நான் எழுத வேண்டாம் என நினைத்த பதிவு. கடந்த 2 ஆண்டு காலமாக பல்வேறு மது ஒழிப்புப் போராளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளேன். பல சமயங்களில் என்னால் ஆன சிறு சிறு உதவிகளையும் செய்துள்ளேன். மது ஒழிப்புப் போராளிகளின் மன ஓட்டங்களையும் களப் பணிகளையும் ஒரு நண்பன் என்கின்ற முறையில் மகிழ்வுடனும் முழு மனதுடனும் ஆதரித்துள்ளேன்.

_44505483_alcoholic203

இந்தப் பின்புலத்தில், மிக நிச்சயமாக “மதுவிலக்கு” அடுத்த வருட தேர்தல் அரசியல் களத்தின் மிகப்பெரிய காரணியாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சிற்சில அரசியல் கட்சிகளின் அறிக்கைகளிலும், மதுவுக்கு எதிரான போரட்ட களத்தில் உள்ளவர்களால் மிகப்பெரிதாகவும், ஊடகங்களில் ஓரளவேணும் பேசப்பட்ட “மதுவிலக்கு” மக்களின் மனதில் நீருபூத்த நெருப்பாக கழன்று கொண்டிருந்த நேரம். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தன் அறிக்கையின் மூலம் விவாதத்தை பெரிதாக ஊடகங்களில் தொடக்கி வைத்தார்.

அறிக்கையின் சாரம் இதுதான் “தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தால் , மதுவிலக்கை அமல்படுத்த “தீவிர நடவடிக்கை” எடுக்கப்படும்.” ….. மீண்டும் வாசித்துப் பாருங்கள்…. “தீவிர நடவடிக்கை” மட்டும்தான்…இந்த நடவடிக்கை எப்படி எடுக்கப்படும், கால அளவு என்ன, திட்டம் என்ன, எல்லா அரசியல் கட்சிகளும் பதவிக்கு வந்தபின் நிரந்தரமாகக் கூறும் “நிதிப் பற்றாக்குறை” எவ்வாறு கையாளப்படும் என்பன போன்ற மக்களின் அடிப்படைக் கேள்விகளுக்கு  பதில் இல்லாவிட்டாலும், ஒரு கொள்கை முடிவு போல இருந்த கருணாநிதி  அவர்களின் அறிவிப்பை வரவேற்பதிலும், இந்த அறிவிப்பு சார்ந்த தொடர் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையிலும் காத்திருந்த நேரம்…..இவரின் கருத்துக்கு, ஆதரவும் எதிர்ப்புமாக பல்வேறு கருத்துகள் இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றன.

மதுவிலக்கு யாரால் கொண்டுவரப்பட்டது….ஒரு சிறிய காலச் சக்கரம்…

  • 1967 க்கு முன் – தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், எம்.பக்தவத்சலம் வரை எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்யவது குறித்து சிந்திக்கக் கூடவில்லை. நிதிப் பற்றாக்குறை மிகுந்திருந்த காலம் அது.
  • 1967 – திமுக ஆட்சி – அண்ணா முதல்வர் – மதுவிலக்கு தொடர்ந்தது
  • 1971 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மதுவிலக்கு ரத்து (ஆகஸ்ட் மாதம்)
  • 1974 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மீண்டும் மதுவிலக்கு
  • 1983 – அதிமுக ஆட்சி – எம்.ஜி.ஆர் முதல்வர் – மதுவிலக்கு ரத்து – TASMAC
  • 1989 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மீண்டும் மதுவிலக்கு
  • 1990 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மதுவிலக்கு ரத்து
  • 1991 – அதிமுக ஆட்சி – ஜெயலலிதா முதல்வர் – மீண்டும் மதுவிலக்கு
  • 2001 – அதிமுக ஆட்சி – ஜெயலலிதா முதல்வர் – மதுவிலக்கு ரத்து
  • 2003 – அதிமுக ஆட்சி – ஜெயலலிதா முதல்வர் – அரசு நிறுவனமான டாஸ்மாக், நேரடி மது விற்பனை

கடந்த 15 ஆண்டுகள், மது விற்பனை இலக்கு வைத்து விற்கும் அளவுக்கு அரசின் கொள்கை வளர்த்த காலம் இது. 30,000 கோடி வரை அரசுக்கு மது வருமானம் தரத் தொடங்கிய நேரம்.

கருணாநிதி அவர்களின் கடந்த வார அறிக்கையின் பின் மீண்டும் அனைத்து கட்சிகளும் “மதுவிலக்கு” குறித்து உரத்தக் குரலில் விவாதிக்கத் தொடங்கின. மிக நிச்சயமாக இந்த விவாதங்கள் ஒரு தேர்தல் சூழலை மட்டும் முன்னிறுத்த ஆரம்பித்தது போன்ற தோற்றம். மதுவிலக்கு எவ்வாறு அமல் படுத்தப்படும், மது நோயாளிகள் எவ்வாறு குணப்படுத்தப் படுவார்கள், தொலைநோக்குத் திட்டங்கள் என்ன…. என்பன போன்ற கேள்விகளை விவாதிக்காமல் அனைவரும் தேர்தல் களம், தமிழக அரசுக்கு நெருக்கடி என்கின்ற நிலையில் மட்டும் நிற்பது வேதனைக்குரிய நிலை. மதுவிலக்கு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசாதது மட்டும் தான் பாக்கி, நிச்சயமாக ஜெயலலிதா அவர்கள் “மதுவிலக்கு” நிலை எடுக்க காலம் கனிந்துவிட்டது போன்ற தேர்தல் களத்தோற்றம் உள்ளது.

4

இந்தச் சூழலில் உச்சம் காந்தியவாதி சசி பெருமாள் அவர்களின் மரணம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு வகையான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஐயா சசி பெருமாள், கன்னியாகுமரி – மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது, திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பதிவை எழுதும் நேரம் வரை, சசிபெருமாள் ஐயா அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப் படவில்லை. உடலை வாங்க மறுத்து உறவினர்களும் மற்றவர்களும் பூரண மதுவிலக்கு கேட்டுப் போராடி வருகின்றனர். மேலும் பலர் செல் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் சசிபெருமாள் ஐயா மரணத்தை ஒட்டி தங்களின் அரசியல் நிலைகாண மறைவுக்கு அதிர்ச்சியும், வேதனையும்  தெரிவிக்கின்றன. உயிரிப்புக்கு காவல்துறையின் அஜாக்கிரதையே காரணம் என்கின்ற அறிக்கைகள் ஒருபுறம். உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மறுபுறம். தமிழகம் சார்ந்த பந்த் அழைப்பு…… பல்வேறு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் போராட்டமாக இது வலுப்பெருமா என்று என்போன்றோர் காத்திருக்கிறோம்.

சசிபெருமாள் ஐயாவின் பல்வேறு போரட்டங்களின் போது இந்தக் கட்சிகளும் ஊடகங்களும் அவரின் செயல்பாடு குறித்து இவ்வளவு விவாதிக்கவில்லை என்பது நாம் அறிந்த உண்மை. இன்று ஆதரிக்கும் பலரும் கடந்த காலத்தில் ஒரு சார்புக் கருத்து கூட கூறவில்லை என்பது திண்ணம்.

கொள்கைப் பிடிப்புடன் வாழ்வதுவும், கொள்கைக்காகப் போராடுவதுவும், கொள்கை சார்ந்த விவாதத்தில் பங்கெடுப்பதுவும், கொள்கைப் பரப்பு செய்து மக்கள் சக்தியைத் திரட்டுவதுவும் தாண்டி…..மரணித்துதான் கொள்கைகளை அடைய முடியும் என்கின்ற எண்ணம் உண்மையாவது போல் ஒரு உந்தல்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்….

சசிபெருமாள் ஐயாவின் ஆன்மா சாந்தியடையட்டும் ….
மதுவிலக்கு அரசு கொண்டு வரவேண்டியது என்கின்ற நிலையை விட, நாம் அதனை முற்றிலும் புறக்கணிப்போம் என்கின்ற நிலை மேலானது….

One thought on “சசிபெருமாள் ஐயா மரணமும் மதுவிலக்கும் – அரசியல் மட்டும் தான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *