பாபநாசம் – பாபமா இது? – விமர்சனம்

papanasam poster

மலையாளப் படத்தின் மறுஉருவாக்கம் என்பது படம் பார்க்கும் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்து போயிருந்தது. மோகன்லால், மீனா என எல்லா கதாபாத்திரங்களின் பெயரோ அல்லது முகமோ பெருவாரியான மக்களுக்குத் தெரிந்திருந்தது. இது எல்லாம் தாண்டி வெற்றி பெறவேண்டிய கட்டாயம் கமலுக்கும் அவரது அணிக்கும் இருந்தது. இவ்வகையில் கமலுக்கு இந்தப்படம் வெற்றிதான். மலையாளப் படம் பார்த்த நண்பர்கள் கூட கமலின் நடிப்பின் உச்சத்தையும் தமிழ் ரசிகன் சார்ந்த நிலையையும் பாராட்டினார்கள்.

ஜார்ஜ் குட்டியும் சுயம்புலிங்கமும் வேறு வேறு என்பது சில காட்சிகளில் கமலால் ஆணித் தரமாக நிருபிக்கப் பட்டது. வட்டார மொழி வழக்கு படத்திற்கு பெரும் பலம். அம்மை, எல, பரக்காவெட்டி, கோட்டி, சொல்லுதாகளடே, கேட்டுகோங்க, கண்டிசன் என பல்வேறு திருநெல்வேலி மண் சார்ந்த வார்த்தைகளை கேட்கும் பொழுது ஒரு திருநெல்வேலிக்காரனாக எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ஜெயமோகன் மற்றும் சுகா அண்ணனின் உழைப்பையும், கமல் அவர்களின் ஒத்துழைப்பையும் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

ஆனால் சற்றே நீளமான படம். 3 மணி நேரம் ஓடுகிறது. திரைக்கதை சுவாரசியமாக இருந்தாலும் இந்த நீண்ட ஓட்டம் ஒரு அயர்ச்சியைத் தருகிறது. சில காட்சிகள் முன்னரே கணிக்கும் வண்ணமும் இருந்தது. மிகப்பெரும் நடிகர்களாகவும், கதாப்பாத்திர வெற்றியாளர்களாகவும் இருந்த/இருக்கும் சார்லி, இளவரசு, பாஸ்கர் போன்றோருக்கு கொடுக்கப் பட்டிருந்த காட்சியும் நீட்சியும் மிகக் குறைவு என்பது சற்றே எனக்கு வருத்தம் தான்.

ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியா இருவரும் கமல் மற்றும் ரஜினி என்ற மாபெரும் கதாநாயகர்களின் 80இன் திரைப்பட வரலாற்றின் மிகப் பெரிய வெற்றி நாயகிகள். இந்த இடத்தை தன் நடிப்பின் வழியாக சிலகாலம் 90களில் தக்கவைத்துக் கொண்டிருந்தவர் கௌதமி. ஆனால் பாபநாசம் ஒரு சாதாரண மறுபிரவேசம் தான். கௌதமியின் நடிப்பு  அவ்வளவாக ஒட்டவில்லை. கலாபவன் மணி தனக்கு கொடுக்கப் பட்டுள்ள சிறிய இடத்தை பெரிதாக நிறைவு செய்துள்ளார். பெருமாள் போலீசுக்கும் சுயம்பு சித்தப்பாவிற்கும் ஏன் இந்த முன்விரோதம் என்பது இன்னும் சற்று அழுத்தமான காட்சிகளின் வழியாகக் காட்டியிருக்கலாம் [ஏற்கனவே 3 மணி நேரம் …இது வேறயா….நீங்க சொல்றது கேட்குது….:) ].

மிக அழகான இடங்கள், அந்த அழகான வீடு, பசுமையான காட்சிகள், குளம், ஆறு, மலை எனப் பல இடங்களில் ஒளிப்பதிவாளரின் திறமைக்கு ஒரு “சபாஷ்”. நல்ல இரண்டு பாடல்களில் கவரும் இசை அமைப்பாளர், பின் இசையில் மற்றும் காட்சி இசையில் சோபிக்கவில்லை. பல இடங்களில் மீண்டும் கேட்ட நினைவே தோன்றுகிறது, இன்னும் சற்றே மேம்படுத்தி இருக்கலாம். சில காட்சித் தொடர்புகள் விட்டுப் போயிருந்தாலும் திரைக்கதை நகர்வு அந்தக் குறையினை மறைக்கிறது.

கமல் அவர்களின் நடிப்பு பற்றி சொல்வே வேண்டாம். சுயம்புவாக வாழ்ந்திருக்கிறார். வேணும்னு விட்டாங்கலானு தெரியல, ஆனா டை அடித்த சாயல் மீசையில் பளிச்சென பல இடங்களில் தெரிகிறது. அது கதாப்பாத்திரத்திற்கும் பொருந்துகிறது. சுயம்பு “நாத்திகரா” என்ற எண்ணம், காட்சிகளில் கறுப்புச் சட்டையின் மூலம் தொக்கி நின்றாலும், கோவிலில் சூழ்நிலையின் காரணமாக ஒரு நாள் முழுதும் அமரும் பொழுது ரசிகன் கேள்வியை மறந்து படத்தில் ஒன்றிவிடுகிறான். ஒரு சராசரி 45 வயது மனிதனின் வாழ்க்கையை அருமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் கமல். உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் சொன்ன கமலை விட சுயம்பு கமல் எனக்கு திரையில் அருமையாகத் தோன்றியது. அவரது வயது ஒத்தக் கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது நடிகர்கள் மிளிர்கிறார்கள் என்பது நீருபிக்கப்பட்டது போல் தோன்றியது.

அந்த இரண்டு குழந்தைகள், IPS அதிகரி மற்றும் அவரது கணவர் என வேறு சிலரின் நடிப்பும் அருமை. கதையின் கனத்தையும் காட்சிகளின் உணர்வுகளையும் அழகாகச் செய்திருந்தனர். டெல்லி கணேஷ் மாமனார் தன் சிறிய வட்டத்தை சிறப்பாக நிறைத்துள்ளார்.

என்னப்பா…விமர்சனம்னு சொல்ற….கதைய விட்டுட்டு எல்லாத்தையும் பத்தி எழுதுகிட்டேடடடடடடடட இருகியடே…அப்படினு நீங்க சொல்றது காதுல விலுது….

ஒரு கமல் அபிமானியாக இந்தப் படம் நன்றாக இருந்தது எனச் சொல்ல விரும்பினாலும் எனக்கு கதையின் முடிச்சும் அதை அவிழ்த்த விதமும் திருப்தியில்லை. ஒரு எதிர்மறையான எண்ணத்தை தான் கதையும் கதையின் கருவும் படம் பார்பவர்களுக்குச் செலுத்தி இருந்தது. இந்தப் படத்தை பார்க்கும் ஒரு சாமானியன் இனி தன் மகள்களை ஒரு சுற்றுலா அனுப்புவதற்கு முன், இது நாள் வரை யோசித்ததற்கு மேல் ஒரு நிமிடமேனும் அதிகமாக யோசிப்பர். காவல் துறை மேல் அதிகமான பயம் கொண்ட நம் சமூகம் இன்னும் மேலும் அந்தக் கருத்தை பதியமிடும். கலாபவன் மணி குடும்பத்தை அறைக்குள் தாக்கும் பொழுது என்னுடன் படம் பார்த்த என் 5 வயது மகள் முகத்தை என்னுள் புதைத்ததையும், அவள் உடம்பு நடுங்கியதையும், போலீஸ்சுனா எல்லோரையும் அடிப்பாங்க என சொன்னதும் இந்தப் படத்தின் பெரும் பின்னடைவு எனக் கருதுகிறேன்.

கமல் போன்ற முற்போக்குச் சிந்தனை உள்ள கலைஞன் இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கங்களை மிகப் பெரிய வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள விதம் ஒரு பெரிய பெண்ணடிமைச் சிந்தனையை இந்தச் சமூகத்தில் விதைக்கும் அபாயம் உள்ளது. நன்றாக வளர்க்கப்படும் குழந்தைகள் இந்தச் சமூகத்தின் சொத்தாக மாறுவர் என்ற செய்தி இந்தப் படத்தில் கமலின் குழந்தைப் பாத்திரங்களின் மூலம் சொல்லப்படுகிறது. “பொய் சொல்லக் கூடாதுன்னு வளர்த்த நான், என் பிள்ளைகளுக்கு இப்படிப்  பொய் சொல்ல வச்சிட்டனே” அப்படின்னு கமல் சொன்ன வசனம் எவ்வளவு பேருக்கு போயி சேரும்னு தெரியல. ஆனால் இது எல்லாம் தாண்டி ரசிகனுக்கும், படம் பார்க்க வந்த நபர்களுக்கும் இந்தப் படம் சொன்ன செய்தி சரியா? என்கின்ற கேள்விக்கு என்னிடம் ஒரு மகிழ்வான நிறைவான பதில் இல்லை.

4 thoughts on “பாபநாசம் – பாபமா இது? – விமர்சனம்”

 1. கணபதி தங்களின் விமர்சனம் மிகவும் அருமை
  சினிமா ஒரு பொழுதுபோக்கு
  என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இப்படம் மகவும் அருமையே
  ஆனால் நடைமுறை என்று பார்த்தால் , மிகைப்படுத்த பட்ட காட்சிகள், பொய் உரைக்க கூடாது என்று வளர்த்த குழந்தைகளை பொய்யுரைக்க வைத்தது,பெருமாள் என்ற போலீஸ் அதிகாரியின் சுயம்பு குடும்பத்தை மிகவும் வன்முறையாக விசாரித்தல், கைபேசியில் ஆபாசமாக படம் எடுத்ததற்காக மரணதண்டனை என்பது கொஞ்சம் அதிகமே, மற்ற அனைவரின் நடிப்பும் அருமையே கௌதமியின் நடிப்பு மனதில் ஒட்டவில்லை
  மொத்ததில் பாபநாசம் சர்வநாசம் இல்லை
  ,

 2. படத்தைத் தாண்டி சில முக்கிய விவாதங்கள் இந்தக் கதையில் இருப்பதை உணர்ந்தே இந்திய மொழிகளில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

  மைய இழையாக படத்தின் கதாப்பாத்திர கனத்தைத் தான் இந்த நட்சத்திரங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணடிமைச் சிந்தனையை விதைப்பது, காவல்த்துறை பற்றிய வெளிப்படுத்தல் எல்லாம் திரையைத் தாண்டிய பார்வைகள் தான். சராசரி ரசிகனுக்கு அதுதேவையாகக்கூட இல்லாமலிருக்கலாம். நல்ல பார்வை உங்களுடையது. வாழ்த்துகள். 🙂

 3. எனக்கும் திரைக்கதையில், மற்றும் கருத்துகளில் சில நெருடல்கள். ஐஏஸ் நடிப்பு அருமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *