இணையச் சமநிலை – நேற்று இன்று நாளை

net_neutrality

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேசப்பட்ட இணையச் சமநிலை தொடர்பான இறுதி அறிக்கையை மத்திய தொலைத் தொடர்பு துறை அமைத்த ஆய்வுக் குழு நேற்று தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.

முழுமையான அறிக்கையைப் படிக்க: http://www.dot.gov.in/sites/default/files/u68/Net_Neutrality_Committee_report.pdf

இருபக்க ஆய்வுச்சுருக்கம் : http://www.dot.gov.in/sites/default/files/u68/Summary_Note.pdf

இதில் இணைய சமநிலையை காக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது போன்ற தோற்றம் உள்ளது.

இந்த அறிக்கை பற்றி பேசும் முன், இந்தியாவின் தொலைத் தொடர்பு சேவை பெறுவோரின் எண்ணிக்கையைப் பற்றிய சிறு தகவல்:

  • 997 மில்லியன் உபயோகிப்பாளர்கள் (சுமார் 99.7 கோடி பேர்)
  • 300 மில்லியன் இணைய சேவை உபயோகிப்பாளர்கள் (சுமார் 30 கோடி பேர்)
  • 512 kbps வேகம் தாண்டிய இனைய சேவை – 99.2 மில்லியன் உபயோகிப்பாளர்கள் (சுமார் 9.92 கோடி பேர் – 30% மட்டும்)

சுமார் 125 கோடி மக்கள் உள்ள இந்திய மக்கள் தொகையில் 25% மக்கள் மட்டுமே இணைய சேவை உபயோகிப்பாளர்கள். இந்த இணைய சேவை பயன்பாடு உலக அளவின் சராசரி உபயோகிப்பு சதவிகிதத்தில் மிகவும் குறைவு என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டினரின் வேவு என பல்வேறு காரண காரியங்கள் ஆராயப்படாலும் என்னளவில் இந்த பெரிய விவாதத்தை தொடக்கி வைத்தது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வருமான பாதிப்பு அல்லது வருமான பாதிப்பு எதிர்காலத்தில் வரும் என்பன போன்ற தோற்றம் மட்டும்தான். இந்த விவாதத்தில் தனி நபர்கள் சாராது முக்கியமான மூன்று முக்கியமான வாதிகள்:

  1. TSP – Telecom Service Providers (தொலைத் தொடர்பு தரும் நிறுவனங்கள்)
  2. ISP – Internet Service Providers (இணையம் சார்ந்த தொடர்பு தரும் நிறுவனங்கள்)
  3. OTT – Over the top applications services (இணையம் சார்ந்த பயன்பாட்டு மென்பொருட்கள் நிறுவும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள்)

இன்றுவரை சுமார் 7,50,000 கோடி ரூபாய் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செயப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் சுமார் 5,00,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டங்கள் உள்ளன. OTT சார்ந்த குரல் மற்றும் நேர் ஒளி சார்ந்த மென்பொருட்களின் பயன்பாட்டால் இந்த பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எதிர்பார்க்கப் படும் வருவாய் பாதிக்கும் என்பது TSP மற்றும் ISP களின் குற்றச்சாட்டு. சுமார் 1% குரல் வழி தொடர்பு OTT மூலம் நடந்தால் சுமார் 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என TSP/ISP நிறுவனங்கள் தெரிவிகின்றன. ஒரு சாமானியனாய் யோசித்துப் பாருங்கள் TSP/ISP நிறுவனங்கள் லாபம் எவ்வளவு என்று. சிறிய வருமான இழப்பு ஏற்படலாம், ஆனால் கண்டிப்பாக தொழில் தகரும் அளவுக்கு எதுவும் நிகழ்ந்து விடாது. வியாபாரம் என்பது லாபத்தின் அடிப்படையில் தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நீதி நேர்மை சார்ந்த அறம் சார்ந்த லாபம் தான் செய்ய வேண்டும் தவிர வேறு மீறிய லாப நோக்கு தேவையில்லை.

இந்த பெரிய விவாதத்தில் BSNL எந்த அளவுக்கு பங்குபெற்றது என்பது தெரியவில்லை. இந்திய அரசு நிறுவனமான BSNL நிறுவிய மிகப் பெரிய தொடர்புப் பாதைகளைத் தான் தனியார் நிறுவனங்கள் பல இடங்களில் உபயோகப் படுத்துகின்றன என்பது கூடுதல் தகவல். இந்த இந்திய அரசு நிறுவனத்தின் பெரிய முதலீடுகள் நம் வரிப்பணம் தான் என்பது நான் சொல்லத் தேவையில்லை.

அனைத்து இந்தியர்களுக்கும் இணையம், தரமான இணையச் சூழல், ஏற்றத் தாழ்வு இல்லாத சேவை, சுழி வருமான இணையச் சேவை, நாட்டின் பாதுகப்பு, கருத்துச் சுதந்திரம் எனப் பல்வேறு தகவல்களுடன் இணையச் சமநிலை என்கின்ற கருத்தை இந்த அறிக்கை முன் வைக்கிறது. பாராட்ட வேண்டும் என்கின்ற மனம் வரும் பொழுது ஒரு சிறிய இடர்பாடு. உள்நாட்டு குரல் வழி தொடர்புச் சேவையில் சில இடர்பாடான விளக்கங்களை வழியுறுத்துகிறது. TSP/ISP மற்றும் OTT இருவருக்கும் விலை சார்ந்த கட்டுப்பாடுகள் உள்நாட்டு குரல் வழி தொடர்புச் சேவையில் தேவை என்பதே அது. மிக நீண்ட பல்வேறு தகவல்கள் கொண்ட அறிக்கையின் சாரம்சத்தை ஒரு சிறிய கணக்கின் மூலம் விளக்க முடியும். ஒரு ஒரு நிமிட குரல் அழைப்பில் TSP/ISP வருமானம் 36 பைசா. இதே ஒரு நிமிட குரல் அழைப்பு OTT சார்ந்த மென்பொருள் அழைப்பு என்றால், 256 kbps அளவிலான இணையச் சேவையில் TSP/ISP வருமானம் 6 பைசா மட்டுமே. இந்த 500% வருமான இழப்பு தான் TSP/ISP களின் பெரிய சவால்.

இன்று இல்லாவிட்டாலும் விரைவில் குறைந்த விலையில் தரமான சேவையை அனைத்து மக்களுக்கும் சென்று சேர்க்க வேண்டிய கடமை அரசுக்கும், அரசு நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு சார்ந்து செயல்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளது. அது அல்லாது சிறிய லாப இழப்பைச் சரிகட்ட பெரிய வளர்ச்சியை தடை செய்தல் நல்லதல்ல. 25% சதவிகித இந்தியர்களை மட்டுமே சென்று சேர்ந்த இணையச் சேவையை 100% இந்தியர்களுக்கும் சென்று சேர்க்கும் வழிவகைகளை ஆராய்ந்து பணியற்றுவத்தின் மூலம் பெரிய தொழில் நுட்பப் புரட்சியுடன் கூடிய மிகபெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டுவரமுடியும்.

3G சேவை கட்டணம் பெற்றுக் கொண்டு 2G, EDGE சேவை தந்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் பற்றி ஏதாவது கருத்து சொல்லியிருப்பார்களா என அறிக்கை முழுவதும் தேடிப் பார்த்தேன், “ஏமாற்றமே” மிச்சம்.

“நேற்றும்” “இன்றும்” நாம் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் இணையப் பயன்பாட்டிலும் வளர்ந்த நாடுகளை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில் நுட்பத்துடன் தகவல் தொழில் நுட்பத்தில் மிக விரைவாக மாறிவரும் 3.5G  மற்றும் 4G சார்ந்த தொழில் நுட்பத்தில் செயலாற்றுவதில் தான் நாட்டின் “நாளைய” முன்னேற்றம் அடங்கியுள்ளது. சிறு சிறு தடங்கலும் மிகப் பெரிய வளர்ச்சிப் பாதையை வழிமறிக்கும் என்பதில் நாம் கவனமுடன் செயலாற்ற வேண்டிய நேரமிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *