“அகிம்சை” தான் வழி – முன்னாள் ஆயுதப்போராளி

peace_war_by_joannyta

ஒரு மனிதனைப் பற்றி எழுதும் பொழுதும், பேசும் பொழுதும், செய்திகளைப் படிக்கும் பொழுதும், சக மனிதர்களின் கருத்துகளைக் கேட்கும்பொழுதும் நம் மனதில் அவரைப் பற்றிய பிம்பம் உண்டாகிறது. அந்தப் பிம்பம் நாம் அவரைப் பற்றிய கேட்ட மற்றும் சேகரித்த செய்திச் சாரங்களைப் பொருத்து சார்பு நிலையோ அல்லது எதிர் நிலையோ எடுக்கக் காரணம் ஆகிறது. இந்த பிம்பம் பல நேரங்களில், காலத்தின் கோலத்தில் உடைவதுவுமுண்டு. நம் நிலைப்பாட்டின் நேர் எதிர் கோட்டில் அவர்கள் செல்ல ஒரு சிறிய செய்தி போதும். இது போன்ற ஒரு “பிம்ப உடைப்பு” அனுபவம் எனக்கு மீண்டும் ஒருமுறை கடந்த வாரம் நிகழ்ந்தது.

இந்த அனுபவம் எனக்கு “கேணி” கூட்டதில் நடந்தது. கேணி  கூட்டம் குறித்து உங்களில் பலபேருக்கு தெரியும் என்றாலும், ஓர் சிறிய அறிமுகம். பத்திரிகையாளர் எழுத்தாளர் ஞாநி அவர்கள் மற்றும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இருவரும் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று நடத்தும் இலக்கிய மற்றும் கலைத் துறை சார்ந்தக் கூட்டம் “கேணி”. பல்வேறு இலக்கிய கலைத் துறை சார்ந்த ஆளுமைகள் இந்தக் கூட்டதில் கலந்து கொண்டு உரையாற்றுவர். “கேணி” கூட்டதில் ஆளுமைகளுடன் சக படைப்பாளிகள் மற்றும் ஆர்வலர்களின் கேள்வி-பதில் நிகழ்வு வெகு பிரபலம். “கேணி”  கூட்டம் பங்கேற்கும் ஆளுமைகளின் மனம் திறக்கும் இடமாகவும், உண்மைகளை நேரடியாக விளம்பும் களமாகவும் இருப்பதால் பல நேரங்களில் இந்தச் சந்திப்பு குறித்து பெரிய விவாதமோ அல்லது வலைப் பதிவோ கூட்டதின் வெளியே நடப்பதில்லை.

கடந்த வாரத்தின் கேணி விருந்தினர் ஷோபா சக்தி. தனது இளமையை விடுதலைப் புலியாக கழித்து, பின்னர் பிரான்ஸ் தேசத்தில் அடைக்கலம் புகுந்து, எழுத்தாளராக கட்டுரையாளராகப், பல்வேறு களங்களில் செயல்பாட்டாளர், இப்பொழுது நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் பல்முக ஆளுமை ஷோபா சக்தி. பிரான்சில் நாட்டில் நடந்த, உலகப் பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், ஷோபா சக்தி நடித்த, ‘தீபன்’ திரைப்படத்திற்கு ‘பால்மே டோர்’ விருது வழங்கப்பட்டது நம்மில் பலர் அறிந்த செய்தி. ஷோபா சக்தி அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது அரசியல் பார்வை பற்றியும், குறிப்பாக அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பு எதிர்ப்பு நிலைப் பாட்டினைப் பற்றி புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழீழ ஆதரவலர்களின் இடையை பல்வேறு எதிர் வினைகள் உண்டு.

11377234_811182918957803_6648872453097459145_n1

ஒரு தமிழின ஆதரவாளனாக எனக்கும் ஷோபா சக்தி அவர்களின் மீது ஒரு சார்பு நிலைப்பாடோ ஒரு ஒத்திசைவோ இருந்ததில்லை. அவரை ஒரு முன்னணி எழுத்தாளராகவும் கட்டுரையாளராகவும் நல்பார்வை கொண்ட எனக்கு அவர் அரசியல் நிலைப்பாடுகளிலும் கருத்துகளிலும் பெரிய ஈர்போ ஆதரவோ இருந்ததில்லை. கேணி கூட்டத்தில் இந்த பார்வை சிறிது தளர்ந்தது.

கருத்து சுதந்திரம் குறித்து தன் கருத்துகளைத் தெரிவித்து, இன்றைய தமிழ் இலக்கியச் சுழலில் கருத்து சுதந்திரம் படும் பாட்டைப் பற்றி பேசி தன்னுரையைத் தொடக்கினார் ஷோபா சக்தி. ராஜபக்சேவின் கைக்கூலி , வலதுசாரி இயக்கங்களின் ஆதரவாளன், தீபன் படத்தில் எவ்வாறு தேர்வானார், படத்தில் உள்ள அரசியல் கருத்துகள், இலங்கைத் தமிழ், தமிழ்நாடு மற்றும் வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் தமிழ் உச்சரிப்பு, இலங்கையில் உள்ள கடுமையான சாதிய அமைப்பு அதனால் ஈழப் போராட்டத்தில் ஏற்பட தாக்கம், கடந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டாக தன் செயல்பாடு, தமிழ் சினிமா குறிப்பாக மணிரத்தினம் மற்றும் கமல் அவர்களின் திரைப்படங்கள், தமிழில் சமகால இலக்கியச் சூழல், அம்பேத்கர் மற்றும் பெரியார் அவர்களின் கருத்துத் தாக்கம், ராஜீவ் காந்தியின் கொலை சார்ந்த நிகழ்வுகள் மற்றும் ஈழப் போராட்டத்தில் இந்தச் சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் எனப் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாகவும் அதிரடியாகவும் ஷோபா சக்தி தன் பாணியில் பதில் கூறினார்.

இந்த கலந்துரையாடல்கள் எல்லாம் தாண்டி ஷோபா சக்தி அவர்களின் இலங்கை ஆயுதப் போராட்டம் மற்றும் அகிம்சை வழி போரட்டங்களின் நிகழ்வுகள் குறித்தக் கருத்துகள் என்னைக் கவர்ந்தன. “நிலத்தை நன்றாக உழுது, விதை விதைத்து, விதை துளிர் விடும் நேரம் மீண்டும் நிலத்தை நன்றாக உழுது, மீண்டும் விதை விதைத்து எனச் செயல்படும் விவசாயி போல்” என்கின்ற உவமையை ஆயுதப் போராட்டதின் வெளிப்பாடக ஒப்பிட்டு பேசினார். அகிம்சை போராட்டம் தோல்வி அடைந்ததால் ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது என்கின்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக எதிர்த்துப் பேசினார். இலங்கையில் நடந்தது ஒரு முழுமையான அகிம்சை போராட்டம் அல்ல என்கின்ற கருத்தை முன்வைத்தார். இந்தியாவில் நடந்த அகிம்சை போராட்டதையும் இலங்கையில் நடந்த அகிம்சை போராட்டதையும் ஒப்பிட்டு பேசினார்.

அகிம்சை போரட்டத்தின் தாயகமாகவும், அகிம்சை போரட்டத்தின் பிதாவான காந்தியை தேசத் தந்தையாகவும் கொண்ட நம் இந்தியாவிலேயே, “அகிம்சை” வழியில் ஒரு தீர்வு அடையமுடியுமா என்கின்ற சந்தேகம் எள்ளவேனும் எல்லா இந்தியனின் மனதில் இருக்கும் இந்தக் கால கட்டத்தில் “அகிம்சை” ஒன்றே வழி என ஷோபா சக்தி அவர்களின் கருத்து வெளிப்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. “அகிம்சை” பேச்சு வார்த்தை ஒன்றுதான் ஈழ தமிழர்களின் தீர்வு, மற்றுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு நாங்கள் தயாராக இல்லை என்கின்ற நிலைப் பாடுகளை ஷோபா சக்தி விவரித்த பொழுது, அந்தக் கருத்துகள் ஈழத் தமிழர்களின் மன வெளிப்பாடாகக் கொள்ள என் மனம் உந்தியது.

“அகிம்சை ஒன்றுதான் வழி” என்ற வார்த்தைகளை ஒரு முன்னாள் ஆயுதப் போராளியின் வாய்ச்சொல்லாகக் கேட்ட பின், மீண்டும் ஒருமுறை “சத்திய சோதனை” புத்தகத்தை வாசிக்கத் தோன்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *