நரேந்திர மோடி Vs லலித் மோடி…வெற்றியும் தோல்வியும்

NaMo Vs LaMo

ரொம்ப எளிதான அறிமுகம்…. இந்திய கிரிக்கெட் குழுமத்தின் பாதையை T20 ரூபத்தில் மாற்றியவர். பல வெற்றிகளை வாழ்கையில் கொண்டவர். அதிகார பலத்திலும், அதிகார வர்க்கத்தின் தொடர்பிலும் தன்னை முன்கொண்டவர். வெற்றியின் குறியீடாக பல தரப்பட்ட மனிதர்களால் கொண்டாடப்பட்டவர். காலம் மாறியது.காட்சிகளும் மாறியது. அதிகாரமும் பதவியும் பறிபோயின. பல சிக்கலான வழக்குகளில் குற்றவாளியாக இணைக்கப்பட்டு, தேடப்படுபவர். வெளிநாட்டில் உயிருக்கு பாதுகாப்பு கருதி வாழ்ந்து கொண்டிருப்பவர்…. “லலித் மோடி”.

தற்போது லண்டனில் வசித்து வரும் லலித் மோடிக்கு விசா வழங்க பரிந்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லலித் மோடியின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . சிகிச்சை பெறுவதற்காக போர்ச்சுகலில் தங்கியிருக்கும் தன் மனைவியை சென்று பார்க்க அளிக்க லலித் மோடி முயன்றுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியேறுவதில் சில சிக்கல். இங்கிலாந்தில் இருந்து வெளியேற உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை லலித் மோடி உதவி கேட்டுள்ளார். சுஷ்மா அவர்கள் இந்த அனுமதி சார்ந்து இங்கிலாந்து எம்.பி. கீத்து வெய்சுடன் பேசியுள்ளார். இந்த கோரிக்கையின் போது,
“லலித் மோடி இங்கிலாந்தில் இருந்து வெளியேற இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது” எஎன்று கீத் வெய்சிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. குற்றம் சாற்றப்பட்டு, தேடப்பட்டு (??) வரும் ஒருவருக்கு அமைச்சர் இவ்வாறு உதவலாமா என இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், ஜனதா தளம், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகளும் சுஷ்மாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன, கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டன. மிகச் சுலபமாக எதிர் கட்சிகள் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தன. இங்கே நான் எல்லாக் கேள்விகளையும் எழுதப் போவதில்லை. முத்தாய்ப்பாக ஒரே ஒரு குறிப்பு: ““லலித் மோடியும், மோடி என்பதனால் இது நடந்து உள்ளது. எனவே இந்திய அரசு அவருக்கு உதவிசெய்து உள்ளது. நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன்” என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி ஒரு சிறந்த கருத்தை உதிர்த்திருக்கிறார். இதில் கூட சாதி பார்த்த நம் அரசியல்வாதிகள் புகழ் படவே இந்த பதிவுக்கு “நரேந்திர மோடி Vs லலித் மோடி” எனப் பெயரிட்டேன்.

மனிதாபிமான அடிப்படையில் செயப்பட்ட உதவி. இதில் சுஷ்மா மேல் எந்தத் தவறும் இல்லை எனக் அருண் ஜெட்லி மற்றும் ராஜ்நாத் சிங் இருவரும் அறிக்கை விட்டுள்ளனர். லலித் மோடியின் வழக்குரைஞராக சுஷ்மாவின் மகள் இருந்ததற்கும் சுஷ்மா பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் ஆகியோருடன் மோடிக்காகப் பரிந்துரைத்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நம்புவோம். யாரு செய்தது சரி, யாரு செய்தது தவறுன்னு பல குழப்பம். வழக்கம் போல் தலைப்பு செய்தி. ஆங்கில தமிழ் ஊடகங்களில் விவாதங்கள். 1-2 நாள் காங்கிரஸ் ஆட்கள் போட்டு தாக்கு தாக்குனு தாக்குறாங்க.

இந்த குழப்பம் பத்தாதுன்னு லலித் மோடி நச்சுனு ஒரு அணுகுண்டு போட்டார். தனது டுவிட்டர் பக்கத்தில், ”இந்த விவகாரம் தொடர்பாக எனது தரப்பு கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன். அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை, மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பார்க்க வேண்டும். சுஷ்மா ஸ்வராஜை பதவி விலகுமாறு கேட்கிறார்கள். ஆனால், அந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பலர் பதவி விலக நேரிடும்” என்று ஒரு போடு போட்டார்.

வழக்கம் போல் ஜனநாயகத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்ட இந்தியன்…..இது அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருகின்றான். நீங்க எல்லாம் எங்களையும் இந்த நாட்டையும் கொஞ்சமாவது பார்த்துப்பின்கனு நினச்சிக்கிட்டு இருக்கோம்…..என்று ஒரு பெருமூச்சுடன், கூட்டம்  அதிகம் உள்ள பேருந்தில், அன்றைய தினத்தில் புதுப்பிக்க வேண்டிய  பயண அட்டையுடன், கையில் உள்ள மதியச் சாப்பாட்டு பையை ஒருகையில் பிடித்துக்கொண்டு, கசங்கிய சட்டையுடன் வேலை பார்க்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருகிறான்.

இந்த நாட்டின் பொறுப்பை கையில் கொண்டிருக்கும் நரேந்திர மோடி இப்பொழுது வரை ஒன்றும் சொல்லவில்லை.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.
-திருக்குறள்

பரிமேலழகர் உரை:
அறன் இழுக்காது = தனக்கு ஓதிய அறத்தின் வழுவாது ஒழுகி;
அல்லவை நீக்கி = அறன் அல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து;
மறன் இழுக்கா மானம் உடையது அரசு = வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினை உடையான் அரசன்.

நீங்க ரொம்ப உத்தமமா, நீங்க பண்ணாததையா நாங்க பண்றோம்…என பூசி மொழுகாமல்…அறம் சார்த்து செயல் புரிவார்களா?…. எங்கள் நாட்டின் தேர்தெடுக்கப்பட்ட அரசனின் செயல் வினைக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்தியனாய் நானும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *