கவிதை: ஒரு வெற்றி நிலை – சில நேரம் விற்பனைக்கும்

9614ae4dcef25d77a1ef981d30d775fa

மனமின்றி நான் தொடங்கிய
செயல்
மனம் மயக்கும் நெருங்கிய
பந்தமானது
இந்த உலகே ஒரு நிரந்தர
வாய்ப்புச் சுரங்கம்
வந்த வாய்ப்பை வகைப்படுத்தி
வசப்படுத்தினால் வானுயர வார்ப்பு காணலாம்
வாய்ப்பின் விளிநிலையாம் “வெற்றி”
மட்டும் சிலநேரங்களில்
உடையவனுக்குச் சொந்தமில்லை…

வெகுநேர சிந்தனை
சிந்தனையின் செயல்
செயலின் வலி
வலியின் முடிவு
முடிவின் வெற்றி
வெற்றியின் வாழ்க்கைச் சக்கரம்
சற்றே பெரிதுதான்…

வடித்த வெற்றியின் சாறு
இனிப்பு மட்டுமல்ல
சில நேரங்களில்
துவர்ப்பும் தான்
வெற்றி கசந்த வரலாறும்
நாம் அறிவோம் தானே…

கலைஞனுக்கு கைதட்டல் அவசியம்
அதுதான் அவனின் உயிர்முச்சு
மனிதனுக்கும் “பாராட்டு” பல ஊக்கம்தரும்
சில நேரங்களில் “பாராட்டு”
வெற்றியின் உயிர் மூச்சாகவும் உந்தும்…

வெளிச்சம் காணா
பல கதாநாயகர்கள் உண்டு
அவனியிலே
அந்தக் கதாநாயகர்கள் சொல்ல
பல வெற்றிக் கதைகளுண்டு
அவரவர் நெஞ்சினிலே
“பாராட்டி”ஒரு சொல் சொல்ல
சக மனிதனில்லை அவனருகினிலே
அந்த அருகாமையின் வார்த்தையின்றி
மலரத் துடிக்குது அந்த “வெற்றி” அங்கே…

பண்டமாற்று முறை நம்
பழவழக்கம்
இது வழக்கொழிந்து போயிற்று
என்போர் பலர்
இல்லை இது முழு
வழக்கமாயிற்று என்போர் சிலர்…

“வெற்றி” கொண்டாட்டத்தை
பண்டமாற்று முறை செய்தோரும் உண்டு
இந்தச் சமூகத்தில்
வெற்றி இன்றும் வெற்றியாய்
மட்டும் பார்க்கப் படுவதில்லை
வெற்றிபெற்றவர்களின் பின்புலமும்
சேர்த்துதான் மதிப்பிடப்படுகிறது
பாராட்டு வார்த்தை சொல்லக் கூட
பண்டமாற்று என்னவென்று யோசிப்போர்
சிலருண்டு…

சில வெற்றிகள் விற்பனைக்கும் உண்டு
பல வெற்றிகள் விற்பனைக்கு இல்லை
வெற்றியின் பாராட்டும் பண்டமாற்று ஆகலாம்
தவறில்லை….
பண்டமாற்று அன்பு மட்டுமென்றால்
அது தவறில்லை….

மனம் விட்டு பாராட்டுவோம்
நண்பர்களே
உங்கள் ஒரு வார்த்தை
சிலருக்கு வாழ்க்கையாக மாறலாம்….

One thought on “கவிதை: ஒரு வெற்றி நிலை – சில நேரம் விற்பனைக்கும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *